தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும் `கோல்ச்சிசின்’ (Colchicine) என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் பூக்கும் இந்தப்பூ வேலிகளில் மட்டுமல்ல சாலையோரங்கள் மற்றும் காடுகளிலும் படர்ந்து வளரக்கூடியது. குறிப்பாக, மலைகள் மற்றும் சரிவுகளில் காணப்படும் இந்த மலர் அழகிய விரல்களைப் போலவும், சுடர்கள்போலவும் காட்சியளிக்கும். காந்தள் மலர்ச் செடியின் வேர்ப்பகுதியை `கண்வலிக்கிழங்கு’, `கலப்பைக்கிழங்கு’, `வெண்தோன்றிக்கிழங்கு’, `கார்த்திகைக்கிழங்கு’ என்று அழைக்கிறார்கள்.

 செங்காந்தள் மலர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லை. இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று சொல்கிறார்கள், அதனால் இதை `கண்வலிப்பூ’ என்றும் அழைக்கிறார்கள்.

செங்காந்தள் மலர் புற்றுநோய்க்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோய் பரவாமல் தடுக்கும் கால்சிசின் (colchicine) செங்காந்தளின் விதை, கிழங்கில் அதிகமாக உள்ளது. இதற்காக செங்காந்தள் செடியின் விதையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றன.

செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை வாரம் ஒருநாள் தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் எலி, வண்டு, பூரான், சாரைப்பாம்பு கடிபட்டவர்களுக்கு விஷத்தன்மை குறைந்துவிடும். மேலும், இந்தத் தைலத்தை மேகநோய், சொறி, சிரங்கு, படை உள்ளவர்கள் குளித்து வந்தால் நோய் குணமாகும். இத்தகைய சூழலில் புளி, புகைப்பிடித்தல், போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது.

செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என மூன்று நாள்கள் சாப்பிட்டுவந்தால், விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.

வாதநோய், மூட்டுவலி, தொழுநோயைக் குணப்படுத்துவதுடன் பால்வினை நோய், வெண்குஷ்டம் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. பிரசவவலியைத் தூண்டும் நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். உடனடியாக நஞ்சுக்கொடி இறங்கிவிடும்.
செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. 

நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்