பிறந்த குழந்தை கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறது என்றால் அதற்குக் குடல் பிடிப்பு காரணமாக இருக்கலாம். டயப்பர் மாற்றியோ காற்றோட்டமான இடத்துக்கு அழைத்துச் சென்றோ அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அதற்கு இதுதான் காரணம். குடல் பிடிப்பு என்றால் என்ன? எப்படி குழந்தையைப் பாதிக்கிறது? அதனால் என்ன விளைவுகள்? எப்படித் தடுப்பது? ஒருவேளை பாதித்தால் என்ன செய்வது? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
குடல் பிடிப்பு என்றால் என்ன?
குடல் பிடிப்பு என்பது நோய் இல்லை. ஒருவிதமான வலி. இதை ஆங்கிலத்தில் கோலிக் வலி என்பார்கள். இது எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படாது. கருத்துக்கணிப்பின்படி ஐந்தில் ஒரு குழந்தைக்கு இந்த வலி ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. வயிற்றுப் பகுதியில் இந்த வலி
ஏற்படுவதால், வலி தாங்காமல் குழந்தை பல மணி நேரமாகத் தொடர்ந்து அழும். அப்போது வயிறு உப்பிய வடிவில் காணப்படும். என்ன சமாதானம் செய்தாலும் அழுகையை நிறுத்த முடியாது. இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரைகூட குழந்தை தொடர்ந்து அழும். குழந்தை பிறந்து இரண்டு முதல் மூன்று வாரங்கள் கழித்து இந்த குடல் பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைக்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் கடக்கும் வரையில் இந்த பிரச்சனை இருக்கும். அதன் பிறகு தானாகவே குணமாகிவிடும்.
குடல் பிடிப்பு (கடும் வயிற்று வலி) ஏற்படக் காரணம் என்ன?
குடல் பிடிப்பு எல்லா குழந்தைகளுக்கும் பொதுவாக ஏற்படுவதில்லை என்பதால், இதைச் சுற்றி பல்வேறு நம்பிக்கை கதைகள் பின்னப்பட்டுள்ளன. மேலும் இதற்கு மரபு வழி காரணங்களும், கருவில்
ஏற்பட்ட மாறுதல்களும், முறையற்ற குழந்தை பராமரிப்பும் கூட காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பெருங்குடலில் இந்த வலி ஏற்படுவதால் செரிமானம் சார்ந்த வலியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த வலிக்கு முக்கியமாகப் பின்வரும் காரணங்களைச் சொல்லலாம்.
முக்கிய காரணம்
பிறந்த குழந்தையின் குடல் வளர்ச்சியடைய 3 மாதங்கள் வரையாகும். இந்த வளர்ச்சியின் போது வயிறு கடுமையாக வலிக்கும்.
சூழ்நிலை
பிறந்த குழந்தைகள் அக்கம்பக்கத்தில் உள்ளதைப் பார்க்கவும், அதைச் சுற்றி எழும் சப்தங்களைக் கேட்கவும் பழகிக்கொள்ளத் தொடங்கும்போது, வழக்கத்துக்கும் மாறாக எதையாவது கேட்டாலோ, பார்த்தாலோ இடையூறாக உணரும். இதனால் அதன் தூக்கம் பாதிக்கும், தாய்ப்பால் குடிப்பதுகூட பாதிக்கும். சரியான உணவு இல்லாதது மற்றும் தூக்கமின்மை காரணமாகச் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். இதனால் குடல் பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சீரற்ற செரிமான மண்டலம்
உணவுப் பாதையிலிருந்து சிறுகுடல், பெருங்குடல் என அனைத்தும் சீராக இருந்தால்தான் குழந்தை சாப்பிடும் எதுவுமே முறையாக ஜீரணமாகும். இல்லாவிட்டால் உணவுப் பொருட்கள் பெருங்குடலில் தேங்கி குடல் பிடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
பாக்டீரியா
வலி காரணமாகக் குழந்தை தொடர்ந்து அழுவதால், பாக்டீரியா தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது செரிமானத்தைப் பாதிப்பதுடன், வாயு தொல்லையையும் ஏற்படுத்துகிறது.
உணவு ஒவ்வாமை
குழந்தைக்குத் தாய்ப்பால் செரிமானமாகிவிடும், ஆனால், புட்டியில் அடைக்கப்பட்ட பால், எல்லா குழந்தைகளுக்கும் எளிதாகச் செரிமானமாகும் என்று கூறிவிட முடியாது. அதில் உள்ள கொழுப்பின் அளவு காரணமாக சில குழந்தைகளின் ஜீரண மண்டலம், அதைச் செரிக்கச் சிரமப்படும். இதனால் கூட கடும் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
புகை
கர்ப்பிணியோ அல்லது கர்ப்பிணியைச் சுற்றி இருப்பவர்களோ புகைபிடிப்பதால் ஜீரண மண்டலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகக் கூட உணவுப் பொருட்கள் சரி வரச் செரிமானம் ஆகாமல் குடலிலேயே தங்கி கோலிக் வலியை ஏற்படுத்துகின்றன.
அறிகுறிகள் என்ன?
- முன்பே கூறியது போல அழுகை தான் குடல் பிடிப்பின் அறிகுறி. அதாவது மதியத்துக்குப் பின்போ மாலை நேரத்துக்கு முன்போ குழந்தை அழும். இந்த அழுகை தொடர்ச்சியாக இருக்கும். அதிகபட்சமாக மூன்று மணி நேரம் வரைகூட இருக்கலாம், இந்த அழுகையானது தினசரி அதே நேரத்தில் இருக்கும்.
- இந்த அழுகைக்குக் காரணம் தெரியாது. அதாவது பசியோ, வியர்வையோ காரணமாக இருக்காது. “என்ன இப்பதான் சாப்பிட்டுச்சி அதுக்குள்ள பசியா?” எனப் பாலூட்ட முயன்ல் அதை குடிக்காது.
- அழும்போது கைகளையும் கால்களையும் வேகமாக ஆட்டும், கண்களைத் திறந்து திறந்து மூடும். கண்களைத் திறக்கும்போது வழக்கத்தைவிட அகலமாகத் திறக்கும்.
- தாய்ப்பால் குடிக்கும்போதோ அல்லது நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென நிறுத்திவிட்டு அழத் தொடங்கும்.
- வயிறு சற்று உப்பியிருக்கும். பெரியவர்களுக்கு இருக்கும் தொப்பை போல, இயல்புக்கு மாறான அளவுக்கு அது உப்பியிருக்கும்.
சாதாரண அழுகைக்கும் குடல் பிடிப்பால் குழந்தை அழுவதற்கும் என்ன வித்தியாசம்?
குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், அதன் தேவையையும் பெரும்பாலும் அழுகையை வைத்துத் தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பசியோ, வியர்வையோ அல்லது வேறு ஏதாவது இடையூறோ ,அதைக் குழந்தை வெளிப்படுத்துவது அழுகையின் மூலம் மட்டும்தான். இப்படி இருக்கையில் எப்படி குடல் பிடிப்புக்கான அழுகையை மட்டும் பிரித்துக் கண்டுபிடிப்பது என்ற சந்தேகம் எழுகிறதா?
குடல் பிடிப்பால் அழுதால், என்ன சொல்லியும் குழந்தையைச் சமாதானப்படுத்தவே முடியாது, தாய்ப்பால் கொடுத்தோ அல்லது விளையாட்டு காட்டியோ விதவிதமான சப்தம் எழுப்பியோ அதன் கவனத்தைத் திசை திருப்ப முடியாது. குழந்தையாக அழுதுவிட்டு ஓய்ந்தால் மட்டுமே அதன் அழுகை நிற்கும். அது வரை தொடரும்.
குடல் பிடிப்பு சிகிச்சை என்ன?
கோலிக் வலியால் அவதிப்படும் குழந்தைக்கு முதலில் செரிமானத்தை ஊக்குவிக்க வேண்டும். அது சாப்பிட்ட அளவும், மலம் கழித்த அளவும் ஏறத்தாழ ஒரே அளவில் இருக்குமளவுக்குச் செரிமானத்தை ஊக்குவிக்க வேண்டும்.
தாய்மார்கள் சீரக தண்ணீர் அருந்துவது நல்லது. உணவில் பெருங்காயம், ஓமம் சேர்த்துக் கொள்ளலாம். இவை குழந்தை உணவு செரிமான தொல்லையையும், வாயு தொல்லையையும் போக்கும்.
வயிற்றுப் பகுதியில், குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் லேசாக அழுத்துவதன் மூலம் வயிற்றில் தேங்கியிருக்கும் உணவுப் பொருட்களை மலத்துடன் வெளியேற வைக்கலாம்.
எந்த நடவடிக்கையும் கைகொடுக்காத பட்சத்தில் அன்றைய தினமே மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரிடம், குழந்தை அழும் நேரம் நீங்கள் சாப்பிட்ட உணவு, தாய்ப்பால் குடித்த நேரம் ஆகியவற்றைத் தெளிவாகக் கூறிவிட வேண்டும். அப்போதுதான் அதன் தாக்கத்துக்கு ஏற்ற மருந்தைக் குழந்தைக்குத் தர முடியும்.
ப்ரோபயோட்டிக்ஸ்
குழந்தையின் பெருங்குடலில், ப்ரோபயோட்டிக்ஸ் எனும் ஒருவகை நன்மை தரும் பாக்டீரியாக்களைச் செயல்படவைப்பதன் மூலம் செரிமானமாகாத உணவுப் பொருட்களைச் செரிக்க வைப்பதுடன், வாயு தொல்லையில் இருந்தும் குழந்தைக்கு விடுதலை அளிக்க முடியும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆரோக்கியமான சூழல்
குழந்தை, அசௌகரியமான சூழலால் பசியாலும் தூக்கமின்மையாலும், அவதிப்படுகிறது. இதன் காரணமாகச் சாப்பிடும் உணவுகூட சரிவர செரிப்பதில்லை. இதனால் குழந்தை இருக்கும் அறையைத் தூய்மையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். குழந்தை நிம்மதியாகத் தூங்குவதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஏற்ப மெல்லிசையை ஒலிக்கச் செய்யலாம்.
வாக்வம் க்ளீனரைப் பயன்படுத்தி அறையைத் தூய்மை செய்து, சுவாசிக்கும்போது கிருமித் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன் தினசரி வாழ்க்கை சீராக இருந்தால் இந்த ஜீரண பிரச்சனையோ வாயு தொல்லையோ ஏற்படாது.
தாயின் உணவு
தாய் எடுத்துக்கொள்ளும் உணவைப் பொருத்து தாய்ப்பாலின் தன்மையும் மாறும். அதிக கொழுப்பு நிறைந்த உணவைத் தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது. அதனால், தாய்ப்பாலில் கொழுப்பு ஏறி, அது குழந்தையின் செரிமானத்தைப் பாதிக்கிறது. மேலும் அமிலம் நிறைந்த பழங்கள், வாயு தொல்லை ஏற்படுத்தும் காய்கறிகளையும் தவிர்ப்பது நல்லது.
பெற்றோரின் நெருக்கம்
குழந்தை அசௌகரியமாக உணரும்போதெல்லாம், பெற்றோர் தூக்கித் தாலாட்டித் தூங்க வைப்பது, விளையாட்டு காட்டுவது என நெருக்கம் காட்ட வேண்டும் பெற்றோரின் நெருக்கம் குழந்தைக்குத் தேவையான நிம்மதியைத் தரும். இதனால் குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதுடன், அதன் உடலும் சீராக இருக்கும்.
வெளியே அழைத்துச் செல்லுதல்…
குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதால், அந்தச் சூழல் குழந்தையை ஆனந்தப்படுத்துகிறது. காரிலோ, அல்லது வேறு வாகனத்திலோ அழைத்துச் செல்வதை விட தூக்கிக் கொண்டு நடந்து செல்வது குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதுவும் உடல்நிலையைச் சீராக வைத்துக்கொள்ள உதவும்.
மஸாஜ் மற்றும் குளியல்
குழந்தையை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டும். தினசரி உடலை லேசாக மசாஜ் செய்யலாம். இதனால் உடல் சீராக இருக்கும். தூங்கும்போது, மடியில் படுக்க வைத்து முதுகு பகுதியை அழுந்த தடவிக் கொடுக்கலாம். இதுவும் செரிமானத்தை ஊக்குவித்து வாயு தொல்லையிலிருந்து விடுதலையளிக்கும்.
பாதுகாப்பான தூக்கம்
குழந்தை தூங்கும்போது அதற்குத் துணையாக இருப்பதுபோல போர்வையையோ அல்லது ஏதேனும் துணியையோ அதன் மீதோ அருகிலோ வைப்பதன் மூலம் பாதுகாப்பாக உணர வைக்க முடியும். இதனால் அச்சமின்றி தூங்குகிறது. குழந்தைக்குத் தேவையான தூக்கமும் கிடைத்து விடுகிறது. சரியான தூக்கமும் குழந்தை பருகும் தாய்ப்பால் ஜீரணத்துக்கு உதவிகரமாக இருக்கும்.
துளசி நீர்
துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அது ஆறிய பிறகு குழந்தைக்குச் சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். இது குழந்தைக்கு வாயு தொல்லை ஏற்படாமல் தடுக்கும். வாயு தொல்லை இருந்தாலும் அதைக் குணப்படுத்தும்.
தாய்ப்பால் கொடுக்கும் முறை
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது முழுவதுமாக படுத்தபடி இல்லாமல், சற்று உட்கார்ந்தபடி சாய வைத்துக் கொடுப்பது நல்லது. குடித்த பிறகும் உடனடியாக படுக்க வைத்து விடக்கூடாது. ஏனென்றால் சரியாகச் செரிமானமாகாது. மேலும் தாய்ப்பாலை ஒரே மார்பகத்தில் கொடுக்காமல் இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுத்த பிறகு முதுகிலும் மார்பிலும் வயிற்றிலும் லேசாக நீவி விட வேண்டும். அப்போதுதான் தாய்ப்பால் உணவுக் குழாயிலேயே தங்கிவிடாமல் இரைப்பைக்கு முழுமையாகச் செல்லும்.
பெருங்காயம் மற்றும் பெருஞ்சீரகம்
பாலூட்டும் தாய்மார்கள் உணவில் பெருங்காயம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்துக் கொள்வது நல்லது. ரசம் வைத்துச் சாப்பிடும்போது அதில் சிறிது அதிகமாகவே பெருங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இது, தாயின் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதனால் தாய்ப்பாலிலும் ஜீரண சக்தி அதிகரிக்கிறது. அதைக் குழந்தை குடிப்பதால் முன்பு தேங்கியிருந்த உணவுகளும் செரிமானமாகி மலமாக வெளியேறுகின்றன.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளெல்லாம் குழந்தையைக் குடல் பிடிப்பு வலியிலிருந்து பாதுகாக்க உபயோகப்படும் எளிமையான நடைமுறை. இதில் பக்க விளைவுகள் என்று எதுவும் கிடையாது. இதற்காக மருந்துகளை நீங்களாக முன்வந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. மருந்துகள் என்று வரும்போது மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏனென்றால், இது குழந்தையின் எதிர்காலமல்லவா?