சிசேரியன் பிரசவம் உங்களுக்கு நடந்திருந்தால், நீங்கள் பல பாதுகாப்பு விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். சிசேரியன் பிரசவத்திற்கு பின் (After Cesarean Delivery) நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டுமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இது குறித்து நீங்கள் பல விசயங்களை, குறிப்பாக உங்கள் உடல் நலத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் தகவல்களை தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
இன்றைய காலகட்டத்தில் சுகப் பிரசவம் என்ற நார்மல் டெலிவரியின் எண்ணிக்கைகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக அறுவை சிகிச்சை பிரசவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மனதிற்கு வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் என்றாலும், சில தருணங்களில் தவிர்க்கமுடியாத ஒன்றாகப் போய் விடுகிறது. மேலும் மக்களின் அறியாமையும், குறைந்த அல்லது போதிய விழிப்புணர்வு இல்லாததுமே இதற்குக் காரணம்.
நீங்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர் என்றால், பிரசவத்திற்கு பிறகு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள் பல உள்ளன. அவை பின்வருமாறு!
சிசேரியன் பிரசவத்திற்கு பின் எடுக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
இங்கு நீங்கள் சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு எடுக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு குறிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
- அறுவைசிகிச்சை முடிந்து 24 மணி நேரத்திற்குப் பிறகு உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொண்டு, உங்கள் காலைக் கடன் மற்றும் பிற விஷயங்களை நீங்களே செய்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இவ்வாறு முயற்சி செய்யும் போது நீங்கள் விரைவாக குணமடைய வாய்ப்புகள் உள்ளன. எனினும் உங்கள் உடலை நீங்கள் அதிகம் வருத்திக்கொள்ளக் கூடாது. அதே சமயம் நம்பிக்கை இழக்கக் கூடாது.
- சிறுநீர் கழிக்க வைத்த வடிகுழாயை அகற்றிய பின், சற்று வலி இருந்தாலும், நீங்கள் முடிந்த வரை கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்க முயற்சி செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இது மிகவும் சிரமமாகவே இருக்கும். போகப்போக வலி நீங்கி, நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும்.
- அறுவை சிகிச்சைக்காக கிழிக்கப்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டிருந்தால், பெரும்பாலும் அது நீங்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்குள் பிரிக்கப்படும். அதன் பின் நீங்கள் மிகக் கவனமாக சில நாட்கள் இருக்க வேண்டும். தற்போது பெரும்பாலான மருத்துவர்கள் தையல் முறையை பின்பற்றுவது இல்லை. இருப்பினும் கவனம் தேவை.
- மருத்துவமனையை விட்டு வருவதற்கு முன் வலி அதிகரித்தால் உங்கள் மருத்துவரிடம் கூறி சரி செய்து கொள்வது அல்லது எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து என்னென்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது உகந்தது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்.
- வீட்டிற்கு வந்தவுடன் வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கி விடக்கூடாது. உங்களுக்கு போதுமான ஓய்வு தேவைப்படும். நீங்கள் நல்ல ஆரோக்கியமான நிலைக்கு வந்த பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வீட்டு வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடலாம். எனினும் குறைந்தது 3 முதல் 6 மாத காலமாவது உங்களுக்குப் போதிய ஓய்வு தேவைப்படும். குறைந்த அளவிலான எடையை மட்டுமே தூக்கவேண்டும்.
- இதையும் படிங்க: கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும்! எது சரியான நேரம்?
- உங்களுக்கு ஏற்பட்டுள்ள இரத்தபோக்கு நாளடைவில் குறைந்து நின்றுவிடும்.இந்த உதிரப்போக்கு நீங்கள் போதுமான ஓய்வு எடுத்தால் குறையும்.ஒருவேளை அதிக வேலை பார்த்து உங்கள் உடலை வருத்திக்கொண்டால் இது அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.அதனால் கடினமான வேலைகளைத் தவிர்க்கவும்.
- போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தினமும் ஏதாவது பழச்சாறு பருகுவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை விரைவில் மேம்படுத்தும். இதனை வழக்கப்படுத்திக் கொள்வதும் நல்லது. இது உடலுக்குப் போதிய நீர்ச் சத்தை தருவதோடு மலச் சிக்கல் ஏற்படுத்துவதையும் குறைக்கிறது. அது போகநல்ல சத்தான ஆகாரங்கள், பழ வகைகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டும். இது ஏதாவது நோய்த் தொற்றின் அறிகுறியாகவும் இருக்கும். மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
- சிசேரியன் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன், உங்கள் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வரை உடலுறவு வைத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
- இதையும் படிங்க: எந்த கருத்தடை நல்லது?
- அறுவை சிகிச்சையால் தையல் போட்ட இடம்/ பேஸ்ட் செய்யப்பட்ட இடம் நன்கு குணமடையும் வரை குளிக்கும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். அந்த இடத்தில் அதிகம் நீர் சேராமல் உடனடியாக உலர்ந்த துணி / துண்டு வைத்துத் துடைத்துக் காய வைப்பது நல்லது.அடிக்கடி ஈரம் பட விடக்கூடாது.புண் ஆற தாமதமாகும். மருத்துவர் எதாவது களிம்பு பூசப் பரிந்துரைத்தால் அதைப் பின் பற்றவும்.
- எந்த ஒரு கனமான பொருட்களையும் தூக்கக் கூடாது. இது உங்கள் அடி வயிற்றில், குறிப்பாக அறுவைசிகிச்சை செய்த இடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் படிக்கட்டுகள் ஏறுவது, கையில் துணி துவைப்பது என்று எந்த கடினமான வேலைகளையும் சில மாதங்களுக்குச் செய்யக் கூடாது.
- நீங்கள் யோகா அல்லது உங்களுக்கேற்ற எளிய உடற்பயிற்சி செய்வது சிறந்தது. இவ்வாறு உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதால் உங்கள் உடல் விரைவாகக் குணமடைகிறது. மேலும் உங்கள் உடலுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்கிறது. இது உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டிற்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது.
- உங்கள் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் மன அழுத்தம் அல்லது கவலை ஏற்படாமல் புன்னகைத்துக் கொண்டிருங்கள்.இதனால் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். மேலும் உங்கள் குழந்தை மற்றும் கணவனோடு அன்போடும், மகிழ்ச்சியோடும் வாழ எல்லா வகையிலும் முனைப்பாக இருங்கள்.
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் குழந்தையின் ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டுள்ளதை மறக்கக் கூடாது.
- முடிந்த வரை வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ள உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் குழந்தையைக் கவனிக்க அதிக நேரம் கிடைப்பதோடு, உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
இந்த குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது மட்டுமல்லாமல் மேலும் பல குறிப்புகள் உள்ளன. அதையும் அறிந்து கொள்ளுங்கள்.
- உங்களுக்குத் திடீர் என்று வயிற்றில் அல்லது அறுவைசிகிச்சை செய்த இடத்தில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
- கால்களில் வீக்கம், வலி அல்லது சிவந்து விடுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது சிறுநீரோடு இரத்தம் கலந்து வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
- அதிக அளவு இரத்த போக்கு ஏற்பட்டால் நீங்கள் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும்.
- உங்கள் மார்பகத்தில் வலி அல்லது சிவந்து போதல் போன்ற அறிகுறிகள் ஏற்பாட்டால் கவனிக்க வேண்டும்.
- பதட்டம், அதிகமான மன அழுத்தம் மற்றும் பயம் போன்ற உணர்வுகள் வந்தால் அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து சரி செய்வது நல்லது.
இந்த குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன் தரும். மேலும் நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம், அதாவது உங்கள் தாய் அல்லது பாட்டி போன்றவர்களிடம் இருந்தும் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். ஆக அதிக கவனத்தோடு இருந்தால், சிசேரியன் பிரசவத்திற்கு பின், விரைவில் குணமடைந்து நீங்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
இதையும் படிக்க: உடல் எடையை குறைக்கும் 3 ஹெல்தி பானங்கள்…