சுண்டல் வகைகளை வேக வைக்கும்போது உப்பு சேர்த்தால் சரியாக வேகாமல் போக வாய்ப்பு அதிகம். எனவே சுண்டல் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பாக உப்புத் தூளைத் தூவி இறக்கினால் சுண்டல் மெத்தென்று இருக்கும்.
இளம் சூடான நீரில் சிறிதளவு மஞ்சள் தூளும் உப்பும் சேர்க்கவும். இதில் கீரையை கழுவி சமைத்தால் கீரையின் நிறம் மாறாமல் பசுமையாக இருக்கும். பூச்சிக்கொல்லிகளால் நமக்கு ஏற்படும் பாதிப்பும் தடுக்கப்படும்.
மசாலா கடலைதான் வீட்டில் செய்வோம். ஒரு மாறுதலுக்கு வேகவைத்த மொச்சையிலும் இதே முறையில் மசாலா மொச்சை செய்யலாம். சாம்பார் செய்து இறக்கி வைப்பதற்கு முன்பாக சிறிதளவு வெந்தயப் பொடி தனியா பொடி சேர்த்தால் சாம்பார் மிகவும் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டையும் நறுக்கிச் சேர்த்து வைத்தால் குழம்பில் கசப்பே தெரியாது. வெல்லப்பாகு, சர்க்கரைப்பாகு காய்ச்சும்போது பாகு பதம் வந்ததும் எலுமிச்சை சாறு சில துளிகள் விடுங்கள். இப்படி செய்தால் பாகு முற்றாது.
வெங்காயம் சீக்கிரமே வதங்க ஒரு யோசனை. எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு சிறிதளவு உப்பைத் தூவி வதக்கினால் சிறிது நேரத்திலேயே வெங்காயம் பொன்னிறமாக வதங்கிவிடும்.
பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை அதில் சேர்த்தால் பட்டாணி வெந்ததும் வாசனை கூடுதலாக இருக்கும். உளுந்துவடை செய்யும் போது மாவு மீந்துவிட்டால் அந்த மாவுடன் தேவையான அளவு அரிசி மாவு, உப்பு, சீரகம், நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கலந்து தேன் குழல் நாழியில் நிரப்பி பிழிந்து எடுத்தால் இன்ஸ்டன்ட் தேன்குழல் தயார்.
தோசைக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைக்கவும். இந்த மாவில் தோசை வார்த்தால் மெல்லிதாக தோசை வரும். தோசை மாவுடன் தேங்காய் பால் சேர்த்து தோசை வார்த்தால் தோசையின் மணம் ஊரையே கூட்டும். சுவையும் தூக்கலாக இருக்கும்.