இவர்களை கவுன்சிலிங் அனுப்புவதற்கு வழியில்லை என்பதால், போலி மருத்துவர்களிடமும், போன் மூலம் கவுன்சிலிங் கொடுப்பதற்கும் சிலர் முயன்று வருகின்றன. இது குறித்து எச்சரிக்கை செய்கிறார் பிரபல மனநல மருத்துவர் ருத்ரன்.
இப்போது அல்லாவிட்டாலும் கூடிய விரைவில் பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வமுள்ள தனிநபர்கள் பலரும் கோவிட்19 பாதிப்பிலிருந்து மீள கவுன்சிலிங் தர முன்வருவார்கள். இதில் சுயவிளம்பரம் தேடுவோர், வருங்கால வணிக நோக்கம் உள்ளோர் பற்றியெல்லாம் பின்னர் பார்த்துக் களையெடுக்கலாம். கவுன்சிலிங் என்று பரவலாக, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள மனநல இடர் நீக்கம் குறித்து சிலவற்றை நாம் புரிந்து கொள்வது உதவும்.
அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில், வெளியே வந்து மனநல மருத்துவரிடமோ மனநல ஆலோசகரிடமோ தீர்வு தேடுவது சாத்தியமில்லை என்பதால், தொலைபேசியிலேயே கவுன்சிலிங் தருவதாகப் பலரும் சொல்கிறார்கள். இது சிலருக்கு மட்டுமே உதவும். மனத்தின் பாதிப்பு தீவிரமாக இருந்தாலோ மனம் நோய்வாய்ப் பட்டிருந்தாலோ இது அவ்வளவாக உதவாது.
உதாரணத்திற்கு- ஒருவர் தூக்கம் வரவில்லை என்று சொன்னால் என்ன மாதிரி “கவுன்சிலிங்” தர இயலும்? வெறும் வார்த்தையில், மனசை ரிலாக்ஸ்டா வச்சுக்குங்க என்று சொல்வது எப்படி உதவும்? அது எப்படி என்று தெரிந்தவர் எதற்கு மிகுந்த சிரமத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளப் போகிறார்! மேலும் உறக்க வரவில்லை என்றால் அதன் காரணங்கள் பலவகைப்படும்.
உடலின் உபாதை, சில நேரங்களின் வேறு பிரச்சினைகளுக்காக உட்கொள்ளும் மருந்துகள், வாழ்வின் இறுக்கம், வருங்காலம் குறித்த அச்சம், நிகழ்காலம் குறித்த குழப்பம், முன்னால் வாழ்வில் ஏற்பட்ட சோகம் என்று பல்வகைக் காரணங்களினால் உறக்கம் வராமல் இருக்கலாம்.
உறக்கமின்மைக்கு அடியோட்டமாக இருப்பது பதட்டமா, பயமா, வருத்தமா, குழப்பமா, பழகிவிட்ட மது தற்போது இல்லாமையா, உணவில் ஏதும் ஒவ்வாமையா என்பதையெல்லாம் ஆய்ந்து தான் தீர்வு சொல்ல முடியும். இது ஐந்து அல்லது பத்து நிமிட தொலைபேசி உரையாடலில் சாத்தியமும் இல்லை. மேலும் நமக்கு உறக்கம் வரவழைக்கும் இசை போன்ற உத்திகள் அவர்களுக்கும் பொருந்தும் என்பதும் இல்லை.
இதைவிட முக்கியமாக உறக்கமின்மை மனநோயான மனச்சோர்வின் அறிகுறி என்றால் அவர்களிடம் மட்டுமல்லாமல் அவர்களுடன் இருப்பவர்களுடனும் இது பற்றி விசாரித்து அறிந்த பின் தான் முடிவெடுக்க முடியும்.
மிக இயல்பாக, மிக அதிகம் பேர் சொல்லக்கூடிய பிரச்சினையான உறக்கமின்மையையே இவ்வளவு ஆராய்ந்து தீர்வு தீர்மானிக்க வேண்டிய நிலையில், வேறு தீவிர மனநோய்களுக்கெல்லாம் இவ்வகை “கவுன்சிலிங்” உதவப் போவதில்லை. அப்படியென்றால் இது எதற்குமே உதவாது என்றில்லை. பலருக்கு நோய் இல்லாமல் பிரச்சினைகளினால் உறக்கமும் நிம்மதியும் இல்லாதிருந்தால், அப்போது இவ்வகை கவுன்சிலிங் உதவும்.
கவுன்சிலிங் என்பது அறிவுரை கூறுவது அல்ல. பாதிக்கப்பட்டவரின் பின்னணி புரிந்து, அவருக்கேற்ற தீர்வினை அவரே தீர்மானிக்க உதவுவதே ஆகும். தன் விருப்பு வெறுப்பு, முற்சாய்வுகள் எதையும் திணிக்காத ஆறுதலே சரியான கவுன்சிலிங் ஆகும். இதற்கு பயிற்சியும் பக்குவமும் வேண்டும். இதை ஒரு பொழுதுபோக்காக யாரும் செய்துவிட முடியாது.
நான் ஸைக்காலஜி படித்திருக்கிறேன் என்று பலர் சொல்லலாம், கவின்சிலிங் என்பது பாடப்புத்த்கங்களினால் கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றில்லை. அதற்கு நிறைய பயிற்சி தேவை. அப்படிப்பட்டவர்களுடன் உரையாடினால்தான் பயன் கிடைக்கும்.
யார் கவுன்சிலிங் தருவதாய்ச் சொல்கிறார்கள், அவர்களது தகுதியும் அனுபவமும் என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் விளம்பரங்கள் பார்த்து யாரிடமாவது போனால் நேர விரயம் மட்டுமல்ல, பிரச்சினை மேலும் சிக்கலாகவும் வாய்ப்புள்ளது. எனவே, மிகவும் அவசரம் அவசியம் இல்லாவிட்டால் பொறுமையாகக் காத்திருந்து மனநல மருத்துவரை/ஆலோசகரை நேரில் சென்று பாருங்கள் என்று தெரிவித்துள்ளார் டாக்டர் ருத்ரன்.