இன்றைய உலக சூழலில், சிங்கிளாக வாழ்பவர் கூட பலவித சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இதில், திருமணமான நபர் என்றால், அவர் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லி மாளாது.
அப்படி திருமணம் செய்துகொண்டு, குடும்ப பாரம் தாங்காமல் அவதிப்படும் நபர்களுக்கு பலவித சலுகைகளை ஹங்கேரி அரசு அறிவித்துள்ளது. ஆம். திருமணம் செய்துகொண்டால் இந்திய ரூபாய் மதிப்பில் 25 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும், 40 வயதுக்கு மேலான நபர்களுக்கு இந்த அறிவிப்பு செல்லாது. இதுவே அவர்கள் திருமணம் செய்து, 3 குழந்தைகள் பெற்றதும் இந்த கடன் ரத்து செய்யப்படும். இது தவிர, நான்கு மற்றும் அதற்கு மேல் குழந்தை பெற்றிருந்தால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
இதேபோல, 3 அல்லது அதற்கும் மேல் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, 7 இருக்கைகள் கொண்ட வாகனம் வாங்க, இந்திய ரூபாய் மதிப்பில் 6,28,000 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1980ம் ஆண்டு முதலாக, ஹங்கேரியின் மக்கள் தொகை, ஆண்டுக்கு 28,000 என்ற வீதத்தில் சரிந்து வருகிறது. இதனால், மக்கள் தொகையை அதிகரிக்கும் பொறுப்பு அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
பலர் திருமணம் செய்துகொள்வதில் தயக்கம் காட்டுவதால்,
அவர்களை ஊக்குவிக்க வேண்டிய வகையிலும், மேற்கண்ட சலுகைகளை
அறிவிக்க வேண்டியுள்ளதாக,
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் குறிப்பிட்டுள்ளார்.