உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் தொற்று இருந்து வருகிறது. இது உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கான மருந்தை உலகநாடுகள் பலவும் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் இந்நாள் வரை இந்த வைரஸ் தொற்றை முழுவதுமாக குணப்படுத்தும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மையாகும். இன்னிலையில் எம்ஜிஆர் பல்கலைக் கழக சார்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் மருந்தை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதற்கான முதற்கட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளதாக எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷ்ய்யன் கூறியிருந்தார். அவரிடம் சேலத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தங்கதுரை என்பவர் அந்தரத்தாமரையை பயன்படுத்தி இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்தை கண்டுபிடிக்க ஆய்வு மேற் கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளார். இதுபற்றி சித்த மருத்துவர் தங்கதுரை கூறும் பொழுது, அலோபதி மருத்துவ முறைகளோடு சித்த மருத்துவத்தையும் ஒருங்கிணைந்து செயல் படுத்தினால் இந்த வைரஸ் தொற்றுக்கு நம்மால் எளிதில் மருந்தை கண்டுபிடிக்க இயலும் என அவர் கூறியிருக்கிறார்.
சித்த மருத்துவத்தைப் பொறுத்த வரையில் எல்லாவிதமான நோய்களுக்கும் ஏற்ற மருந்துகள் உண்டு. காலப்போக்கில் அதன் மீது இருந்த நாட்டம் குறையத் தொடங்கியுள்ளது. எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஆய்வுக் குழுவில் கடுக்காய், கற்பூரவல்லி, திப்பிலி, சித்தரத்தை, அழிஞ்சில், நொச்சி, சீந்தில், கோரைக்கிழங்கு, ஏழிலைப்பாலை, ஆடாதொடை, நீர்பிரம்மி போன்ற மூலிகைத் தாவரங்களை ஆய்வு செய்ததாக தகவல் கிடைத்தது. சித்த மருத்துவத்தில் எனக்கு 18 ஆண்டுகள் அனுபவம் உண்டு.
இந்த வைரஸ் தொற்றானது நம் நாட்டிலும் வருவதற்கு முன்பே நான் மத்திய அரசுக்கு மின்னஞ்சல் மூலம் கபசுரக் குடிநீர் பயன்படுத்துமாறு வேண்டுகோள் வைத்தேன். தற்போது கபசுர குடிநீர் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என பலரும் நம்புகின்றனர். இந்நிலையில் இந்தக் கொடிய கிருமியை அழிப்பதற்கு சித்த மருத்துவத்தில் நம்மால் மருந்து கண்டுபிடிக்க இயலும். இதற்காக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கூறிய பாடல் வரிகள் சான்றாக அமைகின்றன.
அழுகிரந்தி குஷ்ட மடர்ந்த கரப்பான்
புழுவுறு மக்கூடு முதற்போகும் – அழகாகும்
மிந்திர நீலக்கருங்க ணேந்திழையே யெப்போழ்து
மத்திரத் தாமரையா லாய்.
அதாவது அந்தரத்தாமரை அழுகிய ரணம் கொண்டது, உஷ்ணம் கரப்பான் ஆகியவை மார்புக்குள் கூடுகட்டி வாழும் கிருமிகள். அந்தரத்தாமரை இந்த கிருமிகளை அழிக்கும் என்று வரிகள் கூறுகிறது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் இந்தப் கொரோனா மார்புக்குள் கூடு கட்டி வாழும் ஒரு கிருமி ஆகும். இந்த அந்தரத்தாமரை மார்புக்குள் கூடுகட்டி வாழும் இந்த கிருமியை அழிக்கும் பண்புகள் கொண்டது என சித்தர்கள் அருளியுள்ளனர். ஆகையால் இந்த அந்தரதாமரையை ஆய்வு செய்ய வேண்டும் என எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷன் அவர்களுக்கு பிரபல சித்த மருத்துவர் தங்கதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வகையான தாமரை ஏரி குளம் குட்டை ஆகிய நீர்நிலைகளில் நன்கு செழித்து வளரும். இது பார்ப்பதற்கு சாதாரண தாமரை போல் அல்லாமல் ரோஜாப்பூவின் இதழ்களை போன்று அடுக்கடுக்காக வளரும் தன்மையை கொண்டது. அந்த தாமரையை பயன்படுத்தி ஒருவேளை இந்த உயிரைப் பறிக்கும் கிருமிக்கு மருந்து கண்டுபிடித்தால் அது நமக்கும் நம்முடைய பாரம்பரிய மருத்துவத்திற்கும் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிட தக்கது என சித்தர் மருத்துவர் தங்கதுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.