ஆம். பாமோகி பகுதியில் உள்ள அக்ஷார் என்ற அந்த பள்ளிக்கூடம் மூங்கில் காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது. அங்கு படிக்க வரும் மாணவ, மாணவியர் கை நிறைய பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளி வந்தால் போதுமாம். கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே படிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் உண்மை.
அசாமை சேர்ந்த மஸின் முக்தார் தனது மனைவி பர்மிதா ஷர்மாவுடன் இணைந்து, கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த பள்ளிக்கூடம், சுற்றுப்புறங்களில் உள்ள குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில், இப்படி வித்தியாசமான நடைமுறையுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய மஸின் முக்தார், சுற்றுப்புற ஏழை மக்களுக்கு உதவும் வகையிலும், பிளாஸ்டிக்கின் தீமையை எடுத்துரைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை செயல்படுத்தி வருவதாக, மஸின் முக்தார் தெரிவித்துள்ளார்.
குப்பை பொறுக்கி கொடுத்தால், குழந்தை தொழிலாளர்களுக்குப் பலர் காசு தருகிறார்கள். அல்லது குவாரி வேலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதுபோல, பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கொண்டுவந்தால், அவர்களுக்கு கல்வி கற்றுத் தருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தந்த மாதிரியும் ஆகிவிடும், அதேபோல, பிளாஸ்டிக்கை அழித்தது போலவும் ஆகிவிடும், எனவேதான், இந்த நடைமுறையை செயல்படுத்தியுள்ளதாக, மஸின் முக்தார் குறிப்பிட்டுள்ளார்.