உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் கும்பமேளா தொடங்க உள்ளது.
இதற்காக நாடு முழுவதும் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இந்துக்கள்
உத்தரபிரதேசத்திற்கு வருகை தர உள்ளனர். கோடிக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்
உத்தரபிரதேச ரயில் நிலையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கும்பமேளாவிற்கு தீவிரவாத
அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும்
உத்தரபிரதேசத்தில் அதிக மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பல மடங்கு
அதிகரிக்கப்பட்டுள்ளது- அம்மாநிலத்தில் உள்ள 202 ரயில் நிலையங்களில் அதிநவீன பாதுகாப்பு
முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய வாயில்களில் ஒவ்வொரு பயணியையும் ஒரு நிமிடம்
முதல் 3 நிமிடங்கள் வரை சோதனையிட முடிவு செய்ப்பட்டுள்ளது.
எனவே ரயில் நிலையங்களுக்கு
வரும் பயணிகள் தங்கள் ரயில் புறப்படும் நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்னதாக வந்து விட
வேண்டும். அப்போது தான் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அவர்களை உள்ளே அனுமதிக்க முடியும்
என்று ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியுள்ளனர். கடைசி நேரத்தில் வருபவர்கள் ரயில்
நிலையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் பறக்க
வேண்டும் என்றால் செக்யூரிட்டி செக்கிற்கு என்று ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே வர வேண்டிய
நிலை உள்ளது. ஆனால் தாங்கள் 20 நிமிடங்கள் மட்டுமே முன்னதாக வரச் சொல்வதாகவும், இதனை
பயணிகள் தங்கள் பாதுகாப்பை கருதி பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த முறை வெற்றிகரமாக உத்தரபிரதேசத்தில் பின்பற்றப்பட்டால் நாடு முழுவதும் அமலுக்கு
வரும் என்றும் கூறப்படுகிறது.