அந்த பாம்புக்கு, ஜூலியட் என்று பெயர். டெட்ராய்ட் நகரின் ஈஸ்ட் செவன் மைல் பகுதிக்கு அருகே உள்ள வன உயிரின காப்பகத்தில் இருந்து, தப்பி வெளியே வந்த இம்மலைப்பாம்பு, அங்குள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில் ஏறி படுத்துவிட்டது. அவ்வப்போது, நெளிவதும், சீறுவதும் மட்டும் செய்த இந்த பாம்பு, மற்ற நேரம் எந்த சத்தமும் போடவில்லை. ஆனால், இதனை பார்த்து, குறிப்பிட்ட வீட்டில் இருந்த நாய் குரைக்கவே, வீட்டின் உரிமையாளர் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களும் வெளியில் வந்து பார்த்துள்ளனர்.
அப்போது, 18 அடி நீள மலைப்பாம்பு, வீட்டின் கூரையில் தஞ்சம் அடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் வந்து படிப்படியாக, போராடி பாம்பை பிடித்துச் சென்றனர். அதேசமயம், இந்த பாம்பு யாருக்கும் எந்த தொல்லையும் தரவில்லை. காரணம், வன உயிரின காப்பகத்திலேயே வளர்ந்த பாம்பு என்பதால், அதற்கு, வேட்டையாடுவது பற்றி எதுவும் தெரியவில்லை என, பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். இல்லை எனில், குடியிருப்பில் உள்ள சிறுவர்கள், பொதுமக்கள் அல்லது தன்னை பார்த்து குரைத்த நாய் யாரையாவது இது பிடித்து விழுங்கியிருக்கும் எனவும், அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், வீட்டின் உரிமையாளர் ஹார்வி கூறுகையில், ”18 அடி நீள மலைப்பாம்பு எப்படி வீட்டின் மேற்கூரைக்கு வந்தது என்ற கேள்விக்கு இன்னும் எனக்கு பதில தெரியவில்லை. இவ்வளவு பெரிய பாம்பை பார்த்ததும் எனக்கு, பேச்சு, மூச்சே வரவில்லை. நல்லவேளை, எந்த பாதிப்பும் இல்லை. இப்போது என் மன அதிர்ச்சியை போக்க, நிம்மதியாக ஒரு பீர் குடிக்க விரும்புகிறேன்,” என்றார்.