இ.சி.ஜி (இதய மின் வரைபடம்)
இதயம் சுருங்கும்போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த மின் அலைகளைக் கருவி மூலம் பதிவு செய்வதே இ.சி.ஜி. இதயத் துடிப்பு சீராக இருக்கிறதா என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதய நோய் உள்ள ஒரு சிலருக்கு இ.சி.ஜி – இல் மாறுபாடுகள் இல்லாமல்கூட இருக்கும்.
மார்பு எக்ஸ்ரே
இதயம் விரிந்துள்ளதா என்பதையும், நுரையீரலின் ரத்த ஓட்டம் மற்றும் செயலாற்றும் தன்மையையும் கண்டறியலாம்.
அடிப்படை ரத்தப் பரிசோதனைகள்
அடிப்படையான ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, ரத்த அணுக்களின் அளவு, ஹீமோகுளோபின் அளவு, யூரியா, கிரியாட்டின் ஆகியவற்றின் அளவுகள் பரிசோதிக்கப்படும். இவை மூலம் இதய நோய்களை உருவாக்கும் இதரக் குறைபாடுகள் உள்ளனவா என்பதையும், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியன பாதிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
சிறப்பு ரத்தப் பரிசோதனைகள்
மாரடைப்பு நோயால் ரத்தத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிய ‘சி.பி.கே – எம்.பி’ ((cpk-mb – creatine
phosphokinase myocardial band)என்ற பரிசோதனை செய்யப்படும். கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ் என்ற என்ஸைம் அளவு பரிசோதிக்கப்படும். மாரடைப்பு இருந்தால் இதன் அளவு ரத்தத்தில் அதிகரித்திருக்கும்.
இதேபோல ட்ரோபோனின் ‘டி’ பரிசோதனையும், மாரடைப்பு நோய்க்கான குறிப்பிட்ட மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளனவா என்பதைக் கண்டறிய உதவும்.
எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை
இதயத்தின் அமைப்பு மற்றும் அதன் செயல்திறன் கண்டுபிடிக்கப்படும். பிறவியிலேயே இதயத்தில் கோளாறுகள் இருந்தாலும் அவற்றைக் கண்டுபிடித்துவிடலாம்.