கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவது எப்போது? பரபரப்பு ரிப்போர்ட்!

கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வருவது எப்போது? பரபரப்பு ரிப்போர்ட்!

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று தற்போது உலகமெங்கும் பரவி தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்த வைரஸ் தொற்றுலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் மருந்தை எப்பொழுது விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பார்கள் எனவும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உலக அளவில் மொத்தம் 35 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் நான்கு நிறுவனங்கள் தங்களுடைய சோதனையை விலங்குகள் இடத்தில் துவங்கியுள்ளனர். மேலும் இந்த நிறுவனங்கள் கூடிய விரைவில் மனிதர்களிடமும் இந்த மருந்தை செலுத்தி சோதனை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் இந்த மருந்து பரிசோதனை செய்த பின்பு, நடைமுறைக்கு வருவதற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த கால அவகாசம் இந்த மருந்தின் செயல்பாட்டை பற்றி துல்லியமாக அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவி புரியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அடையாளம் கண்டு போராட உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதன் மூலம் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட தடுப்பூசிகள் உதவுகின்றன. முதலில் உடலில் உள்ள நோய்க்கிருமியைப் பற்றிய போதுமான தகவல்களை அறிந்துகொண்டு நோயை ஏற்படுத்தாமல், அதை எதிர்த்துப் போராட இந்த தடுப்பூசி பயன்படுகிறது. அதேபோல் இந்த தடுப்பு மருந்து இதே வகையான நோய் கிருமியின் எதிர்கால படையெடுப்பில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

பொதுவாகவே ஒரு தடுப்பூசி கண்டுபிடித்து அது மனிதர்களின் உடலுக்கு ஏற்றது என்பதை நிரூபித்து பயன் படுத்துவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் எடுத்து கொள்ளப்படும். இத்தனை ஆண்டுகள் ஆகும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்து சுமார் பதினெட்டு மாதங்களிலேயே கண்டுபிடிக்கப்படும் என விஞ்ஞானிகள் கூறுவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் அதி விரைவில் கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்து என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பாஸ்டனில் இருக்கும் பயோ டெக் நிறுவனமான மாடர்னா தெராபியூடிக்ஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த மற்றுமொரு நிறுவனம் ஏற்கனவே பரிசோதனையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில், மேரிலேண்ட்டில் இருக்கும் நோவாக்ஸ் நிறுவனமும் விரைவில் தன்னுடைய பரிசோதனையை துவங்க உள்ளது.

 தேசிய அலர்ஜி, தொற்று நோய் நிறுவனத்துடன் இணைந்து மாடர்னா தெராபியூடிக்ஸ் நிறுவனம் வெறும் 42 நாட்களில் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்தை கண்டுபிடித்து அதை மனித உடலுக்குள் செலுத்தி சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 43 வயதான ஜெனிபர் ஹல்லர் முதலில் தேர்வு செய்யப்பட்டார். 

 

அவருக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பு ஊசி மருந்து செலுத்தப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த மாதிரி மேலும் மூவருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த சோதனை முடிவுக்கு பின்பு, பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் என்பது முன்பே நம்முடைய மனிதகுலத்தை தொடர்ந்து தாக்கி வந்த ஒன்று ஆகும். இதற்கு முன்பாக இதே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் வைரஸ் சீனாவில் கடந்த 2002-2004 ஆம் ஆண்டில் தாக்கியது. பின்னர் கடந்த 2012ல் சவுதி அரேபியாவில் மெர்ஸ் வைரஸ் மக்களை பாதித்தது. இவைகளிலிருந்து உருவானதுதான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட் – 19.

துரதிஷ்டவசமாக சார்ஸ், மெர்ஸ் ஆகிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஆனால் கோவிட்19 வைரஸுக்கு உடனடியாக மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பலரும் தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வைரசுக்கு எதிராக கண்டறியப்படும் மருந்தை நான்கு கட்டங்களாக பரிசோதனை செய்வர்.

அதற்கான முதல் கட்டத்தில் மருந்தை , நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள மனிதர்கள் சிலருக்கு செலுத்தப்படும். பின்னர் அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கூர்ந்து கவனிப்பவர். இதற்கான கால அவகாசம் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ஆகும். ஆனால் சாதாரணமாக மற்ற தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு ஒன்று முதல் இரண்டு வருடங்கள் ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு அடுத்து முதல் கட்ட சோதனை வெற்றியடைந்தால் இந்த மருந்து இரண்டாம் கட்டத்தை அடையும். இந்த இரண்டாம் கட்ட சோதனையில், பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படும். இதன் மூலம் இந்த மருந்தின் வீரியத்தை ஆராய்ச்சியாளர்கள் உற்றுக் கவனிப்பர். இதற்கு குறைந்தபட்சம் 8 மாத காலங்கள் ஆகும் என கூறப்படுகிறது. ஆனால் மற்ற தடுப்பு மருந்துகளுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட சோதனைக்கு பின்பு இந்த மருந்து மூன்றாம் கட்ட சோதனையை அடையும். இந்த மூன்றாம் கட்டமும் இரண்டாம் கட்டத்தை போலவே நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் கூடுதலாக பலருக்கு ஒரே நேரத்தில் இந்த மருந்து வழங்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும். 

இந்த தடுப்பு மருந்து மூன்று கட்ட சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்த பின்பு நான்காம் கட்ட சோதனையில் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். அவர்கள் இந்த 3 கட்டத்திலும் கிடைத்த சோதனை முடிவுகளை ஆராய்ந்து பார்த்து அதிகாரப்பூர்வமாக இந்த மருந்தினை நோயாளிகளுக்கு வழங்க முடியுமா என்பதை தீர்மானிப்பர். இதனையடுத்து தான் இந்த மருந்து விற்பனைக்கு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்