ஆனால், தீவிரமான மாரடைப்பு ஏற்படுவதன் முதல் அறிகுறி, திடீர் மயக்கம்தான். அப்படிப்பட்ட நேரத்தில் மயக்கம் அடைந்தவரைச் சுற்றிக் கூட்டம்போடக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பது கூடாது.
மார்பு அல்லது தோள்பட்டை வலியினால் மயக்கம் அடைந்திருக்கிறார் என்று தெரியவந்தவுடன், மயக்கம் அடைந்திருக்கும் நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை சமமான தரையில் படுக்கவைக்கவேன்டும்.
இதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் பரிசோதித்துப்பார்க்கவேண்டும். துடிப்பு இல்லை என்றால், மயக்கம் அடைந்தவரின் மார்பில் கையால் அழுத்தி ‘கார்டியோபல்மோனரி ரிசஸிடேஷன்’ (Cardiopulmonary
resuscitation – CPR) என்னும் முதலுதவி செய்ய வேண்டும். வாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கவும் முயல வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது இந்த சி.பி.ஆர். முதலுதவி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
நோயாளியை உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது வேறு பாதுகாப்பான வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் அவசியம். அப்போதுதான் நோயாளியை நிரந்தரமாக காப்பாற்ற இயலும். மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் இதயத் தசைகள் பழுதடையாமல் தடுக்க முடியும்.