சந்தேகமே வேண்டாம். தினசரி காலையில் இட்லியை கொடுப்பது ஆரோக்கியமான விஷயம் தான். இரவு சாப்பாட்டிற்குப் பிறகு வெறும் வயிற்றில் சாப்பிடுகிற இட்லி, போதுமான சத்துக்களை தருகிறதா?
காலையில் எடுத்துக் கொள்ளும் திட உணவு எளிதில் ஜீரணமாகிற வகையில் இருப்பது தான் நல்லது. குழந்தைகள்,பெரியவர்கள் மட்டுமல்ல… நாமும் காலை நேரத்தில் எண்ணெய் பொருட்களை தவிர்த்து விடுதல் மிகவும் நல்லது.மற்ற டிபன் வகைகளில் இல்லாத சிறப்பம்சங்கள் இட்லியில் இருக்கின்றன.
இட்லி தயாரிக்க சேர்க்கப்படும் உளுந்து வளரும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அவசியமான தேவை. எலும்புகளைப் பலப்படுத்தவும் உளுந்து பயன்படுகிறது. எண்ணெயில் பொரிக்கப்படாமல், ஆவியில் தயாராகிற எந்த உணவும் வயிற்றுக்கு கெடுதல் செய்வதில்லை.
இட்லியை தொட்டுக் கொள்ள உடைத்தகடலையும், தேங்காயும் சட்னியாக சேருகின்றன. சாம்பாரில் பருப்பும் காய்கறிகளையும் சேர்க்கிறோம். குழந்தைகளுக்கு தேவையான மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்பு சத்து, விட்டமின்கள், தாதுச்சத்துகள் ஆகியவை இட்லி, சட்னி, சாம்பார் கலவையில் கிடைக்கிறது. அதாவது, அரிசியில் மாவுச்சத்தும், உளுந்து மற்றும் பாசிபருப்பு அல்லது துவரம் பருப்பில் புரதச்சத்தும் கிடைக்கிறது.
தேங்காயில் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. காய்கறிகள் மூலம் விட்டமின்கள் மற்றும் தாதுசத்துக்கள் கிடைக்கின்றன. ஆக மொத்தத்தில் இட்லி நல்ல ஆரோக்கியமான உணவு. தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
வாய்வுக்கோளாரு இருப்பவர்கள் தினந்தோறும் இட்லி சாப்பிடுவது மிகவும் நல்லது. நமது வயிற்றில் உள்ள புண்கள் சரிசெய்யும் மற்றும் நன்கு செரிமான ஆக இட்லி பெரிதும் உதவுகிறது. இட்லி நாம் சாப்பிட்டு 2 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். எனவே குழந்தைகளுக்கு இட்லி கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேரட் இட்லியாகவோ அல்லது பீட்ருட் இட்லியாகவோ கொடுக்கலாம்.