சமீபத்தில் கோயம்புத்தூரில் ஒரு காட்டேஜ் பற்றி வெளியான விளம்பரம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. கல்யாணம் ஆகாத இளம்வயது ஆண்களும் பெண்களும், உல்லாசத்தை அனுபவிப்பதற்காக கோயம்பத்தூரில் காட்டேஜ் ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி அந்த காட்டேஜிற்கு இளம்வயது ஆண்களும் பெண்களும் ஈ மொய்க்கும் அளவிற்கு வருகின்றனர். கல்யாணம் ஆகாமலே வரலாம் என்பதால் 16 வயதிலிருந்து இரு பாலர்களும் வருகை தருகின்றனர்.
இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் கோவை மாதர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரான ராமசாமியிடம் நடவடிக்கை எடுக்குமாறு மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், “கல்யாணம் ஆகாதவர்கள் உல்லாசம் அனுபவிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள காட்டேஜ் சமூக சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே கோவை மாவட்டத்தில் நிறைய பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
மேலும் இம்மாதிரியான தவறான முடிவுகளால் அவை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்திலேயே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை அரசு அனுமதிக்கக் கூடாது. ஆகவே காட்டேஜை இழுத்து மூடுவதற்கு உத்தரவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது சில நாட்களாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.