Tamil Tips
குழந்தை பெற்றோர்

குழந்தைகள் மூளை வளர்ச்சி அதிகரிக்கத் தவிர்க்க வேண்டிய 10 விசயங்கள்

எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் நல்ல மூளைத் திறனோடு வளர வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். தங்கள் குழந்தைகள் புத்திக் கூர்மையோடும், சிந்திக்கும் திறனோடும் விரைவாகச் செயல்படும் திறனோடும் வளருவதைக் கண்டு எல்லா பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைவர். ஆனால் அப்படி அனைத்து குழந்தைகளும் சிறந்த வளர்ச்சி நிலையை எட்டுவது இல்லை. ஒரு சில குறைபாடுகள் ஏதோ ஒரு காரணத்தால் சில குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனை எண்ணிப் பல தாய்மார்கள் அதிகம் மன வருத்தம் அடைவதுண்டு.

குழந்தையின் மூளை அமைப்பு (Child’s  Brain System in Tamil)

ஒரு குழந்தையின் மூளையில் 100 பில்லியின் நியூரான்கள் உள்ளன. குழந்தையினது முதல் ஒரு வருட காலகட்டத்தில் அந்த  மூளை அணுக்கள் ட்ரிலியன் கணக்கில் வளர்ந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. இதை நரம்பு மண்டலம் என்று கூறுவார்கள். இதைப் பற்றித் தெரிந்து கொள்வது சற்று சுவாரசியமாக இருக்கும்.

இந்த நரம்பு மண்டலம் ஒரு குழந்தை பல புதிய தகவல்களைத் தெரிந்து தனது மூளையில் பதிவு செய்து கொள்ளவும், பல மொழிகளைக் கற்றுக் கொள்ளவும், மேலும் பல திறமைகளைப் புரிந்து மற்றும் வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது. எனினும் இந்த வடிவமைப்பு அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்று போலச் செயல்படாது. இதன் விரைவான வளர்ச்சியும் செயல் திறனும் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கத் தவிர்க்க வேண்டிய 10 விசயங்கள் (10 Things to avoid for children’s better brain development)

தற்போதைய விரைவாக நகரும் உலகத்தில் அனைவரும் வேகமாகச் சிந்திக்கும் திறனோடும், நல்ல புத்திக் கூர்மையோடும் இருப்பது மிக அவசியம். இதில் உங்கள் குழந்தையின் மூளைத் திறனை வளர்த்துக் கொள்ள சில முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு முன், நீங்கள் கட்டாயம் அந்தக் குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிப்பது என்னவென்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.அவ்வாறு தெரிந்து கொண்டால் நீங்கள் நிச்சயம் உங்கள் குழந்தையை ஒரு நல்ல திறமைசாலியாகவும் நுண்ணறிவு கொண்டவனாகவும் எளிதாக வளர்த்து விட முடியும்.அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 10 விசயங்கள்.

Thirukkural

1.தொலைக்காட்சி வேண்டாம் (Avoid television)

அனைத்து வீடுகளிலும் தற்போது இருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சனையே தொலைக்காட்சி தான். எதற்காக நாம் தொலைக்காட்சி பார்க்கிறோம் என்று தெரியாமல் அனைவரும் அதிக நேரம் அதில் செலவிட ஆரம்பித்துவிட்டோம். மேலும் நம் குழந்தைகளுக்கும் வயதிற்கு ஏற்ற மற்றும் அறிவை வளர்த்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளைப் பார்க்கப் பழக்கம் செய்யாமல், பொம்மைப் படம், சண்டை மற்றும் பிற கேளிக்கை  நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்க அனுமதிக்கின்றோம்.இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க மாற்று வழிகளைக் காட்ட வேண்டும்.இசை,விளையாட்டு,தியானம் போன்ற எதாவது விசயங்களில் நேரத்தைச் செலவிடச் செய்யலாம்.

2.கைப்பேசி பயன்பாடு கூடாது (No mobile phone usage)

தற்போது பெற்றோர்கள் பிறந்த குழந்தைகளிடமே கைப்பேசியைக் கொடுத்து விளையாட்டு காட்டத் தொடங்கி விடுகிறார்கள். இதனால் கைப்பேசியிலிருந்து வரும் கதிர் வீச்சு அந்தக் குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிப்பதோடு, அவர்கள் வளரும்போதே அந்த சிறு வயதிலேயே கைப்பேசிக்கு அடிமையாகியும் விடுகிறார்கள் என்பது வேதனை தரும் விசயம்.இதனால் தன்னை சுற்றி நடக்கும் எந்த விசயங்களின் மீதும் அவர்களுக்குக் கவனம் அல்லது விழிப்புணர்வு இல்லாமல் போகிறது.கைப்பேசி,ஜபேட் போன்ற உபகரணங்களை அவர்கள் கண் பார்வையிலிருந்து விளக்கி வையுங்கள்.

3.தனிமை வேண்டாம் (Avoid being alone)

தற்போது தாய் மற்றும் தந்தை ஆகிய இரு பெற்றோர்களும் வேலைக்குச் சென்று விடுகிறார்கள். மேலும் தனிக் குடித்தனம் பெருகி விட்ட காரணத்தினால், குழந்தைகளுக்குத் தங்களது தாத்தா பாட்டி மற்றும் பிற உறவினர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் போகிறது. மேலும் இன்றைய அடுக்குமாடி மற்றும் தனிக்குடித்தன வாழ்க்கை முறை பெரியவர்கள் சிறியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தனிமைப் படுத்தி வைத்து விடுகிறது. இதனால் குழந்தை எப்போதும் தன்னுடன் விளையாடவோ பேசவோ ஆள்  இல்லாததால் அதிக தனிமைக்கு ஆளாகி மன உளைச்சல் கொள்கிறான். இது சிறு வயதில் குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது.முடிந்தவரை உறவினர் மற்றும் நண்பர் இல்லங்கள்,கோவில்,பூங்கா போன்ற பொது இடங்கள் மற்றும் சுற்றுலா என்று குழந்தையை அழைத்துச் செல்லுங்கள்

4.எண்ணெய்த் தின்பண்டங்களைத் தவிர்க்கவும் (Avoid oil foods)

குழந்தைகள் அதிகம் நொறுக்குத் தீனி உண்கிறார்கள். இதில் தரமற்ற எண்ணெய் மற்றும் கொழுப்பு கலந்துள்ளதால் அது அவர்களது மூளை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது. மேலும் அதனால் அவர்களது உடல் எடை அதிகரிப்பதால் அவர்களால் சுறுசுறுப்பாக வேலை பார்க்க இயலாமல் எப்போதும் ஒரு மந்த நிலையிலேயே இருக்கின்றார்கள். எண்ணெய்யில் பொரித்த பண்டங்களைத் தவிர்க்கவும்.

5.தூக்கமின்மை வேண்டாம் (Sleep well)

நல்ல மூளை வளர்ச்சிக்குத் தூக்கம் இன்றியமையாதது. மேலும் ஒரு குழந்தை நன்கு தூங்கும் போதுதான் மூளை வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் சிறப்பான வகையில் ஏற்படுகிறது. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையில் பெற்றோர்களும் குழந்தைகளும் சரியாகத் தூங்குவதில்லை. இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுவதோடு சிந்திக்கும் திறனும் சுறுசுறுப்பாகச் செயல்படும் திறனும் குறைகின்றன.ஆக இரவில் சீக்கிரம் உறங்கி அதிகாலையில் விழித்தெழும் பழக்கத்தைக் குழந்தைக்கு ஏற்படுத்துங்கள்.

6.சத்தில்லா உணவுகளைத் தவிர்த்தல் (Avoid nonnutritious food)

இன்று உணவுப் பழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நம் பாரம்பரிய உணவான திணை, வரகு, குதிரைவாலி, சாமை, போன்ற அரிய அரிசி வகைகளை நாம் புறக்கணித்து விட்டோம். மேலும் துரித உணவிற்கு அதிகம் மாறிவிட்டோம். இதனால் சத்தான உணவு இல்லாமல் போவதோடு உடலில் தேவையற்ற மற்றும் நோய் ஏற்படுத்தக்கூடிய கொழுப்புச் சத்து சேர்ந்து மனிதர்களை மந்தமான நிலையிலேயே எப்போதும் வைத்திருக்கிறது. இத்தகைய உணவுப் பழக்கம் குழந்தைகளைப் பெரிதும் பாதிக்கிறது.கடைகளில் கிடைக்கும் துரித உணவுகளை உங்கள் குழந்தையிடம் அண்ட விடாதீர்கள். காய்கனி,கீரை,தானியம்,பால், முட்டை போன்ற ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்து கொடுங்கள்.

7.விளையாட்டின்மையைத் தவிர்த்தல் (Encourage playing)

குழந்தைகள் அதிகம் ஓடி ஆடி விளையாட வேண்டும். அவ்வாறு மண்ணிலும், தெருக்களிலும், விளையாட்டு மைதானத்திலும் மகிழ்ச்சியாக விளையாடும்போது அவர்களது மூளையும் உடலும் புத்துணர்வு பெறும். ஆனால் இன்றைய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனிக்குடித்தன வாழ்வு முறை அனைவரையும் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடச் செய்கிறது. இதனால் குழந்தைகள் எப்போதும் சோர்ந்தும் உற்சாகம் இல்லாமலும் காணப்படுகிறார்கள்.’ஓடி விளையாடு பாப்பா!’

என்னும் பாரதியின் சொல் கனவாகி விடுமோ என்று அச்சமாக உள்ளது.குழந்தைகளை விளையாட ஊக்குவியுங்கள்.

8.உடற்பயிற்சியின்மைத் தவிர்த்தல் (Do daily exercises)

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ஆனால் இன்றோ குழந்தைகள் அதிகம் சோம்பலோடு காணப் படுவதால் அவர்கள் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அவர்களது மூளை வளர்ச்சியும் பாதிக்கப் படுகிறது. யோகா

மற்றும் எளிய உடற்பயிற்சிகளைக் காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகள் செய்வது சிறந்தது.

9.சரியான வயதில் கற்கத் தொடங்குவது (Start learning at the correct age)

மேலும் குழந்தைகள் சரியான வயதில் பள்ளிப் பாடத்தைக் கற்கத் தொடங்க வேண்டும். ஆனால் பெற்றோர்கள் தங்கள் வேலையைக் குறைத்துக் கொள்ளவும்,அலுவலக பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும் ஒன்று முதல் இரண்டு வயதிற்குள்ளேயே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்கிறார்கள். இதனால் குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே தன் தாயை அல்லது குடும்பச் சூழலை விட்டுவிலகி கட்டாயத்தின் அடிப்படையில் ஆர்வமின்றி, ஏதோ கற்றுத் தருகிறார்கள் புரிகிறதோ புரியவில்லையோ கற்க வேண்டும் என்று படிக்கத் தொடங்குகிறார்கள். இவ்வாறு ஆர்வம் அற்று சிறு வயதிலேயே படிக்கத் தொடங்குவதால் அவர்கள் வளரும்போது படிப்பில் ஆர்வம் இல்லாமலும், மூளைக்குப் போதிய சக்தி இல்லாமலும் மந்தமான நிலையிலேயே இருக்கிறார்கள்.

10.கைத்திறன்களில் நாட்டம் வளர்த்தல் (Hand crafts)

இன்றைய குழந்தைகளின் கைத்திறன் கைபேசியைக் கையாளுவதில் தான் உள்ளது. இது பெருமைமிக்க விசயம் அல்ல.அதிக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தங்களுக்கும் தெரியாத பல விசயங்களைக் கைபேசியைக் கொண்டு  எளிதாகத் செய்யும் போது ஆச்சரியப்பட்டு மகிழ்கிறார்கள். ஆனால் அது தவறான அணுகுமுறை என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். நாம் குழந்தைகளுக்குக் கைபேசியை தருவதை தவிர்த்துவிட்டு மாறாக அவர்களது ஆர்வம் எந்த திறனில் உள்ளது என்பதை கண்டறிந்து அதில் அவர்களை ஈடுபடச் செய்தால் அவர்களது மூளை வளர்ச்சி அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, வண்ணப் படம் தீட்டுவது, கைவினைப் பொருட்கள் செய்வது, மரம், காகிதம் மற்றும் களிமண்ணாலான பொம்மைகள் அல்லது விளையாட்டுப் பொருட்கள் செய்வது, பனை ஓலை அல்லது தென்னம் ஓலை கொண்டு சிறு பெட்டிகள் போன்று உபயோகப் பொருட்கள் செய்வது என்று அவர்களை உற்சாகப்படுத்துவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைவதோடு தங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள விசயங்களைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளைச் சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சித்தால் அவர்கள் புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும் நல்ல குணங்களோடு வளருவார்கள்.ஆக பெற்றோர்களே உடனே உங்கள் குழந்தையின் மூளைத் திறன் அதிகரிக்க இந்த 10 விசயங்களிலிருந்து குழந்தைகளை விளக்கி வையுங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வேகமாக பரவும் வினோத காய்ச்சல்… குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா? முன்னெச்சரிக்கை என்ன?!

tamiltips

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?

tamiltips

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்வது எப்படி?!

tamiltips

கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

tamiltips

வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு…

tamiltips

மழை நீர் சேகரிப்பு பயன்கள்: குழந்தைகளுக்கு பெரியவர்கள் என்ன சொல்லித்தர வேண்டும்?

tamiltips