Tonsillitis in Children: Causes, Symptoms and Remedies in Tamil

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

உங்கள் குழந்தைகள் சாப்பிடும்போது தொண்டை வலியால் அவதிப் படுகிறார்களா? அவ்வப்போது தலைவலியும் காய்ச்சலும் ஏற்படுகின்றனவா? அப்படியானால் டான்சிலாக இருக்கலாம். 5 வயது குழந்தைக்கு எப்படிங்க டான்சில் வரும்… அதெல்லாம் பெரியவங்களுக்குத் தானே வரும் என நினைக்கும் பெற்றோரா நீங்கள்? அப்படியென்றால் இந்தக் கட்டுரை உங்களுக்குத் தான்.

டான்சில் என்றால் என்ன?

‘டான்சில்’ என்பது கொடிய நோய் ஒன்றும் இல்லை. தொண்டைப் பகுதியில் காணப்படும் ஒரு உறுப்புதான். இது புண் ஆகும்போது ஏற்படும் வலியைத் தான் டான்சில் என்று அழைக்கிறார்கள். இதற்கு ஆங்கிலத்தில் ‘டான்சிலிடிஸ்’ என்று பெயர்.

இது பாதித்தால், தொண்டை வலி ஏற்படும்; உள் நாக்கின் இரண்டு பக்கமும் வீக்கம் அடைந்து காணப்படும். நாக்கின் அடிப்பகுதி சிவப்பாகவும், வீக்கத்துடனும், மேற்பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படும். சாப்பிடும்போது அதிகப்படியான வலி இருக்கும். இதனால், குழந்தைகள் எதையும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களால் எச்சில் கூட விழுங்க முடியாது.

டான்சில் ஏற்பட என்ன காரணம்?

டான்சில், உடலை பாதுகாத்து நோயை எதிர்க்கக் கூடிய ஒரு உறுப்புதான். இது வடிகட்டி போல செயல்படுகிறது. அதன் மேல் தொற்று ஏற்படும்போதுதான் புண் ஏற்பட்டு இந்த டான்சில் பிரச்சனை உருவாகிறது.

யாருக்கெல்லாம் இந்த டான்சில் பிரச்சனை வரும்?

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் டான்சில் பாதிக்கும். சராசரியாக 5 முதல் 15 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு இந்நோய்த் தொற்று ஏற்படும். ஆனால், சில குழந்தைகளுக்கு இரண்டு வயதிலேயே கூட ஏற்படலாம். இதனால் பயப்பட வேண்டியதில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக டான்சில் தொந்தரவு இருக்கிறது என்பவர்கள்தான் மருத்துவரை அணுக வேண்டும்.

டான்சிலின் அறிகுறிகள் என்ன?

1.டான்சிலின் முதல் அறிகுறியே உள்நாக்கு வளர்ந்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்துவதுதான்.

2.சாப்பிடும்போது தொண்டைப் பகுதியில் கடும் வலி ஏற்படும்.

3.தொண்டை வலி, வயிற்று வலி, வாய் புண் போன்றவை ஏற்படும்.

4.உள்நாக்கின் அருகில், அதாவது நாக்கின் அடிப் பகுதி வீக்கத்துடன் காணப்படும்.

5.வாய் துர்நாற்றத்துடன் காணப்படும்.

6.வாயில் இருந்து எச்சில் ஒழுகுதல், தொண்டைப் பகுதியில் எரிச்சல் ஏற்படுதல் போன்றவையெல்லாம் டான்சில் இருப்பதற்கான அறிகுறிகள்.

7.குழந்தைகள் சாப்பிடும்போது விழுங்குவதற்கு சிரமப்பட்டு வாயிலேயே வெகு நேரமாக உணவை அடக்கி வைத்திருந்தால் டான்சில் தொந்தரவு இருக்கிறதா என்பதை மருத்துவரை அணுகி சோதித்து விடுவது நல்லது.

டான்சிலுக்கு என்ன சிகிச்சை?

டான்சில் பிரச்சனைக்குப் பயப்படத்தேவையில்லை. உணவுக் கட்டுப்பாடு மூலமே சரி செய்து விட முடியும். ஆனால், இரண்டு நாட்களுக்கும் மேல் தொடர்ச்சியாக இதனால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. சாதாரண டான்சிலை மருந்து மாத்திரைகள் மூலமே குணப்படுத்தலாம். ஆனால், ‘செப்டிக் டான்சில்’ எனப்படும் தீவிரமான டான்சிலுக்கு, அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே முழுமையான தீர்வை எட்ட முடியும்.

டான்சிலை எப்படி தடுக்கலாம்?

நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளும் டான்சிலை குணப்படுத்துமா என்பது தெரியாது. ஆனால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் டான்சில் உறுப்பை பாதிக்கும் கிருமிகளைக் குழந்தைகளை அண்ட விடாமல் தடுக்கலாம். அவை என்ன?

  • குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு சுத்தமாக கைகளைக் கழுவுதல்
  • அவ்வப்போது வெண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க பழக்குதல்.
  • தவிர, வெறும் நீரில் கைகளைக் கழுவாமல், கிருமி நாசினி துணையுடன் கைகளைக் கழுவுவதும் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

இவற்றின் மூலம் கிருமி தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.

டான்சில் பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?

1.எல்லா நோய் பாதிப்புக்கும் சொல்லப்படுவது போல இதற்கும் ஓய்வு சிறந்த நிவாரணம். தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் வலி நிவாரணிகளைப் பயன்படுத்தலாம். சாதாரணமாக சதை வலிக்குப் பயன்படுத்தும் ஸ்ப்ரேக்களைக் கூடப் பயன்படுத்தலாம்.

2.நாக்கு வறண்டு விடவே கூடாது. அவ்வப்போது தேவையான நீரைக் குடித்து, தொண்டைப் பகுதியை ஈரப்பதத்துடனே வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், உடலில் நீரிழப்பு ஏற்படுவது, டான்சில் கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும். நீர்ச் சத்துக்கள் நிறைந்த திட உணவாக இருந்தாலும், அதை தவிர்ப்பதுதான் மிகவும் நல்லது. உதாரணமாக தர்பூசணிப் பழம் சாப்பிட வேண்டுமென்றால், பழத்தை அப்படியே உண்ணாமல், அதன் சாறை குடிக்கலாம். இது போல தான் மற்ற பழங்களுக்கும்.

3.குளிர்ந்த பானங்களைத் தவிர்த்துவிட்டு, மிதமான சூடு கொண்ட பானங்களைக் குடிக்கலாம். இந்த வகையில் டீ – காபி சிறந்தது. ஐஸ்கிரீம்கூட ஒன்றும் செய்யாது. ஆனால், கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்ந்த குளிர்பானங்கள் தொண்டையைப் பதம் பார்த்துவிடும்.

4.சிகரெட் பழக்கம் கொண்டவர்கள், முற்றிலுமாக நிறுத்துவது நல்லது.

5.பல் துலக்கும்போது பயன்படுத்தும் வாசனை ரசாயனங்கள் மற்றும் தூய்மை திரவங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

6.வலி நிவாரண மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம். வலி தெரியாமல் இருப்பதற்காகப் போதை வஸ்துகளை எடுத்துக்கொள்ளல் கூடாது. குறிப்பாகக் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் மிக கவனமாக இருக்க வேண்டும்.

7.தாமாக முன்வந்து வலி நிவாரணத்துக்காக எதாவது மருந்துகளைக் கொடுத்துக் குழந்தைகளுக்கு ஆபத்து வர விடக்கூடாது. தீராத காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது அவசியம்.

டான்சிலுக்கு எந்த உணவு சிறந்தது?

டான்சில் பாதிக்கப்பட்டவர்கள், எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக சாப்பிட்டு விடக்கூடாது. நமக்கு மிகவும் பிடித்தமானது, மிகவும் சத்தானது என இருந்தாலும் அதை சாப்பிடும் முன் கொஞ்சம் நிதானித்து முடிவெடுக்க வேண்டும்.

ஃபுரூட் ஜூஸ்

பழத்தை அப்படியே சாப்பிடுவதைவிட, சாறாகச் சாப்பிடுவது சிறந்தது. குச்சி ஐஸ், ஃபுரூட் ஜூஸ் போன்றவை தொண்டைப் பகுதி புண்ணை ஆற வைக்கும் இயல்பு கொண்டவை.

மாதுளை ஜூஸ்

தொண்டைப் பகுதி நோய்த் தொற்றுக்கு மாதுளை ஜூஸ் ஒரு நிவாரணி. தவிர, அது வீக்கத்தைக் குணப்படுத்தும் இயல்பும் கொண்டது. சாப்பிட முடிகிறதே என்பதற்காக பழத்தை அப்படியே சாப்பிடக் கூடாது. முன்பே கூறியது போல திடப்பொருளை சாப்பிடுவது எதிரிக்கு விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு வருவது போலாகும்.

வாழைப்பழம்

அதிக கலோரிகளைக் கொண்ட உணவு பட்டியலில் முன்னிலை வகிக்கும் வாழைப்பழம், தொண்டைப் புண்ணை குணப்படுத்தக் கூடியது. மிருதுவானதாகவும் இருப்பதால், இப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். ஆனால், நன்கு பழுத்த பழமா என்பதையும் கவனித்து விட்டு சாப்பிடவும்.

சிக்கன் சூப்

மிதமான சூட்டில் சிக்கன் சூப் குடிப்பது, வீக்கத்தைக் குறைக்கும். ஏனென்றால், அதில் உள்ள பொருட்கள், டான்சில் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டவை.

இஞ்சி

இஞ்சியைப் பல்வேறு விதமாகப் பயன்படுத்தலாம், உணவு சமைக்கும் போது சேர்ப்பது மட்டுமின்றி, அவ்வப்போது டீயிலும் சேர்த்துக்கொள்ளலாம். இதற்குத் தொண்டைப் புண்னை குணப்படுத்தும் இயல்பு இருக்கிறது.

தேன்

தேன், உடலில் உள்ள காயங்களை ஆற வைக்க பழங்காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொண்டைப் புண்ணுக்கும் தேன் சிறந்த மருந்து. ஆனால், அது கலப்படமற்ற தேனாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள்

எல்லாவற்றுக்கும் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் மஞ்சள், டான்சில் தொற்று கிருமிகளையும் அழிக்கும் இயல்பு கொண்டது. இதை உணவுடன் சேர்த்துச் சமைத்தும், டீ அல்லது பாலில் கலந்தும் குடிக்கலாம்.

நன்கு சமைத்த காய்கறிகள்

கேரட், முட்டைகோஸ், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளை நன்கு சமைத்துச் சாப்பிட வேண்டும். இவையெல்லாம் தொண்டைப் புண்ணைக் குணப்படுத்த உதவும் இயல்புடையவை. காய்கறிகளை நன்கு வேக வைத்து சமைக்க வேண்டும். முழுதாக வேகாத காய்கறிகளை உண்பது டான்சிலுக்கு நல்லதல்ல.

முட்டை

அதிக புரதம் கொண்ட முட்டை, புண்ணைக் குணப்படுத்தும் தன்மைக் கொண்டது. வேக வைத்த முட்டையை அப்படியே சாப்பிடாமல், சிறு சிறு துண்டுகளாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது நல்லது. டான்சில் தொற்று காரணமாக ஏற்பட்ட தொண்டை வீக்கததால் அவதிப்படுபவர்களால் மென்று விழுங்க முடியாது. அதனால், சிறிது சிறிதாக எடுத்துக்கொள்ளலாம்.

டீ

முன்பே கூறியது போல, டான்சில் குணமாகும் வரை அவ்வப்போது டீ குடிக்கலாம். அதன் குணமும், மிதமான சூடும் டான்சிலில் இருந்து விடுதலைப் பெற்றுதரும்.

எதுக்கெல்லாம் நோ…. சொல்ல வேண்டும்?

கடினமான உணவுப் பொருட்கள்

கடிப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே புண்ணாக இருக்கும் தொண்டைப் பகுதியை இவை கடக்கும்போது இன்னும் பாதிப்பை அதிகரித்து விடும். பச்சை காய்கறிகள், தேங்காய், பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. வாய் மற்றும் வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேங்காய் குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான். ஆனால், அதன் கடினத் தன்மை ஏற்கெனவே புண் ஆகியிருக்கக் கூடிய தொண்டையை மேலும் மோசமாகப் பாதிக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடக் கூடாது. பொதுவாகப் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் சிட்ரஸ் வகைப் பழங்கள் டான்சிலை தீவிரமாக்கி விடும். எந்த காரணத்துக்காகவும் மறந்தும் குழந்தைகளுக்குக் கொடுத்து விட வேண்டாம்.

ஊறுகாய், உப்புக்கண்டம் போடப்பட்ட இறைச்சி

புளிப்பு சுவை உடைய உணவுப் பொருட்கள் பக்கமே டான்சில் பாதிப்பு உள்ளவர்கள் போகக்கூடாது. குறிப்பாகக் குழந்தைகள்! சாப்பிட மறுக்கிறார்கள் என்று சாப்பாட்டுடன் ஊறுகாய் சேர்ப்பதோ, உப்புக்கண்டம் போடப்பட்டு, பதப்படுத்தப்பட்ட இறைச்சியைச் சாப்பாட்டுடன் சேர்த்துக் கொடுப்பதோ கூடாது. ஒருவேளை டான்சில் குணமாகி விட்டாலும், இதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஏற்படலாம்.

தக்காளி ஜூஸ் மற்றும் சாஸ்

ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ் வகைகளுடன் சேர்த்துக்கொள்ளப்படும் தக்காளி சாஸ்கூட டான்சிலுக்கு ஜென்ம விரோதி. உணவில் தக்காளியைச் சேர்த்துக் கொள்வதையும் குறைத்துக்கொண்டால் டான்சில் பிரச்சனைக்கு விரைவாகத் தீர்வு கிடைக்கும். குழந்தைகள் தக்காளியை விரும்பி சாப்பிடுவார்கள். பெற்றோர் இதை கண்டுகொள்ளாமல் விட்டால் விஷயம் விபரீதம்தான்.

மது

பொதுவாகவே மது எல்லாவற்றுக்கும் விரோதிதான். டான்சில் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்குச் சுவாசக்கோளாறால் தூக்கமின்மையும் இருக்கும். அதனால், மது அருந்திவிட்டு அந்தப் போதையில் தூங்கலாம் என சிலர் நினைக்கக் கூடும். ஆனால் அது தவறு. டான்சில் புண்ணை  மது இன்னும் தீவிரமாக்கிவிடும். மது டான்சிலுக்கும் கேடு.

மிகத் தீவிரமான செப்டிக் டான்சில்

சில நாட்களில் குணமடையாமல், இடைவெளி விட்டு விட்டு டான்சில் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்குக் செப்டிக் டான்சில் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் வலி இருக்காது. ஆனால், சாதாரணமாக சில நாட்களில் குணமாகிவிடும் டான்சில், அவர்களுக்கு வாரக் கணக்கில் இருக்கும். குணமாகினாலும் அடுத்த சில நாட்களில் மீண்டும் வந்து விடும். அவர்கள் மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாவிட்டால், அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். குழந்தைகளுக்கு இந்த வகை செப்டிக் டான்சில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு..!

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…

அதிமதுரம் தரும் நன்மைகள்! ( குழந்தைகள் & பெரியவர்கள்)