கடந்த ஆண்டு சென்னையில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட
மிக மிக குறைவாகவே பொழிந்தது. அதாவது வழக்கத்தை விட சுமார் 55 சதவீதம் அளவிற்கு மழை
அளவு குறைந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை பொய்த்த காரணத்தினால் சென்னையில் நிலத்தடி
நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில்
சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம்.
ஆனால் கடந்த ஆண்டு
அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் சொல்லிக் கொள்ளும்படி சென்னையில் மழை இல்லை.
ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்மே மழை பெய்தது. இந்த மழையும் காய்ந்திருந்த சென்னை
மணலை ஈரப்படுத்த மட்டுமே உதவியது. இதனால் சென்னையில் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம்
குறைய ஆரம்பித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்து
வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு
இதே காலகட்டத்தில் சென்னையில் நிலத்தடி நீர் சராசரியாக ஐந்து மீட்டர் ஆழத்தில் இருந்தது.
ஆனால் தற்போது நிலத்தடி நீர் மட்டம் ஏழு மீட்டருக்கும் அதிகமான ஆழத்திற்கு சென்றுவிட்டது.
மதுரவாயல், தியாகராநயநகர் போன்ற இடங்களில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நிலத்தடி நீர்
இருக்கும் இடம் சுமார் ஒன்றரை மீட்டர் அளவிற்கு கீழே சென்றுள்ளது.
அதோடு மட்டும் அல்லாமல்
திருவான்மியூர், அடையாறு பகுதிகளில் கடந்த ஆண்டு ஏழு மீட்டர் ஆழத்தில் நிலத்தடி நீர்
கிடைத்த நிலையில் தற்போது ஏழு மீட்டர் ஆழத்தில் தண்ணீர் சுத்தமாக இல்லை. இதே நிலை தான்
கிணறுகளிலும் காணப்படுகிறது. சென்னையில் ஆங்காங்கே சில இடங்களில் தற்போதும் கிணறுகள்
பயன்பாட்டில் உள்ளன. அவற்றை ஆய்வு செய்த போது சில கிணறுகள் வற்றிப் போய் உள்ளன.
மதுரவாயல், தியாகராயநகர்
பகுதிகளில் கிணற்றில் தண்ணீர் இருப்பது ஏழு முதல் ஒன்பது மீட்டர் ஆழமாகியுள்ளது. கடந்த
ஆண்டு இதே சமயத்தில் 5 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்துள்ளது. ஜனவரி மாதமே இந்த நிலை
என்றால் கோடையில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறையும் ஆபத்து உள்ளது. எனவே இந்த ஆண்டு
சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.