உலகத்துக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பலரும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், குக்கிராம மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் விதமாக, ஈஷா அறக்கட்டளை அற்புதமான விழிப்புணர்வு பாடல் ஒன்றை தமிழில் இன்று (ஏப்ரல் 14) வெளியிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புற இசைக் கலைஞரான திரு.அந்தோணிதாசனின் குழுவைச் சேர்ந்த திரு.நவஃபல்ராஜா அவர்கள் இந்தப் பாடலை பாடி இசை அமைத்துள்ளார். கிராமிய மெட்டில் பாடப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு ஈஷா தன்னார்வ தொண்டர்கள் நடனம் ஆடி உள்ளனர். அழகு ததும்பும் ஈஷா யோகா மையத்திற்குள் படமாக்கப்பட்டுள்ள இப்பாடல் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
”வாயையும் கையையும் அடக்கினா வராது நம்மிடம் கொரோனா” என்ற வரியுடன் தொடங்கும் இப்பாடல் பேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ தொடங்கியுள்ளது.
வீடியோவியின் கடைசியில் பேசியுள்ள சத்குரு, “கொரோனா வைரஸ் நம் உடலுக்கு வராமல் பார்த்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் அடிப்படை பொறுப்பு. அதற்கு அனைவரிடம் இருந்து ஒரு இடைவெளி வைத்து கொள்ள வேண்டும். இந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் எது ஒரு மகத்தான ஆபத்தாக உள்ளதோ, அதை ஒரு சிறு ஆபத்தாக மாற்றி கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் சார்பில் அரசு சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து ஈஷாவையை சுற்றியுள்ள 17 பஞ்சாயத்துக்களில் கொரோனா விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.