கேளிக்கை தினம் மறந்தே போச்சா..?

கேளிக்கை தினம் மறந்தே போச்சா..?

ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாக 18 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப் பட்டு வருகிறது, ஆனால் FOOLS DAY –க்கான வரலாறு எங்கு ஆரம்பித்தது என்று ஆதாரங்கள் கிடையாது, இருந்தாலும் எல்லா இடங்களிலும் பரவலாக, பள்ளிக்குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஒருவரை ஒருவர் பொய் சொல்லி ஏமாற்றி சந்தோஷமாக விளையாடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1, இந்தியாவைப் போன்றே இன்னும் 11 நாடுகளில் முட்டாள்கள் தினமாக வெவ்வேறு விதங்களில் கொண்டாடப் பட்டுவருகிறது.

பிரான்ஸ் நாட்டில் முட்டாள்கள் தினம், விடுமுறையாகவும், “APRIL FISH” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாக ஒருவர் மற்றொருவரின் முதுகில் மீன் படத்தை அவர்களுக்குத் தெரியாமல் ஒட்டி விளையாடுவார்கள்.

ஸ்காட்லாந்து நாட்டில் இது இரண்டு நாளாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் குக்கூ பறவையை முட்டாள்களின் அடையாளமாகக் கருதி, குக்கூ பறவையை வேட்டையாடுவார்கள், மறுநாள், நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி விளையாடுவார்கள். நம்ம ஊரில் கூட குக்கூ பறவைக்கு அனைவரும் அறிந்த கதை ஒன்று உண்டு.

ஈரான் நாட்டில் ஏப்ரல் 1 அன்று மதியம் வரை அனைவரும் கூடி வெளியில் உணவு, விளையாட்டு மற்றும் ஜோக்குகளையும் பரிமாறிக் கொள்வார்கள். பிக்னிக் முடிந்தவுடன் அந்த ஆண்டில் வரப்போகும் கெட்டசெய்தி அல்லது துர் சம்பவங்களை எதிர்த்து பச்சை காய்கறிகளை தூக்கி எறிந்து கொண்டாடுவார்கள்.

போர்ச்சுக்கல் நாட்டில் முட்டாள்கள் தினம், ஒருவரின் மேல் ஒருவர் மாவினைக் கொட்டி கொண்டாடுகிறார்கள். ஜெர்மனி நாட்டில், நியூஸ் பேப்பர்,டி.வி, ரேடியோ ஸ்டேஷன் போன்ற மீடியாக்களில் பொய்யான ஒரு கதையை அல்லது ஜோக்கை, யாரும் பாதிக்காத வகையில் பரப்புவார்கள். சில ஜெர்மானியர்கள் பொய்யை சீரியசாக எடுத்துக் கொள்வார்கள்.

கிரீஸ் நாட்டில் முதலாவதாக யாரை ஏமாற்றுகிறார்களோ, அவர்களுக்கு அந்த வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் கிடைக்கப்போவதாகவும், ஏப்ரல் 1 அன்று மழை பெய்தால் நல்லது நடக்கப்போவதாகவும் நம்புகிறார்கள்.

ஸ்வீடன் நாட்டில் பொய்யால் ஏமாறுபவர்களை “APRIL, APRIL YOU STUPID HERRING, I CAN TRICK YOU WHEREEVER I WANT! “ என்று கூறுவார்கள்.

இந்தியாவிலும் ஒருவரை ஒருவர் கேளிக்கையாக, நம்பும்படியாக சின்ன சின்ன பொய்களை சொல்லி ஏமாற்றி விளையாடுகிறார்கள், சிலர் மை பேனாக்களில் உள்ள மையை அடுத்தவர் முதுகில் அடித்து விளையாடுவார்கள்.

ஏமாறுபவர், ஏமாற்றுகிறவர், பொய் சொல்லுபவர் என்று நினைக்காமல் அனைவரும் சந்தோஷப்படுத்தும் விஷயமாக எடுத்துக்கொண்டு எல்லோரும் கவலையை மறந்து சிரிக்கலாமே.

-ராமலெட்சுமி

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்