கற்பூரவல்லி இலைகள் – 2 கப், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா – தலா ஒரு ஸ்பூன், ஆய்ந்த கறிவேப்பிலை – ஒரு கப், உரித்த பூண்டு – கால் கப், புளி – எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் – ஒரு கப், கடுகு, மஞ்சள்தூள் – தலா ஒரு ஸ்பூன், பொடித்த வெல்லம் – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
கற்பூரவல்லி இலைகளை அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு நைசாக பொடிக்கவும். புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கற்பூரவல்லி இலைகளை வதக்கவும். பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போனதும் அரைத்த பூண்டு கருவேப்பிலை விழுதைக் கொட்டி கிளறவும். பின்னர் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
இந்த குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி இருமல், அஜீரணத்தைப் போக்கும் அற்புதமான குழம்பு இது.
நம்நாட்டு மூலிகையான கற்பூரவல்லியில் இப்படி ஒரு மருந்து குழம்பு செய்து சாப்பிட்டால் கைமேல் பலன் கிடைப்பது உறுதி!