கொள்ளுப் பருப்பை ஊறவைத்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுக்கு உண்டு. கொள்ளுவை நீரில் போட்டு கொதிக்கவைத்த நீரை அருந்தினால் சளி, ஜலதோஷம் குணமாகும்.
வயிற்றுப் போக்கு,வயிற்றுப் பொருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும் கொள்ளு நீர் பெண்களின் வெள்ளைப் போக்கையும் மாதவிலக்கு குறைபாட்டையும் கட்டுப்படுத்துகிறது.
எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது. குளிர் காலத்தில் அனைவருக்கும் அடிக்கடி சளிப்பிடிக்கும். இந்தக் காலங்களில் கொள்ளு சூப் குடித்துவந்தால் எளிதில் சளி பிடிக்காது. இரவு ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு நிச்சயம் எடையும் தொப்பையும் குறைந்துபோகும். கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு, கொள்ளு சூப் போன்றவகைகளில் எள்ளைப் பயன்படுத்தலாம்.
சிலருக்கு எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால்கூட நாள் முழுவதும் பசி தோன்றாது. இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல பசி உண்டாகும்.