கண்களுக்கு அதிக வேலை தரும் பணியை செய்கிறீர்களா? எப்போதும் செல்ஃபோனுடன் நேரத்தைக் கழிக்கிறீர்களா? குழந்தைகளும் தங்களுடைய நேரத்தை டீவியிலேயே கழிக்கிறார்களா?
கண்களுக்கு உண்டாகும் நோய்களில் முக்கியமானது கண்கள் உலர்ந்து உலர் கண்கள் நோய் உண்டாவது.மருத்துவத் துறையில் இதை ட்ரை ஐ சின்ட்ரோம் என்று அழைக்கிறார்கள். இதைப் பற்றிய விழிப்புணர்வு அனைத்து வயதினருக்கும் தேவை என்கிறார்கள் கண் மருத்துவ நிபுணர்கள்.
கண்களில் போதுமான அளவு உற்பத்தியாகும் கண்ணீரின் அளவு குறைவது, வறட்சி, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை உணருவது உலர் கண் நோய் என்றழைக்கப்படுகிறது. இன்று வீடு, அலுவலகங்கள் அனைத்தும் குளிரூட்டப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு அதிக நேரம் இதைப் பயன்படுத்தும்போது நமது சருமத்துடன் இணைந்து கண்களும் பாதிப்படைகிறது.
நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுபடும். கண்கள் சிவந்து காணப்படுவது, மந்தமான பார்வை, கண்க ளில் வலி, கண்களை உறுத்திகொண்டு இருத்தல், அதிகப்படியான வறட்சி, கண்களிலிருந்து அதிகப்படியான நீர் வடிதல், கண்களில் ஒரு வித அழுத்தத்தை உணர்தல், வலி, அரிப்பு போன்றவை இதனுடைய அறிகுறிகளாக சொல்லலாம்.
கண்களுக்குள் இருக்கும் கண் நீர்ப்படலம் நீர், எண்ணெய்த் தன்மை, புரதம் என மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. இன்று பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் பெரும்பான்மையான நேரத்தைக் கழிக்கிறோம். குளிர்ச்சியான ஏசி அறைகளில் காற்றின் ஈரப்பதம் குறைந்து வறண்டு இருக்கும். இந்த வறண்ட காற்று கண்களின் உள்ள நீர்த்தன்மையைக் குறைத்துவிடும்.
இவை கண்களைப் பாதுகாக்கும் இமையையும் விட்டுவைக்காது. அதிகப்படியான வறண்ட காற்றில் இருக்கும் போது இமை களில் சுரக்கும் கொழுப்பு அமிலத்தின் அளவு குறையும் போது கண்களை மூடித் திறப்பதில் பாதிப்பு ஏற்படும். மேலும் இமைக்காமல் தொடர்ந்து கண்களைத் திறந்து வைத்திருக்கும் போதும் கண்களில் உலர்தன்மையை அதிகரிக்கும்.
கணினி பணியில் இருப்பவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தூரத்திலுள்ள பொருள்களை 30 விநாடிகளாவது உற்று நோக்க வேண்டும். உட்கார்ந்த இடத்திலேயே கண்களை மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக சுழற்றவும். வட்ட வடிவமாக சுழற்ற வேண்டும்.கண்களை அவ்வபோது சிமிட்ட வேண்டும்.