உடல் ஆரோக்கிய விதிப்படி குறிப்பிட்ட உயரத்துக்கு குறிப்பிட்ட எடை இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விகிதம் மாறும் போது உடலில் நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிக எடை அல்லது அதிக உயரம் உடைய சிறுவர், சிறுமியர்களுக்கு சிறுநீரகப் புற்றுநோய்க்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் டென்மார்க் ஆய்வாளர்கள் கோபன் ஹேகன் பள்ளி ஆரோக்கியப் பதிவேட்டில் இருந்து 1930 முதல் 1985-ஆம் ஆண்டு வரை பிறந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரை அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் 7முதல் 13 வயதுக்குட்பட்டவர்களாக இருந்த காலகட்டத்தில் அவர்களின் எடை மற்றும் உயரத்தை ஆய்வு செய்தனர். அவர்களில் எடைக்குப் பொருந்தாத உயரத்திலோ, அல்லது உயரத்துக்கு பொருந்தாத எடையிலோ இருந்த பலர் தங்களது 32-வது வயதில் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர்.
புற்றுநோய்க் கட்டிகள் வளர காலம் எடுத்துக்கொள்ளும் என்ற கோட்பாட்டின் படி சிறு வயதில் அதிக எடை மற்றும் உயரம் என்பது பின்னாளில் சிறுநீரகப் புற்றுநோய்க்கான ஒரு காரணியாக இருப்பதைக் கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.