தக்காளி தொக்கு அனைவரும் விரும்பி சாப்பிடுவது. தக்காளி தொக்கை, சாப்பாட்டிற்கு, பூரி, சப்பாத்தி, பிரட், தயிர் சாதம் என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளலாம். நல்ல காம்பினேஷன். தக்காளியை தொக்காக விதம் விதமாக செய்யலாம். இந்த முறையிலும் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :-
– 1 கிலோ பழுத்த நாட்டு தக்காளி
– 6 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
– 4 டேபிள்ஸ்பூன் சிகப்பு மிளகாய் பொடி
– 3/4 கோலி குண்டு அளவு பெருங்காயம்
– 1 ஸ்பூன் கடலை பருப்பு (optional)
– 1 ஸ்பூன் கடுகு
– உப்பு தேவையான அளவு
– அரை ஸ்பூன் வெந்தயப் பொடி
செய்முறை :-
தக்காளியை நன்கு அலம்பி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 6 டேபிள்ஸ்பூன் என்னை விட்டு பெருங்காயத்தை பொரித்து தனியாக எடுத்து வைத்து பொடித்துக் கொள்ளவும். பின்பு கடுகு கடலைப்பருப்பு தாளித்து தக்காளியை அப்படியே முழுவதுமாக போட்டு பிரட்டவும்.
இந்த தக்காளி தொக்கிக்கிற்கு தக்காளியை மிக்ஸியில் பேஸ்டாக அரைக்கவோ அல்லது துண்டங்களாக நறுக்கவோ கூடாது. தக்காளி அதுவே வெந்து வெந்து கரைந்து சரியான பதத்திற்கு வந்து கடைசியில் சிறு சிறு துண்டுகள் அங்கங்கே கிடைக்கும். இப்படித்தான் ஒரிஜினல் தக்காளி தொக்கு இருக்கும். ஆந்திராவிலும் இதையேதான் கடைபிடிக்கிறார்கள். தக்காளி தொக்கு ஆந்திராவில் மிகவும் பிரபலமானது.
இப்போது தக்காளி நன்கு சுருள வதங்க வதங்க கரைந்து நீர் விட ஆரம்பித்துவிடும். இப்போது மேலே தெளிக்காமல் இறுக்க மூடி போட்டு வேக வைக்கவும். ஓரளவு நீர் வற்ற ஆரம்பிக்கும் பொழுது உப்பு மிளகாய்த்தூள் போட்டு நன்கு கலக்கவும். ரொம்ப அழுத்தமாக மசிக்க வேண்டாம், லேசாக மசித்தாலே போதுமானது.
தொக்கு நன்கு சுருள வதங்கி எண்ணெய் கக்க ஆரம்பிக்கும் பொழுது கேஸை ஆஃப் பண்ணி விடலாம். கேஸை ஆஃப் பண்ணி இரண்டு நிமிடம் கழித்து பொடி பண்ணிய பெருங்காயத்தையும் வெந்தயப் பொடியையும் கலந்து வைத்தால் நான்கைந்து நாட்கள் மேல் கெடாமல் ரொம்ப நன்றாக இருக்கும்.
கடைசியில் இறக்குவதற்கு முன்பு ஒரு ஸ்பூன் வறுத்த சீரகப் பொடியும் சேர்க்கலாம். ஆந்திர, கன்னட டேஸ்ட் தொக்கில் ஜீரகம் சேர்த்து செய்வார்கள். தாளிக்கும்போது கடுகுடன் கால் டீஸ்பூன் வெந்தயமும் சேர்க்கலாம்.