குழந்தையின் ஒவ்வொரு உறுப்பையும் சுத்தம் செய்வது அவசியம். ஆனால், அனைத்து உறுப்புகளையும் சாதாரணமான முறையில் சுத்தம் செய்ய முடியாது. சில கவன முறைகள் அவசியமாகிறது. சில உறுப்புகளை மிதமான, கவனமான முறையில் கையாள்வதே நல்லது. அந்த வகையில் நாக்கு மற்றும் காதுகளை எவ்வாறு சுத்தம் செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.
நாக்கை சுத்தம் செய்வது எப்படி?
பொதுவாகப் பற்கள், ஈறுகளை சுத்தம் செய்ய கவனம் செலுத்துவோமே தவிர நாக்கை விட்டு விடுவோம். தாய்ப்பால், புட்டி பால் குடிக்கும் குழந்தைகளின் நாக்கில் வெள்ளையாக மாவுப் போல படியும்.
குழந்தை சிரிக்கும்போது நாக்கை சுத்தம் செய்ய முயற்சித்தால், குழந்தை முகத்தைத் திருப்பிக்கொள்ளும். தாங்களாக வலுகட்டாயமாக நாக்கை சுத்தம் செய்ய முயற்சித்தாலும் குழந்தை காண்பிக்காது.ஆனால், நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் கிருமிகளின் பாதிப்பு இருக்கும்.
நாக்கை சுத்தம் செய்ய டிப்ஸ்
சுத்தமான, சாஃப்டான துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். இளஞ்சூடான தண்ணீரில் துண்டை நனைத்துக் கொள்ளுங்கள். நனைத்த துண்டை, உங்கள் விரலில் சுற்றி குழந்தையின் நாக்கை சுத்தப்படுத்துங்கள். தண்ணீர் மிகவும் சூடாக இருக்க கூடாது.
எப்போதும் குழந்தையின் நாக்கை சுத்தம் செய்ய எளிமையான வழி, குழந்தையின் கீழ் உதடை கீழ் நோக்கி ஹோல்ட் செய்த பின் நாக்கை சுத்தப்படுத்துங்கள்.
சில குழந்தைகளுக்கு நாக்கில் மாவு போல மிக அழுத்தமாக ஒட்டி இருக்கும். அதை எடுக்க, இளஞ்சூடான நீரில் சிறிதளவு கல்லுப்பு போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் துண்டை நனைத்து குழந்தையின் நாக்கை சுத்தம் செய்யலாம். அழுத்தமான மாவு போல ஒட்டியிருப்பதும் நீங்கும்.
கவனம். குழந்தையின் நாக்கு மிகவும் மென்மையானது என்பதால் மிதமான அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்யுங்கள்.
பால், உணவு சாப்பிட்ட பிறகு குழந்தையின் கன்னம், வாய், பற்கள், ஈறுகள், நாக்கு ஆகியவை சுத்தம் செய்யலாம்.
காதுகளை சுத்தம் செய்வது எப்படி?
Image Source: Parents Magazine
காதுகள் மிகவும் சென்சிடிவ்வான உறுப்பு. காது வலி வந்தால்தான் தெரியும். அந்த வலி மிகவும் கொடுமையானது என்று. காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்னை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.
இதையும் படிக்க: குழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்… தீர்வு என்ன?
காதுகளை சுத்தம் செய்ய டிப்ஸ்…
முதலாவதாக, தெரிந்து கொள்ளுங்கள். பட்ஸ், ஹேர் பின், கொண்டை பின் என எதுவும் குழந்தைக்கு பயன்படுத்தவே கூடாது. இதெல்லாம் குழந்தையின் சின்ன காதுகளைப் பாதிக்கும்.
எந்தவித கூர்மையான பொருட்களையும் குழந்தையின் காது அருகில் தயவு செய்து கொண்டு செல்லாதீர்கள்.
டவல் (துண்டு), ஒரு முனையை எடுத்துக்கொண்டு அதை மெல்லியதாக உருட்டி, குழந்தையின் காதில் விட்டு ஈரத்தை எடுக்கலாம். குழந்தை குளித்த பின் செய்ய வேண்டிய முறை இது.
குழந்தையின் காது அழுக்காக இருந்தால், துணியை ஈரம் செய்துவிட்டு காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும். சோப் பயன்படுத்தவே கூடாது.
காதுகளின் உள் மடலையும் வெளி காதையும் மென்மையான, ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும்.
ஒவ்வொரு முறை குழந்தை குளித்த பின்னும் துண்டால் காதின் ஈரத்தை ஒத்தி ஒத்தி எடுக்கலாம்.
குழந்தை காதில் ஏதோ அசௌகரியமான உணர்வு உணர்ந்தாலோ, காதில் வலி இருப்பது போல அழுதாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
காதை சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள்.
சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் காதில் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.
இதையும் படிக்க: குழந்தையின் கண்கள் மற்றும் மூக்கை சுத்தம் செய்வது எப்படி?
நகத்தை சுத்தம் செய்வது எப்படி?
Image Source: OnBuy
குழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா… நிச்சயம்… நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.
இதையும் படிக்க: கிருமிகள் தாக்காமல் குழந்தைகளின் துணியை எப்படி பராமரிப்பது?
பராமரிக்க டிப்ஸ்
குழந்தை குளித்த பிறகு, நகங்கள் சாஃப்டாக இருக்கும் என்பதால் அப்போது டிரிம்மரை வைத்து நகத்தைத் தேய்க்கலாம்.
குழந்தை தூங்கும்போது, நகம் வெட்டலாம் அல்லது ட்ரிமரால் தேய்க்கலாம். குழந்தை தூங்கவில்லை என்றால், குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டலாம்; சுத்தம் செய்யலாம்.
நகத்தை வெட்டுகிறேன் என்று குழந்தையின் சதைப் பகுதியை காயப்படுத்தி விடாதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு நகத்தை வெட்டுவது சரி.
நகம் வெட்டினால் அந்த இடம் கூர்மையாக இருக்கும். ஆடையின் நூலில் குழந்தையின் சின்ன சிறு விரல் நகம் சிக்கலாம். எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள்.
சில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அவர்களுக்கு நகம் கட் செய்யும் போது, உதவிக்கு ஒரு நபரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் குழந்தையின் கவனத்தைத் திருப்ப, இன்னொருவர் குழந்தையின் நகங்களை சுத்தம் செய்யலாம்.
நகம் கட் செய்யும்போது, தவறுதலாக, தெரியாமல் குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கீறலோ ரத்தமோ வந்தால் உடனடியாக பஞ்சை வைத்து அதை அப்படியே அழுத்திப் பிடியுங்கள். மிதமாக அழுத்திப் பிடிக்கவும்.
சில அம்மாக்கள் குழந்தையின் நகங்களை தன் வாயால் கட் செய்வார்கள். இது தவறு. அப்படி செய்ய கூடாது. இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் கிருமி பாதிப்புகள் வரும்.
குழந்தையின் வாயை சுத்தம் செய்வது எப்படி?
Image Source: The Champa Tree
ஒவ்வொரு முறை குழந்தைக்கு பால் கொடுத்தப் பின்னரும் ஈரத்துணியால் வாய், ஈறு, நாக்கு ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
பற்கள் ஒன்று, இரண்டு முளைத்த குழந்தைகள் என்றால், மிகவும் சாஃப்டான பிரஷ் வாங்கி மிதமாக பற்களை சுத்தம் செய்யவும். சர்குலர் மோஷனாக குழந்தையின் பல்லை சுத்தம் செய்யுங்கள்.
பழுப்பு அல்லது வெள்ளை நிற புள்ளிகள் ஏதேனும் வாயில் வந்தால் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்கவும்.
வாய் துர்நாற்றம், பற்சொத்தை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரிடம் காண்பிக்கவும்.
0-1 வயது வரை குழந்தைக்கு இனிப்பு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டாம்.
1-3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை சாக்லேட், கேண்டி போன்றவற்றைக் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெல்லம், பனங்கற்கண்டு, பனை சர்க்கரை தரலாம்.
பல் முளைக்கும் குழந்தைகளுக்கு, டீத்திங் பொம்மைகள் வாங்கித் தரலாம். ஃபிங்கர் ஃபுட்ஸ் செய்து கொடுக்கலாம்.
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை எனில், சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தை எனில், வாய் கொப்பளித்து துப்புவதைக் கற்று கொடுங்கள்.
குழந்தைகளுக்கு எப்போதுமே பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது. அதிக அளவு பேஸ்ட் தேவையில்லை.
பல் தேய்த்த பிறகு வாயை நன்றாகத் தண்ணீரால் கழுவி, கொப்பளித்துத் துப்ப வேண்டும் என அறிவுறுத்துங்கள்.
காலை, இரவு என இரண்டு வேளையும் பல் துலக்க கற்றுக் கொடுக்கவும்.
ஒவ்வொரு முறை எந்த உணவு சாப்பிட்ட பின்பும், வாய் கொப்பளித்து துப்பும் பழக்கத்தை குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.
இதையும் படிக்க: 3 மற்றும் 4 மாத குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்?