Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

கைக் குழந்தையோடு பயணமா?இதோ 15 சூப்பர் டிப்ஸ் !!

பயணத்தின்போது பச்சிளம் குழந்தைகளை அழைத்துச் செல்வது, மிகுந்த சிரமமான ஒன்று. குழந்தைகளின் அழுகைக்காக விமானம் தாமதமாக கிளம்பிய சம்பவங்களெல்லாம் ஏராளமாக உண்டு. குறிப்பாக நாம், தொலைதூர பயணத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பதிவில் குழந்தையுடன் பயணிக்கும்போது கவனிக்க வேண்டியவை & தவறாமல் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள் என்ன?என்று பார்ப்போம்.

பெற்றோர்களின் நிலை
பசி, சூழல், வெப்பநிலை, சப்தம் போன்ற காரணங்களால் திடீரென குழந்தைகள் அழத்தொடங்கிவிடும். பெற்றோர்களால் அந்த சூழலில் குழந்தையை சமாதானப்படுத்தவும் முடியாது.சமீபத்தில் ஒரு பேருந்து பயணத்தில், அழுதுகொண்டிருந்த குழந்தையை சமாதானப் படுத்தி தூங்க வைக்க முடியாமல் ஒரு தாய் தவித்துக்கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது. மற்ற பயணிகள் எரிச்சலடைந்ததால், நடத்துனர் டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து வழியில் ஒரு ஊரில் இறக்கிவிட்டார். இது போன்ற நிகழ்வுகள் ஒன்றல்ல ரெண்டல்ல கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் ஆயிரம்கூட சொல்ல முடியும். நெடுஞ்சாலைகளில் பயணித்தவர்கள் கவனித்திருப்பீர்கள், காரில் சிறு குழந்தையுடன் வரும் தம்பதியர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சித்துக்கொண்டிருப்பார்கள். பேருந்தில்தான் குழந்தைக்கு ஏற்ற சூழல் இல்லை என்றால் காரிலுமா? என்ற சந்தேகம் வருகிறதா? கார் மட்டுமல்ல எந்த பயணமும் குழந்தைக்கு அவ்வளவு எளிதாக ஒப்புக்கொண்டுவிடாது.

பயணத்திற்கு குழந்தை எப்போது ரெடியாகும்?

பிறந்த குழந்தை எப்போது பயணத்திற்கு தயாராகும் என்று தெரியுமா? அதெல்லாம் குழந்தையின் நோய் எதிர்ப்பு திறனின் அளவு பொருத்துதான். சில குழந்தைகள் இரண்டாவது நாளே தயாராகிவிடும். சில குழந்தைகளுக்கு 20 நாட்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். ஆனால், மருத்துவர்கள் குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சி 3 முதல் 6 மாதங்கள் என்கிறார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு இன்னும்கூட கால அளவு தேவைப்படலாம். எத்தனை நாளுக்குப் பிறகு அழைத்துச் செல்லலாம் என்பதை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்யுங்கள். டாக்டர் நோ சொல்லிவிட்டால்… “ஸ்ட்ரிக்ட்லி நோ..”

கைக் குழந்தையோடு பயணம் செய்ய உதவும் 15 டிப்ஸ்

1.தடுப்பூசி

Thirukkural

குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகளை முதலில் போட்டுவிட வேண்டும். எந்த ஊரில் என்ன நோய் பரவல் இருக்கும் என்பதெல்லாம் தெரியாது. எதுவாக இருந்தாலும் உடனடியாக குழந்தையைத்தான் தாக்கும். ஆக, நாம் போகும் ஊரில் எதாவது வைரஸ் காய்ச்சல் பரவுகிறதா? வேறு எதாவது நோய் தொற்று இருக்கிறதா என்பதையெல்லாம் முன்கூட்டியே அலசி, அதற்கேற்ப தடுப்பூசி போட்ட பிறகே பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பயணத்தை ரத்து செய்துவிடுங்கள்.

2.குழந்தைக்கு தேவையான உணவு

குழந்தைகளுக்கான உணவு விஷயத்தில் கவனமாகவே இருக்க வேண்டும். எத்தனை மாத குழந்தை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரை திட உணவோ திரவ உணவோ,குழந்தைக்கு ஏற்றதை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.வழியில் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பயணத்தை ஒருபோதும் தொடங்கவே கூடாது.

எந்த ஊருக்கு செல்கிறோம் எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பற்றிய சரியான திட்டமிடலுடனும், அதற்கான முன்னேற்பாடுகளுடனும் பயணத்தை தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த 5 முதல் 8 மணி நேரத்துக்கான உணவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சி ஆற வைத்த பாலை பாதுகாப்பான ஒரு புட்டியில் எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், அவர்களுக்கு ஏற்ற உணவை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அலைச்சல், மன உளைச்சல் போன்ற காரணங்களால், குழந்தைகளுக்கு உணவளிப்பது தடைபடக் கூடாது.பழம், ஹோம்மேட் ரொட்டிகள் எல்லாம் பேக் செய்து கொள்ளுங்கள்.

3.டையபர் & துணிகள்

குழந்தை எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும், மலம் கழிக்கும் என்பதை நாம் ஓரளவுக்கு உணர்ந்திருப்போம். அதற்கேற்ற வகையிலான டையபர்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது, குழந்தைக்கு அணிவிக்கும் டையபர் காற்றோட்டமானதா என்பது.

சில இறுக்கமான டையபர்களால் தோல் சிவந்து போதல், அரிப்பு, தடிப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், சரியான டையபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தவிர, தொடர்ச்சியாக ஒரே டையபரை அணிந்திருக்கச் செய்யாமல், ஒருமுறை மலம் அல்லது சிறுநீர் கழித்த பிறகு சுத்தம் செய்ய தேவையான தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

4.பயண திட்டம்

பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு நம்மால் பயணம் செய்யவே முடியாது. கூடுமானவரை குழந்தை ஓரளவுக்கு வளரும் வரையில் பெற்றோரில் ஒருவர் மட்டுமே வெளியூர் பயணத்தை வைத்துக்கொள்வது சிறந்தது. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே குடும்பத்துடன் பயணிக்க வேண்டும்.

5.பஸ்ஸுக்கு நோ நோ…

பெரும்பாலும் பேருந்து பயணத்துக்கு நோ சொல்லிவிடுவது நல்லது. வாடகை கார் எடுத்துக்கொள்வதோ அல்லது ட்ராப்பிங் சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்களின் காரை பயணத்துக்கு பயன்படுத்துவதோதான் சிறந்தது. அப்போதுதான் நம் விருப்பப்படி பயணம் அமையும். கார் கிடைக்காதவர்கள் ரயிலை தேர்ந்தெடுங்கள். அடித்து பிடித்து தட்கலிலாவது டிக்கெட்டை வாங்கிக் கொள்ளுங்கள். அதுதான் சிறந்தது.

6.காரில்…

கணவன் வண்டியை ஓட்டும்போது மனைவி அருகில் அமர்ந்துகொள்வது வழக்கம். அப்போதுதான் பேச்சு துணையாக இருக்கும் என்பது எல்லாம் சரி. ஆனால், குழந்தையை வைத்துக்கொண்டு முன் இருக்கையில் இருவரும் அமர்ந்து பயணிப்பது அவ்வளவு நல்லதல்ல.

கணவனோ, மனைவியோ இருவரில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஒருவர் பின் இருக்கையில் அமர்வதுதான் சிறந்தது. அப்போதுதான் குழந்தையும் இறுக்கமாக உணராமல் நிம்மதியாக தூங்கும்.

7.தவிர்க்க முடியாத பேருந்து பயணத்தில்…

தவிர்க்கவே முடியவில்லை. பேருந்துதான் எங்களுக்கு ஒரே வழி… அவசர கதியில் டேக்ஸி பிடிக்க முடியவில்லை எனும் பெற்றோரா நீங்கள்? இந்த சூழலில் பயணத்தை முடிந்தால் ரத்து செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் 6 மணி நேரத்துக்கு மிகாத வகையில் பயணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். வழியில் ஒரு ஊரில் இறங்கி, கொஞ்சம் ரீஃப்ரஷ் ஆகிவிட்டு, மீண்டும் பயணத்தை தொடருவது சிறந்தது. உறவினர் அல்லது நண்பர்கள் இருக்கும் ஊர்களை வழித்தடமாக பயன்படுத்துவது சிறந்தது.

8.இரவு விளக்கு

குழந்தை தூங்கும் நேரத்தை பயண நேரமாக வைத்துக்கொள்வது சிறந்தது. அது இரவாக இருக்கும்பட்சத்தில், வழி நடுவில் குழந்தை விழித்தால் அதன் கவனத்தை திசைதிருப்ப சிறிய ரக டார்ச் லைட்டை வைத்துகொள்ளலாம். அதைப் பார்க்கும்போது அழுகையில் இருந்து குழந்தை விடுபட்டு சிரிக்கத் தொடங்கிவிடும்.

9.குளிக்க பாத் டப்.. சோப்… ஆயில்

குழந்தைகள் குளிக்கும்போது ஆனந்தமாக இருப்பார்கள். அதுவும் குறிப்பாக பாத் டப் போன்றவற்றில் உட்கார்ந்து குளிக்கத் தொடங்கிவிட்டால் அந்த சந்தோஷமே அடுத்த சில மணி நேரத்திற்கு நீடிக்கும். வீட்டில் இந்த வசதியெல்லாம் இருக்கும். வெளியே செல்லும் இடத்தில் என்ன செய்வது என யோசிக்காமல் போர்டபிள் பாத் டப் வாங்கி நம் லக்கேஜுடன் சேர்த்துக்கொள்வது சிறந்தது. வீட்டில் இருக்கும்போது பயன்படுத்தும் சோப்பு மற்றும் எண்ணெய்யைப் பயன்படுத்துவதே சிறந்தது. வழியில் எதாவது வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தால் அது குழந்தைக்கு ஒப்புக்கொள்ளுமா என்பதெல்லாம் அந்த நேரத்தில் நம்மால் யோசித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க முடியாது.

10.தெர்மோ மீட்டருடன் கூடிய ஃபர்ஸ்ட் எய்ட் கிட்

பயணத்தின்போது எப்போதும் ஃபர்ஸ்ட் எய்ட் கிட் வைத்திருப்பது நல்லதுதான். ஆனால், குழந்தைகளுடன் செல்லும்போது அதில் தெர்மோமீட்டரையும் சேர்த்துக்கொள்வது சிறந்தது. ஏனென்றால் புதிய ஊரின் சூழல் & சீதோஷண நிலை காரணமாக குழந்தைக்கு காய்ச்சல் அறிகுறி தெரிகிறதா என்பதை சோதித்துப்பார்க்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுகலாம். மற்றபடி காட்டன் துணி, டெட்டால், பஞ்சு, வலி நிவாரணி உள்ளிட்ட வழக்கமான பொருட்கள் எல்லாம் அந்த கிட்டுக்குள் அடக்கம்.

11.புத்தகம் & கையடக்க பொம்மைகள்

குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவதற்காகவே ஏகப்பட்ட பொருட்கள் நம்மைச் சுற்றி கிடைக்கின்றன. ஆனால், அதையெல்லாம் பயணத்தில் கொண்டு செல்லவதென்பது நம்மால் முடியாதல்லவா? அதற்காக கார்டூன் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். அதில் இருக்கும் உருவங்கள், வடிவங்கள் போன்றவை குழந்தைகளின் ஆகச் சிறந்த பொழுதுபோக்கு.

கிலுகிலுப்பு போன்ற ஒலி எழுப்பும் சாதனங்கள் சிறந்தவைதான். ஆனால் பயணத்தின்போது நம் சக பயணிகளுக்கு தொல்லை தரக்கூடாதல்லவா?

12.இசை

இசை நமக்கு பயண வழித்துணை. குழந்தைகளும் இசையை ரசிக்கும். உட்காரத் தொடங்கியதுமே ஆடவைக்கும் பாடல்களுக்கு குழந்தைகள் குதுகலிப்பதை பார்த்திருப்போம். எந்தெந்த இசை குழந்தையை ஈர்க்கிறது என்பதை கவனித்து பட்டியலிட்டு வைத்திருந்தால் அதையெல்லாம் காரில் ஒலிக்கச் செய்யலாம். குழந்தையின் மகிழ்ச்சிதான் நமக்கு இனிமையான பயணமாக அமையும்.மேலும் சீக்கரம் தூங்கவும் செய்வார்கள்.

13.நீடித்த பேட்டரி பேக் அப்

லேப்டாப், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களில் எப்போதும் சார்ஜ் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதைப் பயன்படுத்தி சார்ஜ் காலியாகி நடு வழியில் எங்காவது சிக்கிக் கொண்டால் யாரையும் அந்த நேரத்தில் உதவிக்கு அழைக்க முடியாது. காரில் செல்பவர்கள் டீசல் அல்லது பெட்ரோல் டேங்க்கை நிரப்பிவிட்டு புறப்படுவது சிறந்தது. வழியில் எங்காவது பெட்ரோல் பங்க்கை பார்த்தால் அங்கேயும் எரிபொருளை நிரப்பிக்கொள்ளுங்கள்.

14.பயண நீட்டிப்புக்கு நோ நோ…

ஒன்று அல்லது இரண்டு நாளுக்கு மேல் பயணத்தை வைத்துக்கொள்ளவே கூடாது. சென்ற இடத்தில் உறவினர்கள் குழந்தை மேல் உள்ள பாசத்தில் ‘இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க’ எனக் கூறலாம். அன்புக்கு மயங்கி குழந்தையின் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அந்த பகுதி எப்படி இருக்கிறது? அருகில் மருத்துவமனை இருக்கிறதா? உயர் சிகிச்சைக்கான மருத்துவமனைகள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பயண நீட்டிப்பு செய்யலாம். அதுவும் அதிகபட்சம் ஒரு நாள்தான் சிறந்தது. புதிய சூழல் குழந்தைக்கு எப்போதும் ஒப்புக்கொள்ளாது.

15.குழந்தையோடு வெளிநாட்டு பயணமா..

பிறந்த குழந்தைக்கும் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் தெரியுமா? பாஸ்போர்ட் அவசர கதியில் எடுப்பது கொஞ்சம் சிக்கலான நடைமுறை என்றாலும் இதற்கும் தட்கல் இருக்கிறது. அவசர பயணமென்றால் அந்த வழியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விமான பயணத்தில் முக்கியமானது முன்கூட்டியே கிளம்புவது. கடைசி நேர பதட்டத்தையும் பரபரப்பையும் தவிர்க்கும் பொருட்டு நேரம் வீணானாலும் பரவாயில்லை என்று முதல் ஆளாக கிளம்பிவிடுங்கள். அப்போதுதான் கூட்ட நெரிசல் கடைசி நேர கெடுபிடி என நம்முடன் சேர்ந்து நம் குழந்தையும் வதைபடாமல் இருக்கும்.

எந்த நாட்டுக்கு அழைத்துச் செல்கிறோமோ அங்கு என்ன உணவெல்லாம் கிடைக்கும் என்பதைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம். அதற்கேற்றார் போல் அந்த உணவு வகைகளை சாப்பிட முன்கூட்டியே தயார்படுத்தலாம். ஏனென்றால் ஃப்ளைட்டில் உணவு பொருளை ஏற்ற அனுமதிக்க மாட்டார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

எங்கும் எப்போதும் கொஞ்சம் நடங்க…

நேரம் கிடைக்கும்போதெல்லாம் குழந்தையை தூக்கி தோளில் சாய்த்தபடி கொஞ்சம் நடக்கலாம். அதுதான் குழந்தைக்கான முழு ஆறுதல். நடக்கிறேன் என கீழே விழுந்துவிட வேண்டாம். தோளில் சாய்த்து முதுகில் தட்டிக்கொடுக்கும்போது குழந்தைகள் அரவணைப்பாக உணர்வார்கள். அது இன்னும் கொஞ்சம் விரைவாக தூங்க வைக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி

tamiltips

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் என்ன செய்ய கூடாது? என்னென்ன செய்யலாம்?

tamiltips

பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

tamiltips

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

tamiltips

சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமடைய 24 டிப்ஸ்…

tamiltips

குழந்தைகளை ஈஸியான முறையில் தூங்க வைக்க டிப்ஸ்…

tamiltips