பெண் என்றால் ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் செய்துகொண்டு, கணவர் உண்டு, குழந்தைகள் உண்டு என வாழ வேண்டும், என்றுதான் இந்த உலகம் நினைக்கிறது. ஆனால், நடைமுறை உண்மை வேறு ஒன்றாக உள்ளதாம். ஆம். இதுபற்றி அமெரிக்கன் டைம் யூஸ் சர்வே விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், திருமணமான பெண்களை விட, தனிமையில் வசிக்கும் சிங்கிள் பெண்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணமான, கணவனிடம் இருந்து பிரிந்து வாழும், கணவனை இழந்து வாடும், விவாகரத்து பெற்ற பெண்களை விட, திருமணமே செய்துகொள்ளாமல் சிங்கிளாக வாழும் பெண்கள், சிங்கம் போல கெத்தாக, அதிக மன அமைதி, மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும், அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காரணம், திருமணமான பின், பெண்களுக்கு உடல்நலம் சார்ந்த பிரச்னைகள், கணவன், குழந்தைகளை பராமரிக்க வேண்டிய கவலை போன்றவை வரிசை கட்டி நிற்கும். ஆனால், ஆண்களுக்கோ, வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்து மனைவியிடம் கொடுத்தால் போதும் என்ற அளவில்தான் திருமண வாழ்க்கை முறை இருக்கிறது. இதனால், ஆண்களை விட பெண்களுக்கே அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.
இதுதொடர்பாக, ஏற்கனவே, பால் டோலன் என்ற லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில், திருமணம் என்பதன் மூலமாக ஆண்கள்தான் அதிக பலன் பெறுகின்றனர் என்றும், பெண்கள் அதீத கவலையை சந்திக்க நேரிடுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை உறுதிப்படுத்துவது போல, மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உள்ளன என்றால் அது மிகையல்ல.