கோழி, பீட்சா, பர்கர் போன்ற அதிகமான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைச் சிறு வயதில் இருந்தே கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தத்தில் அதிகக் கொழுப்பு சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
கட்டுப்பாடு இல்லாமல் உண்ணும் உணவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கொழுப்புச் சத்தாகவும் 25 சதவிகிதம் புரதமாகவும், 25 சதவிகிதம் மாவுச் சத்தாகவும் இருக்கும். கொழுப்புச் சத்தை 50 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும். மாவுச் சத்தை 50 சதவிகிதமாக அதிகரித்துக்கொள்ளலாம்.
கொழுப்பை எவ்வளவு தவிர்க்க முடியுமோ, அவ்வளவு தவிர்க்கலாம். அதனால் இதய பிரச்னை உள்ளவர்களுக்கு சைவ உணவுப் பழக்கம்தான் நல்லது. பச்சைக் காய்கறிகள், அதிக இனிப்பு இல்லாத பழ வகைகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டியதும் அவசியம். குறிப்பாக பட்டினி, விரதம் போன்றவை இருக்கக்கூடாது. அதேபோன்று திருமண வீடுகளுக்குச் சென்று மூக்குப் பிடிக்க சாப்பிடவும்கூடாது. எப்போதும் புதிதாகச் சமைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அதிகம் இனிப்பு இல்லாத கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றைச் சாப்பிடலாம் நார்ச்சத்து நிரம்பிய பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், முருங்கை, பீன்ஸ், பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
ஹோட்டல் மற்றும் வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாதபட்சத்தில் குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.