சுகாதாரமற்ற நீரால் தயாரிக்கப்படும் பொருள்களைச் சாப்பிட்டால், என்ன விளைவுகள் உண்டாகும் என்பதற்கு, சமீபத்தில் நாகை மாவட்டத்தில் நடந்த சம்பவம் சாட்சியமாய் இருக்கிறது. சீர்காழி அருகே, வானகிரி என்னும் கிராமத்தில் நடந்த திருவிழாவில், ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 90-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சுகாதாரமற்ற நீரில் தயாரிக்கப்பட்டதால்தான் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
”டயேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீரில் இருந்துதான் உருவாகின்றன. அதனால் குடிக்கும் நீரை மிகவும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும். வாட்டர் டேங்குகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வெளிப்புறங்களில் சிறுநீர், மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர, குடிக்கும் நீரை நன்றாகக் கொதிக்கவைத்துப் பருக வேண்டும். தேவைப்படும் நேரத்தில் கொதிக்க வைக்காமல், முன்பே தேவையான அளவு கொதிக்கவைத்து, ஆறவைத்துத் தேவைப்படும்போது குடித்துக்கொள்ளலாம்.
பொதுவாகக் கோடைக்காலங்களில் தேவைக்கதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். அவை சுகாதாரமான குடிநீராக இருக்க வேண்டியது அவசியம். தவிர, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைத் தவிர்த்து, இளநீர், மோர், தயிர் போன்றவற்றை அருந்த வேண்டும்.