அல்வா செய்து கொடுக்க கஷ்டப்பட்டு நிறையத் தாய்மார்கள் அல்வா கொடுக்கிறீர்களாம். சில குழந்தைகள் சொல்கிறார்கள். அல்வா செய்வது ஒன்றும் கடினமில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அரை மணி நேரத்துக்குள் அல்வா செய்துவிடலாம். அவ்வளவு ஈஸி ரெசிபிகள் இருக்கின்றன. உங்களால் நிச்சயம் செய்துவிட முடியும்.
குழந்தைகளுக்கு என்பதால் ஆரோக்கியம் தரும் டேஸ்டி அல்வா ரெசிபிகளைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.
அல்வா ரெசிபிகளை பார்க்கும் முன் கவனிக்க…
இனிப்பு தேவைக்கு வெல்லம், பனஞ்சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை என எதுவேண்டுமானாலும் சேர்க்கலாம்.
நட்ஸ் தேவைக்கு, முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை, தேங்காய் துண்டுகள், பேரீச்சை, வால்நட் என உங்களது விருப்பத்துக்கு சேர்க்கலாம்.
1 வயது + குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
8+ மாத குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால், டேட்ஸ் சிரப் மட்டுமே சேர்க்கலாம்.
இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?
நட்ஸூக்கு பதிலாக நட்ஸ் பவுடர் சேர்க்கலாம். வெல்லம், சர்க்கரை என மற்ற இனிப்புகள் சேர்க்க கூடாது.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?
6-8 மாத குழந்தைகளுக்கு அல்வா தர வேண்டாம்.
பசும்பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.
விருப்பப்பட்டால் கடையில் இனிப்பு இல்லாத கோவா வாங்கியும் சேர்க்கலாம்.
குழந்தைகளுக்கு என்பதால் எந்த ஃபுட் கலரும் இங்கு சேர்க்கவில்லை. உங்கள் விருப்பத்துக்கு நீங்கள் நிறம் சேர்க்கலாம்.
பீட்ரூட் ஜூஸ் கொஞ்சம் சேர்த்தால் சிவப்பு நிறம் கிடைக்கும். இது குழந்தைக்கு பாதுகாப்பானது.
செயற்கை நிறங்களைத் தவிர்க்கவும்.
சுவையான, ஆரோக்கியமான சிம்பிள் டேஸ்டி 5 அல்வா ரெசிபி
#1. உருளைக்கிழங்கு அல்வா
Image Source : archans kitchen
தேவையானவை
வேகவைத்து அரைத்த உருளைக்கிழங்கு – 1 கப்
பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை – 1 கப்
பால் – ¼ கப்
நெய் – 2 ஸ்பூன்
நட்ஸ் – வறுத்து அலங்கரிக்க
செய்முறை
பாலை நன்கு காய்ச்சவும்.
காய்ச்சிய பாலில் சர்க்கரை போட்டு கொதிக்கவிடவும்.
சர்க்கரை கரைந்ததும் உருளைக்கிழங்கு கூழை சேர்த்துக் கிளறவும்.
அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் நட்ஸை வறுத்துப் போடவும்.
உருளை அல்வா தயார்.
இதையும் படிக்க : ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்
#2. ராகி அல்வா
Image Source : veg recipes of india
தேவையானவை
ராகி மாவு – 2 கப்
வெல்லம் – 3 கப்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
முந்திரி – 12
நெய் – கால் கப்
செய்முறை
ராகி மாவைத் தண்ணீர் விட்டு கெட்டியான மாவு பதத்தில் பிசையவும்.
தோசைக் கல்லில் தட்டி மிதமான சூட்டில் சுட்டெடுக்கவும்.
இருபுறமும் திருப்பி போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் ஆறவைத்து, துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
வெல்லத்தை 1 கப் தண்ணீரில் கரைத்து, லேசாக கொதிக்க விடவும்.
கொதிக்க விட்டதை வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் ஏற்றி கம்பி பதம் வரும் வரைக் கொதிக்க விடவும்.
இதனுடன் பொடி செய்த ராகி மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி சேர்க்கவும்.
இந்தக் கலவையுடன் தேங்காய்த் துருவல் நெய் சேர்த்துக் கலக்கவும்.
நன்கு சுருண்டு வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கலாம்.
சத்தான ராகி அல்வா ரெடி.
#3. கேரளா நேந்திரப்பழம் அல்வா
Image Source : awesome cuisine
தேவையானவை
நேந்திரம் பழம் – 4
வெல்லம் – அரை கிலோ
நெய் – 3 ஸ்பூன்
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
முந்திரி – 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1 ஸ்பூன்
செய்முறை
நேந்திரப்பழத்தை ஆவியில் வேகவைக்கவும்.
தோல் உரித்து, பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
வெல்லத்தை 1 கப் தண்ணீரில் கரைத்து, லேசாக கொதிக்க விடவும்.
கொதிக்க விட்டதை வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் ஏற்றி கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
நேந்திரப்பழ விழுதை இதனுடன் கலந்து நன்கு கிளறவும்.
அல்வா பதம் வந்ததும், ஏலத்தூள், தேங்காய் துருவலும் நெய்யில் முந்திரியை வறுத்து இதில் சேர்க்கவும்.
சுவையான கேரளா ஸ்பெஷல் நேந்திரப்பழ அல்வா ரெடி.
இதையும் படிக்க : பேபீஸ் ஸ்பெஷல்… 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…
#4.பூசணி அல்வா
Image Source : milkmaid
தேவையானவை
துருவிய வெள்ளை பூசணி – 1 கப்
ஏலத்தூள் – 1 டீஸ்பூன்
முந்திரி – 5
பாதாம் – 5
நெய் – அரை கப்
பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை
துருவிய பூசணியை பிழியவும். ஏனெனில் அதில் நீர் இருக்கும்.
சர்க்கரையை 1 கப் தண்ணீரில் கரைத்து, லேசாகக் கொதிக்க விடவும்.
கொதிக்க விட்டதை வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் ஏற்றி கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
சர்க்கரை பாகில் துருவிய பூசணியைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.
நெய் சேர்த்து கிளறவும்.
சுருண்டு வரும் முன் நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்து இதில் சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் இறக்கிவிடலாம்.
சுவையான பூசணி அல்வா தயார்.
#5.ரவை அல்வா
Image Source : Padhuskitchen
தேவையானவை
பசும்பால் – 1 கப்
பாலிஷ் செய்யாத சர்க்கரை – அரை கப்
வறுத்த ரவை – ¼ கப்
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி, பாதாம், உலர்திராட்சை – 2 ஸ்பூன்
செய்முறை
சிறிதளவு காய்ச்சிய பாலில் ரவை ஊறவைக்க வேண்டும்.
ஊறவைத்ததை அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கப் பால் நன்றாகக் கொதித்தவுடன் சர்க்கரை போட்டு நன்கு கலக்கவும்.
சர்க்கரை கரைந்துவிட வேண்டும்.
அரைத்த ரவையைப் போட்டு கிளற வேண்டும்.
அல்வா பதம் வரவேண்டும்.
வந்ததும் நெய்யில் நட்ஸ், உலர்திராட்சை வதக்கி அல்வாவில் போட வேண்டும்.
சுவையான ரவை அல்வா தயார்.
இதையும் படிக்க : 8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி