வாட்ஸ் அப் செயலியை நிறுவியவர்களில் ஒருவர், பிரையன் ஆக்டன். 2014ஆம் ஆண்டில் வாட்ஸ் அப் ஆனது பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது. 22 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாட்ஸ் அப்பை பேஸ்புக் கைப்பற்றியது. அப்போது தொடங்கி தற்போது வரை ஃபேஸ்புக் நிறுவனத்தை பிரையன் ஆக்டன் விமர்சித்து வருகிறார்.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்திலும் பிரையனின் விமர்சனம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். ஃபேஸ்புக் பொறியாளர் ஒருவரும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தார். அப்போது பேசிய பிரையன், பேஸ்புக் கணக்குகளை அழித்துவிடுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
நாம் தான் அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தோம் என்று கூறிய அவர், அதுதான் தற்போது நிலைமையை மோசமாக்கி இருப்பதாக குறிப்பிட்டார். பேஸ்புக்கின் தயாரிப்புகளை நாம் வாங்குகிறோம், அதற்காக பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோம் என்று தெரிவித்த பிரையன் ஆக்டன், எனவே கணக்குகளை அழித்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக மாணவர்கள் மத்தியில் பேசினார்.
தனது ஊழியர்களுக்காகவே, வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்திற்கு விற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தான் பேஸ்புக்கை பயன்படுத்துவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.