Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நட்பு எப்போது காதலாக மாறுகிறது..? நண்பனை காதலனாக ஏற்கலாமா? – காதலர் தினம் சிறப்புக் கட்டுரை!

பள்ளி, கல்லூரி தொடங்கி வேலைசெய்யும் இடம் வரையிலும் ஆணும், பெண்ணும் இணைந்துதான் பணியாற்றவேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் ஒருவருடம் ஒருவர் பேசவும் பழகவும் அவசியம் நேர்கிறது. இந்த நேரங்களில் இருவருடைய ரசனையும் ஏதேனும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது பழக்கம் என்பது நட்பாக உருமாறுகிறது.

பள்ளி, கல்லூரி அல்லது பணியிடத்தில் மட்டுமே பழக்கம் நீடிப்பதை நட்பு என்று சொல்லமுடியாது. மனம்விட்டுப் பேசுவதற்கு வேறு ஓர் இடத்தைத் தேர்வுசெய்து தொடரும் போது தான் அந்த உறவு நட்பாக மாறுகிறது. தற்செயலாக அல்லது வேண்டுமென்றே வெளியே சந்திப்பது, பண்டிகை, விழாவை காரணம்வைத்து ஒன்றுசேர்ந்து கொண்டாடும்போது நட்பு மேலும் நெருக்கமாகிறது.

இந்த நேரத்தில்தான் நட்பு காதலாக மாற்றம் அடைகிறது. காதலை சொல்வதா வேண்டாமா என்ற மனப்போராட்டம் ஒரு புறம் என்றால் சொல்லப்பட்ட காதலை ஏற்பதா வேண்டாமா என்ற போராட்டம் ஒரு வகை.

காதலுக்கும் நட்புக்குமான எல்லைக்கோடு எது, எப்போது நட்பு காதலாக மாற்றம் அடைகிறது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

இயல்பாக பழகுவதால் அடிக்கடி சந்திக்கவும் பழகவும், பேசிக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் உடை உடுத்தும் ஸ்டைல், பேச்சு, நடவடிக்கை, பிடித்த இசை, உணவு போன்றவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த சூழலில் ஆபத்து நேரங்களில் உதவி செய்யவும், விழாக்களை கொண்டாடி மகிழவும், உடல் சரியில்லாத நேரங்களில் ஆதரவு செலுத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது.

Thirukkural

இந்த நெருக்கமே, நட்பு என்ற பந்தத்தை காதலை நோக்கி இழுத்துச்செல்கிறது. காதல், நட்புக்கு இடையே எல்லைக்கோடு எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை. இவற்றின் அடிப்படை கோட்பாடு பிரதிபலன் பாராது அன்பு செலுத்துவதுதான். பூவும் மணமும் போல, பாலும் வெண்மையும் போல நட்பும் காதலும் எப்போதும் கலந்தே இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

குறிப்பிட்ட வயது வரையிலும் தன் தந்தையைப் போன்ற மணமகன் வேண்டும் என்று நினைக்கும் பெண், சரியான நண்பனைக் கண்டதும், இவனைப்போன்ற கணவன் வேண்டும் என்று நினைக்கிறாள். இதற்குக் காரணம், அவனது பொறுப்புணர்வு என்றுதான் சொல்லவேண்டும்.

பொதுவாகவே பெண்ணிடம் அழகையும் நளினத்தையும்தான் ஆண் விரும்பி காதல் செய்கிறான். ஆனால் பெண்ணோ எத்தனை அக்கறையாக தன்னை கவனித்துக்கொள்வான் என்பதைக் கணக்கிட்டே ஆண் மீது காதல் வசப்படுகிறாள். இந்த பாதுகாப்பு உணர்வை நண்பனிடம் அடையாளம் கண்டுகொண்டதும் காதல் வசப்படுகிறாள். மனதில் உள்ள காதலை சொல்வதா வேண்டாமா என்று தவிப்பதுதான் அடுத்த சிக்கல்.

காதலை சொன்னால் இன்றைய நட்புக்குப் பாதிப்பு வரலாம், தன்னை மட்டமாக நினைத்துவிடலாம், இதற்குத்தான் திட்டம்போட்டு பழகியதாக நினைக்கலாம் என்று பயந்தே பலர் காதல் ஆசையை மனதுக்குள் போட்டு மறைத்துக் கொள்கிறார்கள். நீங்கள் விரும்பும் நபருடன் உள்ள நட்பு காதலாக மாறி, திருமணம் முடிந்தால், எப்படிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பதை முதலில் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதன்பிறகே காதலை சொல்வதுகுறித்து முடிவுக்கு வரவேண்டும்.

தெரியாத பேயைவிட தெரிந்த பிசாசு மேல் என்பார்கள். யாரோ முகம் தெரியாதவரை திருமணம் முடிக்கும்போது என்னவென்று புரியாத பய உணர்வு நிச்சயம் இருக்கத்தான் செய்யும். நண்பனை திருமணம் முடித்துக்கொண்டால் அச்சத்துக்கு அவசியம் இல்லை. அதேபோல் நண்பனுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பது நன்றாகவே தெரியும். அதனால் தன்னுடைய விருப்பத்துக்கு இனி மதிப்பு இருக்குமோ இல்லையோ என்று அச்சப்பட அவசியம் இல்லை. 

ஏற்கெனவே பழக்கம் இருக்கிறது என்பதால் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோருடனும் நிச்சயம் பழக்கம், அறிமுகம் இருக்கும். திருமண நேரத்தில் உண்டாகும் தேவையற்ற மனப்பதட்டம், படபடப்பை இது குறைத்துவிடும். குடும்பத்தில் எவரெல்லாம் முக்கியமான நபர்கள் என்று நன்றாக கவனித்து நல்லபெயர் வாங்கிவிட முடியும்.

ஒவ்வொரு நபரிடமும் சின்னச்சின்ன குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். முன்கோபம், அதிகம் செலவழிப்பது, அதிகம் பேசுவது போன்ற பிரச்னைகளை ஏற்கெனவே அறிந்திருப்பதால், குறைகளுடன் ஏற்றுக்கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது. பிறந்த வீட்டில் இருக்கும்போது இருந்த இயல்பான மனநிலையிலே, புகுந்த வீட்டிலும் இருக்கமுடியும்.

குறிப்பாக யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளவும், சூழலுக்கேற்ப நடிக்கவேண்டிய அவசியமும் இருக்காது. இத்தனை நன்மைகளைக் கணக்கிடும்போது, நட்பு திருமணத்தில் முடிவதால் உண்டாகும் தீமைகள் மிகவும் குறைவுதான். ‘இதுக்குத்தான் நட்புன்னு நடிச்சாங்களா…’, ‘எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும், சுத்திவளைச்சு இங்கதான் வருவாங்கன்னு’ என்பது போன்ற சில வசவுகளை வாங்கவேண்டியிருக்கலாம். துணையைப் பற்றி முழுமையாகத் தெரியும் என்பதால் திருமணத்தில் கிடைக்கும் திரில் காணாமல் போகலாம்.

ஆனாலும் நட்பு காதலாக மாறிவிட்டது என்று தெரிந்தால்… அதை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். நீங்கள் மணம் முடிக்க விரும்பும் நபரிடம் இருக்கவேண்டிய அத்தனை குணங்களும் நண்பரிடம் இருக்கிறது என்பதை மறைமுகமாகச் சொல்லுங்கள். இதனை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நேரடியாகப் பேசுங்கள்.  பதிலால் நட்பு கெட்டுப்போகாது என்பதை உறுதியாகச் சொல்லுங்கள். பெரும்பாலும் நீங்கள் விரும்பும் பதிலே பதிலாக கிடைக்கும். அப்படியில்லை என்றால் நட்பு நிலையில் மட்டுமே தொடருங்கள். வேண்டாம் என்ற பதிலால்ல் மனதுக்கு வலித்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

உங்கள் மனதில் பூத்த காதல் இன்னமும் நண்பன் மனதில் பூக்கவில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். அதற்கு சில காலம் ஆகலாம். அதுவரை காத்திருக்கலாம்.

ஒருவரது எண்ணத்திற்கும் கனவுகளுக்கும் மரியாதை கொடுக்கவேண்டியது நட்பின் முதல் அடையாளம். அதனால் அவர் காதலிக்கவில்லை என்றதும் நட்பில் இருந்து விலகுவது, பார்க்கும் நேரங்களில் எல்லாம் காதலிக்கச்சொல்லி வற்புறுத்துவது, காதலிக்கத்தூண்டும் வேறு முயற்சிகளில் ஈடுபடுவது போன்றவை வேண்டவே வேண்டாம்.

தானாக பழுத்த பழத்தின் சுவையே அலாதிதான். அதனால் நண்பன் கணவனாக அமைந்தால் வாழ்க்கை அலாதியானதுதான். அப்படி அமையவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். நண்பரைவிட சிறந்த கணவர் அமையலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் சிப்ஸ் போன்ற சிறுதீனிகளால் வரும் தீமை தெரியுமா?

tamiltips

தமிழர் விளையாட்டான தட்டாங்கல் விளையாடத் தெரியுமா?

tamiltips

ரவை இருக்கா? இந்த இனிப்பு போண்டா செய்து அசத்துங்க!!!

tamiltips

தாய்ப்பால் எப்படி உற்பத்தியாகிறது? இதோ தெளிவான விளக்கம் !!

tamiltips

ரொம்ப நோஞ்சானாக இருக்கோம்னு கவலையா!! கொள்ளு சாப்பிட்டு பாருங்க !!

tamiltips

தொட்டாற் சிணுங்கி செடி பார்க்க மட்டும் ஆச்சர்யமில்லை அது தரும் பயன்களும் ஆச்சர்யம்! மனோசக்தி தரும் செடி!

tamiltips