சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது மற்ற உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இதுவரை சீனாவில் மட்டும் 80,651 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3,070 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு,
சீன அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள், நர்ஸ்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால், அவர்களின் உடல்நிலையும் பாதிக்கப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா பாதித்த இடங்களில் பணிபுரியும் நர்ஸ்கள் மற்றும் பெண் சுகாதார ஊழியர்கள் வெளியில் சொல்ல முடியாத அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர். மாதவிடாய் நாட்களின்போது உரிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி அவஸ்தைப்படுவதாகவும், தங்களுக்கு தரப்படும் பாதுகாப்பு சாதனங்கள் குறைபாட்டுடன் உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, கொரோனா வைரஸ் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக, பெண் ஊழியர்கள், நர்ஸ்களின் மாதவிடாய் நாட்களை தாமதப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளை கொடுக்கின்றனர். அத்துடன், பாதுகாப்பு உடைகளுடன் கழிவறைக்கு அடிக்கடி செல்லக்கூடாது, இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்த வேண்டும்,
கொரோனா மீட்புப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற கெடுபிடிகளால் பல பகுதிகளில் நர்ஸ்கள், பெண் சுகாதார ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுபோன்ற கடுமையான அடக்குமுறைகள் காரணமாக, உரிய நேரத்திற்கு சாப்பிட முடியாமல், தாகத்திற்கு நீர் அருந்த முடியாமல், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல்,
மாதவிடாயைக் கூட வெளியேற்ற முடியாமல் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதனை சீன அரசு மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
பெண் சுகாதார ஊழியர்கள், நர்ஸ்கள், டாக்டர்கள் சந்திக்கும் பிரச்னையை வெளியில் சொல்ல விடாமல் அவர்களை மிகவும் கண்டிப்புடன் நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் மறைமுகமாக ஏற்படுத்தியுள்ள மிகப்பெரும் பாதிப்பு இது என்று மேற்கத்திய ஊடகங்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.