மாடித் தோட்டத்திற்கு நாட்டு காய்கனிகள் மிகச் சிறந்தவை. செடிக்காய்களான வெண்டைக்காய், மிளகாய், கொத்தவரங்காய் ஆகியவை சின்னபைகளில் நேரடியாக விதைக்கலாம். இவற்றில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி மட்டும் விதைத்து நாற்று மூலம் நடவு செய்ய வேண்டும். அவரை, பூசணி, சுரைக்காய், புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை பெரிய பை அல்லது 20லிட்டர் வாளிகளில் நடலாம். இவற்றில் அவரை, புடலங்காய், பாகற்காய் கொடி காய்களாகும், அவற்றை பந்தலிட்டு படரவிட வேண்டும். அவரைகாயில் கொடியும் உள்ளது, செடியும் உள்ளது.
அருகிலுள்ள அக்ரோ-ஸ்டோர்களில் விதைகள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவற்றை எப்படி விதைப்பது, பாதுகாப்பது போன்ற அனைத்து விவரங்களும், இந்த வலைதளத்தின் வேளாண்மை பகுதியில் (பண்ணை சார்ந்த தொழில்கள்-வீட்டுக்காய்கறி தோட்டம்) விவரமாக கிடைக்கும். மாடியில் காய்கறி பயிரிட நீங்கள் மண் அல்லது சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மக்கிய தேங்காய்நார் கம்போஸ்ட்டை பயன்படுத்துங்கள். இவை மண் இருகுவதைக் குறைப்பதோடு, தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும்.
காய்கறி செடிகள் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை பலன் கொடுக்கும். அதன்பின் பைகளில் உள்ள மண்ணை மாற்றி வேறு விதைகளை நடவேண்டும். மாடியில் பைகள் வைக்கும் போது துளைகளின் வழியே தண்ணீர் வெளியேறும் போது மாடியில் தேங்கக்கூடாது. சட்டமிடப்பட்ட மரப்பலகைகளில் பைகளை வைத்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேறி விடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பைகளை இடம் மாற்றி வைக்க வேண்டும். மண்ணை அதிகப்படுத்தினால் எடை கூடும். மூன்றில் ஒரு பங்கு மண்ணாகவும், மீதி இரண்டு பங்கு தேங்காய் நார் துகள்களையும் பயன்படுத்துவது நல்லது.