புயல் வேகத்தில் பரவுது பேர்ட் பாக்ஸ் சேலஞ்ச்... இளசுகளின் விபரீதப் போதை

புயல் வேகத்தில் பரவுது பேர்ட் பாக்ஸ் சேலஞ்ச்… இளசுகளின் விபரீதப் போதை

கடந்த டிசம்பர் மாதம் நெட் ஃப்ளிக்ஸ் மூலம் சாண்ட்ரா புல்லக் நடித்து வெளியான திரைப்படம் பேர்ட் பாக்ஸ். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அது மட்டுமின்றி, இந்தப் படத்தைப் பின்பற்றி நடத்தப்படும் சேலஞ்ச் எனப்படும் சவால் விளையாட்டு ஆபத்தான நிலையை எட்டியுள்ளது அது என்ன சேலஞ்ச் என்பதைப் பார்க்கும் முன்பு, படத்தின் கதையைப் பார்க்கலாம்.

பொறுப்பே இல்லாத ஓவியப் பெண் சாண்ட்ரா. கணவன் பிரிந்த பிறகு கர்ப்பமாக இருப்பதை அறிகிறாள். தன் வயிற்றில் இருக்கும் குழந்தை மீது எந்த அக்கறையும் காட்ட மறுக்கிறாள். இந்த நேரத்தில் அக்கம்பக்க நகரங்களில் விசித்திரமான சம்பவங்கள்  நடக்கிறது. அதாவது திடீரென சிலர் கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்கள் வெட்ட வெளியில் எதையோ பார்த்ததும் தற்கொலை செய்துகொள்வதாகத் தெரிகிறது.

தோழியுடன் மருத்துவமனைக்குச் செல்லும் சாண்ட்ரா, அங்கு குழந்தை எப்படியிருக்கிறது என்று ஸ்கேன் செய்து பார்க்கிறாள். அப்போது திடீரென ஒரு பெண் கண்ணாடியில் தானே முட்டிக்கொண்டு தற்கொலை செய்வதைப் பார்த்து பயந்து நடுங்குகிறாள்.  சாண்ட்ராவும் அவளது தோழியும் காரில் வேகவேகமாக கிளம்புகிறார்கள். அப்போது திடீரென  ஏதோவொன்றைப் பார்க்கும் தோழி, காரை விபத்துக்கு உள்ளாக்கி தற்கொலை செய்கிறாள். 

அந்தக் கார் விபத்தில் இருந்து தப்பிக்கும் சாண்ட்ரா, அருகே உள்ள ஒரு வீட்டுக்குள் சென்று ஒளிகிறாள். அங்கே ஒரு சிறு கும்பல் இருக்கிறது.  வீட்டை இருட்டாக்கிகொண்டு உள்ளேயே வாழ்கிறார்கள். ஊரில் எல்லோருமே தற்கொலை செய்துகொள்கிறார்கள். வெட்டவெளியில் எதையோ பார்த்ததும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றுவதால் வெளிச்சத்தை  பார்க்கக்கூடாது என்பதற்காக வீட்டை இருட்டாக்குகிறார்கள். வெளியே செல்லும்போது  கண்களைக் கட்டிக்கொள்கிறார்கள். அங்கே இன்னொரு கர்ப்பிணிப் பெண்ணும் ஓர் அந்நியனும் வந்து சேர்கிறான்.

 

அந்நியனை சேர்க்கவேண்டாம் என்று சிலர் சொல்லியும் உள்ளே சேர்க்கிறார்கள். திடீரென இரண்டு பெண்களுக்கும் பிரசவ வலி ஏற்படுகிறது. இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. அப்போது அந்நியன் தன்னுடைய வேலையை ஆரம்பிக்கிறான்.  வீட்டில் மூடி வைக்கப்பட்டிருக்கும்  ஜன்னல்களை திறக்கிறான். அனைவரையும் கட்டாயப்படுத்தி வெளிச்சத்தைப்  பார்க்கவைத்து தற்கொலை செய்ய வைக்கிறான். 

அந்த கொடூர சூழலில் இருந்து சாண்ட்ரா, டாம் மற்றும் இரண்டு பச்சைக் குழந்தைகள் மட்டும் தப்பிக்கிறார்கள். வெளியுலகைப் பார்க்காமல் குழந்தைகளை கண்களைக் காட்டிக்கொண்டே வாழ்வதற்குப் பழக்குகிறாள். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் வீட்டைவிட்டு எங்கே வெளியே போனாலும் கண்களில் துணியைக் கட்டிக்கொண்டே வாழ்கிறார்கள். அப்போது திடீரென ஒரு ரேடியோ அலைவரிசை கேட்கிறது. இரண்டு நாட்கள் ஆற்று வழியில் பயணம் செய்தால் பாதுகாப்பான இடத்துக்குப் போகமுடியும் என்று தகவல் கிடைக்கிறது. அந்த நேரம் புதியவர்களுடன் ஏற்படும் மோதலில் டாம் கொல்லப்படுகிறான்

அதனால் கண்களைக் கட்டிக்கொண்டு சிறு படகில் சாண்ட்ரா மற்றும் இரண்டு குழந்தைகளும் படகில் ஏறுகிறார்கள். கண்களைத் திறக்காமலே அவர்கள்  ஆற்றைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்குப்  போய் சேர்ந்தார்களா என்பதுதான் கதை. இந்தப் படம் ஹிட் அடித்திருக்கும் நிலையில், படத்தைவிட, இந்தப் படத்தைப் பார்த்து நடத்தப்படும் சேலஞ்ச்தான் இப்போது பரபரப்பாகிவருகிறது.

அதாவது சாண்ட்ரா புல்லக் போன்று கண்களைக் கட்டிக்கொண்டே ரோட்டை கிராஸ் செய்வது, படிக்கட்டுகளில் ஏறுவது, ஆற்றில் நீந்துவது போன்ற சேலஞ்ச் விளையாட்டுகளை இளையவர்கள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோன்று இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் கண்களைக் கட்டிக்கொண்டு வாழும் சேலஞ்சும் பிரபலமாகிவருகிறது.

இவை எல்லாமே ஆபத்தான விளையாட்டு என்று காவல்துறை எச்சரிக்கை செய்தாலும், இளசுகள் கேட்பதாக இல்லை. பலரும் கை, கால்களை உடைத்துக்கொண்டாலும் இந்த விளையாட்டு தொடர்ந்து வருகிறது. இனியும் வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. உங்களுக்குத் தெரிந்த நபர்கள் யாரேனும் கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடினால், முதல் வேளையாக தடுத்து நிறுத்துங்கள். அதுதான், அவர்களுக்கு நீங்கள் செய்யும் நன்மை.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்