இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை.இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – ஒரு கப்
பாவக்காய் – 4
புளி – எலும்பிச்சை பழ அளவு
மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ரீபைண்ட் ஆயில் – 2 கரண்டி
சாம்பார் பொடி – 3 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்ககள்
கடுகு- 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு – ½ ஸ்பூன்
தேங்காய் (துருவியது_ – 1/2 கப்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயம் – தேவைக்கேற்ப
செய்முறை
பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். பாகற்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை இரண்டு டம்ளர் தண்ணிர் விட்டு 1/2 மணி நேரம் ஊரவைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ளவும். .ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணை விட்டு அடுப்பில் வைத்து பொடியாக நறுக்கிய பாகற்காயைப் போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் (நன்கு சிவக்க வதக்க வேண்டும்).
பாகற்காய் நன்கு வதங்கியதும் புளி தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சாம்பார் பொடி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு வேகவைத்த துவரம் பருப்பைப் போட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லி தழை சேர்க்கவும்.
ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் கறிவேப்பிலை தாளிக்கவும். அதிலேயே தேங்காய் துருவலைப் போட்டு சிவக்க வறுக்கவும். இவ்வாறு தாளித்ததை குழம்பில் கொட்டவும். சுவையான பாகற்காய் பிட்லை தயார். இவ்வாறு செய்யும் போது வெல்லம் சேர்க்கத் தேவையில்லை.
இதே முறையில் கத்தரிக்காயையும் செய்யலாம்.