நாம் செய்யும் உணவும், உணவு சமைக்க பயன்படுத்தும் சமையலறையும் மிக மிக முக்கியமே… அந்த வகையில் நாம் சமைக்கும் உணவுகளையும், சமையல் பொருட்களையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது? என்பதை பற்றிய சில குறிப்புகளை தெரிந்துக் கொள்வோம்.
கோதுமை மாவில் சில சமயங்களில் வண்டுகள் இருக்கும். இந்த வண்டுகள் வராமல் தவிர்த்துக்கொள்ள கோதுமை மாவில், தூள் உப்பு இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி வைத்தால், கோதுமை மாவில் வண்டுகள் வருவதை தவிர்த்துக்கொள்ள முடியும். கோதுமை மாவின் அளவுக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஆப்பிளை நறுக்கி வைக்கும்போது சிறிதளவு உப்பை அவற்றில் தடவி வைத்தால் ஆப்பிள் நிறம் மாறாமல் இருக்கும்.
பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களை துலக்கும்போது எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பேஸ்ட்டு போல் கலந்து வைத்துக்கொண்டு, இந்த கலவையை கொண்டு பித்தளை பாத்திரத்தை துலக்கினால் தங்கம் போல் ஜொலிக்கும்.
சாதாரணமாக நாம் காலிஃபிளவரில் இருக்கும் புழுவை எடுப்பதற்கு வெந்நீரில் வேக வைப்போம். அப்போது சிறிதளவு உப்பையும் சேர்த்து வேக வைத்தால், அவற்றில் இருக்கும் புழு மற்றும் கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும். காலிஃபிளவரும் வெள்ளையாகவே இருக்கும்.
மிக்சி ஜாரில் உள்ள பிளைடு ஷார்ப்பாக இல்லையென்றால், அப்போது ஒரு கப் கல் உப்பை மிக்சி ஜாரில் போட்டு அரைத்தால் போதும்.
கேஸ் அடுப்பை எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க…. அடுப்பிலும், சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாக துடைத்தால் அடுப்பு, மேடை இரண்டுமே பளிச்சென காட்சியளிக்கும்.
முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால், அதன் மீது சிறிதளவு உப்பைத் தூவி, பிறகு துடைத்து எடுத்தால் சுத்தம் செய்வதும் எளிது, முட்டையின் வாடையும் இருக்காது.
கண்ணாடிப் பாத்திரங்களை உப்பும், வினிகரும் கலந்த கலவையைக் கொண்டு சுத்தம் செய்யலாம். உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.