அங்கே கழிப்பறை வசதி இருக்கிறதா..? இதை கேட்பது உங்கள் உரிமை, பண்பாடு..

அங்கே கழிப்பறை வசதி இருக்கிறதா..? இதை கேட்பது உங்கள் உரிமை, பண்பாடு..

ஆனால், அதுகுறித்து பேசுவதற்கு கூச்சப்பட்டு அமைதியாக இருப்பார்கள். அந்த கூச்சம் தேவையில்லை, அதனை கேட்டுப் பெறுவது பண்பாடு, உரிமை என்று ஓர் பதிவு வெளியிட்டுள்ளார் ஆர்த்திவேந்தன். இதனை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் பூ.கொ.சரவணன். நீங்களும் படித்துப் பாருங்கள். 

இப்போதாவது இதைக்குறித்துப் பேச எனக்குப் போதுமான தைரியம் வந்திருக்கிறது. மனதில் பட்டதை அப்படியே சொல்லப்போகிறேன். என்னை யாரேனும் இரவு விருந்துக்கு அழைத்தாலோ, என்னை மொழிபெயர்ப்பு பணி சார்ந்து அழைத்தாலோ நான் கேட்கிற முதல் கேள்வி அது தான். ஒரு வங்கிக்கு போவது என்றாலும், ஷாப்பிங் செய்ய அழைக்கப்பட்டாலும் அதே கேள்வி தான் முதலில் வந்து விழும். “நாம போற இடத்துல ரெஸ்ட் ரூம் இருக்கா?”. 

நான் ஒரு பேருந்தில் பயணிக்க நேரிடுகிற போதெல்லாம், அந்தப் பேருந்து ஓட்டுநர் நான் சொல்கிற இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்துவார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். இதை வாசிக்க எளிமையாக இருந்தாலும், இதற்காக நான் மேற்கொள்ளும் போராட்டங்கள் வலிமிகுந்தவை. அந்தத் தருணங்களில் நான் எதிர்கொண்டவை ஏளனம் மிகுந்த பார்வைகள். எதோ கேட்க கூடாததைக் கேட்டுவிட்டதைப் போல என்னைப் பார்ப்பார்கள்.

இதற்கு முன் வேலை பார்த்த அலுவலகத்தில் அடிக்கடி என்னுடைய இருக்கை காலியாக இருப்பதைக் கண்ட என்னுடைய பாஸுக்கு என் மீது எக்கச்சக்க சந்தேகங்கள். அவர் கழிவறையில் என் காதலனுடன் நான் அலைபேசியில் கதைத்துக் கொண்டிருப்பதாகச் சந்தேகப்பட்டார். ஒருவர் அத்தனை முறை கழிப்பறையைப் பயன்படுத்த நேரிடும் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. 

என்னுடைய திருமணக் கொண்டாட்டங்களின் போது என்ன ஆடை அணிய வேண்டும், எப்படி மணவிழா நடக்க வேண்டும்என்றெல்லாம் எனக்குக் கனவுகள் இருக்கவில்லை. எப்படிப் பல மணிநேரம் நின்று கொண்டே இருப்பது என்கிற பேரச்சம் மட்டுமே என்னைச் சூழ்ந்தது. கல்யாண ஆடையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் மணப்பெண்ணாக நின்றுகொண்டிருக்கும் நான், சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் என்னுடைய கல்யாணப் புடவையைப் பல நூறு மக்கள் முன்னால் ஈரப்படுத்தாமல் எப்படித் தப்பிப்பது எனத் தவித்துப் போனேன். 

என்னுடைய சகாக்கள் என்னைக் கேலி செய்வதிலிருந்து தப்பிக்க நான் மூன்று மாதகாலம் பணி விடுப்பு எடுத்திருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட வெம்மை மிகுந்த அனுபவங்கள் குறித்து ஒரு தனிப்புத்தகமே எழுதலாம். ஒரு முறை ஒரு மருத்துவமனைக்குப் போயிருந்தேன். மருத்துவரின் அறைக்குள் மட்டுமே கழிப்பறை இருந்தது.

அதைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. அவசரமாகக் கழிப்பறையைத் தேடுகிற போது பக்கத்தில் இருந்த உணவகம் கண்ணில் பட்டது. மருத்துவமனைக்கு வருகிற போதெல்லாம், அந்த உணவகத்தின் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியது கட்டாயமானது. அப்போதெல்லாம் எனக்கு அந்த உணவகத்தில் இருந்து எதையாவது பார்சல் வாங்கிக்கொள்வது வழக்கமானது. 

ஒரு பேருந்தில் 9 மணிநேரம் பயணிக்க நேரிட்டது. நான் பல முறை கெஞ்சி கூத்தாடியும் பேருந்து ஓட்டுநர் வண்டியை நிறுத்தவில்லை. கண்களில் கண்ணீர் முட்ட நின்ற போதும் அவரின் மனம் இரங்கவில்லை. இந்த உலகத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு என்னைத் தள்ளும் சிறுநீர்ப்பை எனக்கு மட்டும்தான் உண்டா என நான் வியந்திருக்கிறேன். 

ஒரு ஐஸ்க்ரீம் கடைக்குப் போன போது அங்கே கழிப்பறை இல்லை என்பதைக் கண்டதும் ஏமாற்றம் ஏற்பட்டது. அங்கே இருந்த பணிப்பெண் என்ன செய்வார் என்கிற கவலையோடு கேட்டேன். அவரோ அருகில் இருந்த வணிக வளாகத்துக்குச் செல்ல வேண்டும் என்றார்.

அதுவும் உணவு இடைவேளையின் போது மட்டுமே போகமுடியும், மற்ற நேரங்களில் கடையைவிட்டு வெளியேறினால் உடனே முதலாளி அலைபேசியில் அழைத்து விடுவாராம்? சிசிடிவி புண்ணியத்தில் இந்தச் சித்திரவதை அனுதினமும் நடக்கிறது என அந்தப் பணிப்பெண் விவரித்தார். இப்படி மனதை பிழியும் பல்வேறு கதைகளைக் கேட்டுவிட்டேன். 

ஏன் நம்மூரில் ஒரு கழிப்பறை கேவலமாகப் பார்க்கப்படுகிறது? ஒருமுறை ஒரு நேர்முகத்துக்குச் சென்று இருந்தேன். அவர்கள் நேர்முகத்தை முடித்து இருந்தார்கள். நான் உடனே இருக்கையை விட்டு எழவில்லை. நீங்கள் கிளம்புங்கள் என்று அவர்கள் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். என்னைப் பதற்றம், படபடப்பு, நடுக்கம் சூழ்ந்து கொண்டன.

நான் உடனே எழுந்தால் சிறுநீர் கசிந்து என் ஆடையை ஈரப்படுத்தி விடும் என்கிற அச்சம் என்னைப் பிடுங்கி தின்றது. என் காதலனிடம், ‘நான் இப்படி இருக்கிறதால என்னை வெறுத்துடாதே’ என்று முட்டாள்தனமாகக் கேட்கிற அளவுக்கு நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். 

இப்படிப்பட்ட குற்ற உணர்ச்சியைப் பல பேர் சுமந்து கொண்டே வாழ்கிறார்கள். ஏன்? இப்படி நரக வேதனையை மௌனமாக ஏன் சகித்துக் கொள்ளவேண்டும்? “நான் ரெஸ்ட்ரூமை யூஸ் பண்ணிக்கவா?” என்று கேட்க ஏன் இப்படித் தயங்க வேண்டும்? 

என் வீடு வரும் வரை நான் ஏன் சிறுநீரை அடக்கிக்கொண்டு பரிதவிக்க வேண்டும்? ஒரு தனியார் நடத்துகிற அலுவலகத்தில், உணவகத்தில், பள்ளியில் கழிப்பறை இருந்தாலும் அதைத் தனியார் சொத்து என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் வேலை பார்க்கவில்லை, அல்லது அந்த இடத்திற்குச் சொந்தக்காரர் இல்லை என்பதற்காகவே கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது மனிதத்தன்மையற்ற செயல்.

எனக்கு இருக்கும் ‘uக்ஷீவீஸீணீக்ஷீஹ் வீஸீநீஷீஸீtவீஸீமீஸீநீமீ’ (சிறுநீர் அடக்க முடியாமை) மோசமான ஒன்றில்லை, அதைக் குறித்துச் சொரணையற்று இருப்பதே மோசமானது என உணர்ந்து கொண்டேன். 

சமீபத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஆய்வாளர் ஒரு மொழிபெயர்ப்பை செய்யச் சொன்னார். அதற்காக அவர் வர சொன்ன அலுவலகத்தில் கழிப்பறை இல்லை என்று தெரிந்தது. அங்கே வர முடியாது, கழிப்பறை இருக்கும் அலுவலகத்துக்குச் சந்திப்பை மாற்ற சொன்னேன். அவரும் அப்படியே செய்தார். என்னைப் போலவே சிறுநீரை அடக்க முடியாத மருத்துவப் பிரச்சினை உங்களுக்கும் இருக்கிறது என்றால் நான் சொல்வதைக் கேளுங்கள்.

உங்களுக்கு உரிமை இல்லாத இடத்தில் கழிப்பறையைப் பயன்படுத்துவது ஒன்றும் தவறில்லை. அங்கே யாரையுமே தெரியாவிட்டாலும் கழிப்பறையைப் பயன்படுத்துவதில் பிழையில்லை. வேலைக்கு நடுவே எத்தனை முறை வேண்டுமானாலும் எழுந்து போய்க் கழிப்பறையைப் பயன்படுத்துவது ஒன்றும் பாவமில்லை. அலுவலகக் கூட்டத்தில் உங்கள் பாஸை இடைமறித்து அனுமதி கேளுங்கள். பேருந்தில் பயணிக்கிற போது ஓட்டுனரை வண்டியை நிறுத்தச் சொல்லுங்கள். நேர்முகம் நடத்தும் நபரிடம் கழிப்பறைக்குப் போக வேண்டும் என்று கம்பீரமாகக் கேளுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாத நபரிடம் கூடக் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ள உதவி கேட்கலாம். 

உங்களுடைய உடல்நலத்தை விட முக்கியமானது எதுவுமில்லை. அதைப் பேணுவது உங்களுடைய அடிப்படை உரிமை. தாகத்தோடு வரும் விருந்தினருக்குத் தண்ணீர் கொடுப்பது தமிழர் பண்பாடு என்கிறோம். நம் வீட்டிற்கு வரும் வேலைக்காரர், எதோ பழுது பார்க்க வரும் சர்வீஸ் மேன் ஆகியோர் நம்முடைய கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கனிவோடு தெரியப்படுத்துவதும் நம் பண்பாடாக ஆகட்டும். மனிதர்களை இன்னமும் மனிதத்தோடு புரிந்து கொள்வோம்.

அவர்களைக் கண்டு நக்கலாகச் சிரிக்க வேண்டாம். ‘தண்ணி கம்மியா குடி, ஏசியிலேயே இருக்காதே, நாப்கின் போட்டுக்கோ’ முதலிய மூடத்தனமான அறிவுரைகளால் முடக்காதீர்கள். சிறுநீரை அடக்க முடியாமல் தவிப்பவர்களின் வேதனையைத் தீர்க்க வழிமுறைகளை நாடாமல் பெமினிசம், கம்யூனிசம் என்று எந்த இசம் பேசியும் பயனில்லை. அவர்களுக்கு உதவும் ஒரே வழி, ‘ஏன் அடிக்கடி ரெஸ்ட்ரூம் யூஸ் பண்ணுற’ மாதிரியான கேள்விகளை அறவே தவிர்ப்பது மட்டுமே என்கிறார்- ஆர்த்தி வேந்தன்.  

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்