நெய்யில் சுட்ட இனிப்பு, காரம் மற்றும் அசைவம் இப்படி வகை வகையா சாப்பிட்டு நம்ம வயிறு கொஞ்சம் அப்சட் ஆகி இருக்கும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.
1. சுக்கு – 50 கிராம்
2. சித்தரத்தை – 50 கிராம்
3. கண்டதிப்பலி – 25 கிராம்
4. அரிசி திப்பிலி – 5 கிராம்
5. ஓமம் – 100 கிராம்
6. கொத்துமல்லி விதை – 50 கிராம்
7. மிளகு – 50 க்ராம்
8. கிராம்பு – 20 கிராம்
9. ஜாதி பத்திரி – 10 கிராம்
10. விரளி மஞ்சள் 10 கிராம்
11. வெல்லம் – 250 க்ராம்
12. நெய் – 200 க்ராம்
13. தேன் – 100 கிராம்
செய்முறை
ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களை சூட்டினை ஆற வைத்துவிட்டு, பிறகு வெல்லத்தை உடைத்து தண்ணீரில் போட்டுவிட்டுப் போகவும். ஊறிய வெல்லத்தை கரைத்துவிட்டு மண், குப்பைப் போக சலித்து எடுத்துக் கொள்ளவும். முன்னர் வறுத்து எடுத்த எல்லாப் பொருட்களையும் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இரும்பு உலக்கைக் கொண்டு இடித்து சலிக்கவும்.
சற்று அழுத்தமான வாணலியை அடுப்பில் ஏற்றவும். கரைத்த வெல்லத்தை அதில் கொட்டிக் கிளறிக்கொண்டு சற்றே இறுகிய நிலையில் பொடி செய்த மருந்து பொருட்களை அதில் பொறுமையாகக் கொட்டி (கட்டித் தட்டிவிடாமல்) ஒன்று சேர்க்கவும்.
கொஞ்சம் பேரிச்சம் பழத் துண்டுகளையும் சேர்க்கவும். வெல்லமும் பொடியும் ஒன்று சேர்ந்த நிலையில் சிறிது சிறிதாக நல்லெண்ணெய் (இதயம், விவிஎஸ், செக்கு எதுவானாலும்) சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும். தொடர்ந்து எண்ணெய் குறையக் குறைய விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.
கிளறக் கிளற மருந்து உருண்டு திரண்டு வரும். சட்டுவத்தால் எடுத்து விட்டுப் பார்த்தால் சட்டியிலும் சட்டுவத்திலும் ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு, ஒரு கரண்டி நெய்யை அதன் தலையில் கொட்டி லேசாக மேலும் கீழுமாக பிரட்டவும். ஆறவிடவும். நன்கு ஆறியவுடன் ஒரு சம்படத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இந்த ப்ராசஸ் குறைந்தது ஒருமணி நேரமாகும். மருந்து சாமான்களில் எதையேனும் தீய விட்டுவிட்டாலோ, வறுக்காமல் விட்டுவிட்டாலோ மருந்து மருந்தாக இராது. பொருள் நஷ்டமாகும்.