கேரளாவில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது கடைசி தேர்வை எழுத தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து பள்ளிக்கு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை பார்த்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மாணவியின் திறமையை பாராட்டி சிலர் கமெண்ட்டுகளையம் போட்டு வருகின்றனர்.கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் மலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா எனும் மாணவி அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து வருவதால் தனது கடைசி தேர்வின் போது தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுத வேண்டும் என விரும்பியுள்ளார். அதன்படி கடைசி தேர்வின்போது குதிரையில் பள்ளி சென்றுள்ளார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவியிடம் கேட்டபோது” நான் வளர்க்கும் குதிரையில் ஒருமுறையாவது பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்பது தனது ஆசை” எனக் கூறியுள்ளார். பின்னர் அவர் தந்தையிடம் கேட்டபோது அவர் முதலில் தான் இதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் பின்னர் தன் மகளின் ஆசைக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.” என் மகள் தைரியசாலி” எனவும் அவரது தந்தை புகழாரம் சூட்டியுள்ளார். இந்த அற்புதமான சவாரியை இணையதளத்தில் பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.