குழந்தையின் அழுகை எவராலும் தாங்கி கொள்ள முடியாது. அடுத்த நொடியே குழந்தையின் அழுகையை நிறுத்தவே முயற்சிப்போம். குழந்தையின் அழுகைக்கான காரணங்கள் (Reasons for baby crying). அழுகையை சமாளிக்க வழிகள் என்னென்ன இருக்கின்றன என்பதை இங்கு முழுமையாகப் பார்க்கலாம்.
4 மாதத்துக்குள் உள்ள குழந்தைகளை, சரியாகப் போர்வை போர்த்தி, குளிருக்கு இதமாகத் துணியை சுற்றி படுக்க வைத்தால் அதிகமாக நை நையென்று அழ மாட்டார்கள். வயிற்றுக்குள் கிடைத்த பாதுகாப்பு உணர்வு அவர்களுக்கு கிடைக்கும்.
மாலை 4 மணி வரை குழந்தை தூங்கி கொண்டிருந்தால் குழந்தைக்கு பசி எடுக்கும். பசியும் தூக்கமும் சேர்ந்து இருப்பதால் அழுவார்கள். எனவே, அந்நேரத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கலாம். பெரிய குழந்தைகளாக இருப்பின் திடஉணவுகளாக ஸ்நாக்ஸ் கொடுக்கலாம்.
குழந்தை இருக்கும் அறையில் மெல்லிய சத்தத்தில் உள்ள மியூசிக் சிடியை இசைக்க விடலாம். மனதை ரம்மியமாக்கும். தியானத்தின்போது ஒலிக்கப்படும் இசையை எப்போதும் மெதுவான சத்தத்தில் இசைக்க விட்டால் குழந்தை அடிக்கடி அழாது.
குழந்தை அணிந்திருக்கும் ஆடை, குழந்தை படுத்திருக்கும் மெத்தை, போர்வை எப்போதும் உலர்ந்து இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
வெளியில் செல்லும்போது, குழந்தையை தூக்கி கொண்டே இருந்தால் உங்களின் உள்ளங்கை ஈரமாக வியர்த்தும் இருக்கலாம். எனவே, அவ்வப்போது கைகளை துடைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை உட்கார வைத்துத் தள்ளி செல்லும் வண்டிகளும் கிடைக்கின்றன. அவற்றைகூட பயன்படுத்தலாம்.
பொதுவாக 26 சதவிகித குழந்தைகள் வாயு தொல்லையினால் ஏற்படும் வலியால் அழுவார்கள். நெஞ்சில் அமிலத்துடன் ஏப்பம், வாயுத் தொல்லை போன்றவை இருக்கலாம். குழந்தை பிறந்து 2வது வாரத்தில் இந்தப் பிரச்னை தொடங்கி 6வது வாரத்தில் அதிகமாக இருக்கும். பின்னர் 16வது வாரத்தில் சரியாகிவிடும். இந்த நடுப்பட்ட காலத்தில் வாயு சேராமல் குழந்தையை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஓம தண்ணீர் கொடுக்கலாம். தாய், பூண்டு சாப்பிட்டு தாய்ப்பால் கொடுப்பது, மென்மையாக மசாஜ் செய்வது போன்றவை நல்லது.
சில குழந்தைகளுக்கு பளிச்சென கண்களில் விழும் வெளிச்சத்தாலும் அடிக்கடி அழலாம்.
சில வீட்டில் சத்தமாக டிவி பார்ப்பார்கள். இதனாலும் குழந்தை அடிக்கடி அழலாம்.
கண்களை கூசும் நிறங்கள், டிசைன்கள் போன்றவை குழந்தைக்கு தொந்தரவாக இருந்தாலும்கூட குழந்தைகள் அழும்.
அழும் குழந்தையை சமாளிக்க…
ஸ்வாட்லிங்
குழந்தையை மெத்மெத்தென்று உள்ள துணியால் அழகாகப் போர்த்தி, இதமாகத் தூங்க வைக்கும் முறை இது. இந்த முறை குக்கூன் புழு போன்ற அமைப்பைத் தரும். குழந்தை பாதுகாப்பாக உணரும். அழுவது குறையும்.
Image Source : Jojo maman bebe
ஒரு பக்கம் படுத்தல்
சின்ன குழந்தைகள் மல்லாக்க படுத்துத் தூங்குவார்கள். ஆனால், வயிற்றில் ஒரு பக்கம் படுத்து இருந்திருப்பார்கள். நீங்கள் தாய்ப்பால் தரும் போதெல்லாம் ஒருபக்கம் சாய்த்து குழந்தையைக் பிடித்துக்கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு அந்த முறை பிடிக்கவே செய்யும்.
தாலாட்டு ஒலி
சில தாலாட்டு ஒலி குழந்தைகளுக்கு பிடிக்கலாம். மென்மையான இசையை ஒலிக்கவிட்டு தூங்க வைக்கலாம். உங்களுக்கு பாட தெரிந்தாலும் பாடுங்கள்.
தூளியில் போடுவது
தூளியில் தூங்க வைத்தாலோ, குழந்தையை தூளியில் போட்டு ஆட்டினாலோ குழந்தை அழுவதை நிறுத்த முடியும். தூளியில் படுக்கும் குழந்தைகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பதால் தூளியில் குழந்தைகளைப் போடுங்கள்.
இதையும் படிக்க: தூளி, மெத்தை, தொட்டில்… குழந்தையை எதில் படுக்க வைக்க வேண்டும்?
சப்புதல்
சில குழந்தைகள் சில காலத்துக்கு சப்புதலை விரும்புவார்கள். அது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வுத் தருவதாக இருக்கலாம். அந்த குழந்தைகளை நீங்கள் இன்னும் சற்று கூடுதலாகக் கவனியுங்கள், அதற்கான அறிகுறிதான் இது. தாய்ப்பால் கொடுக்கலாம். அரவணைத்துக் கொள்ளலாம். குழந்தையின் கைகளை சப்பிகொள்ள அனுமதிக்கலாம். ஆனால், இது சில காலத்துக்கு மட்டுமே. பழக்கமாகிவிட கூடாது.
ஃபிரன்ட் பேக்
கங்காரு குட்டி எப்படி குழந்தை பைக்குள்ளே போட்டுக் கொள்ளும். அதுபோல, உங்களது முன்பக்கத்தில் குழந்தை படுத்துக்கொள்வது போல பேபி பேக்குகள் கிடைக்கின்றன. அதைப் பயன்படுத்தலாம். இதனால் தாயுடனே இருக்கும் உணர்வு கிடைக்கும். குழந்தை அழுவது கட்டுப்படும்.
ஆட்டோமேட்டிக் கிராடிள்
தற்போது குழந்தையைப் படுக்க வைத்தப்பின் தானாக ஆடும் வகை கிராடிள்கள் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்துவதால் குழந்தை நம் பக்கத்திலே தாய் இருக்கிறாள் என்ற பாதுகாப்பு உணர்வுடன் தூங்க தொடங்கும். அழுவது நிற்கும்.
தாலாட்டு பாடுங்கள்
அடிக்கடி குழந்தையை தூங்க வைக்க, உங்களது இதமான குரலில் தாலாட்டு பாடுங்கள். குழந்தை உங்கள் குரலை கேட்டு பழகும். பயம் நீங்கும். குழந்தை அழாது.
இளஞ்சூடான தண்ணீர்
எப்போதும் குழந்தையை இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வையுங்கள். சுட சுட உள்ள தண்ணீரால் குழந்தையை குளிப்பாட்ட கூடாது. எந்தக் குழந்தை குளிக்க வைப்பதற்கு அழைத்து சென்றாலே, அழுகிறதோ நீங்கள் அந்த குழந்தையை தவறான முறையில் குளிக்க வைக்கிறீர்கள் என அர்த்தம்.
இதையும் படிக்க: குழந்தையை குளிக்க வைக்கும் முறை சரியா என எப்படி தெரிந்துகொள்வது?
மசாஜ்
மசாஜ் செய்வது மிக மிக முக்கியம். நிறைய பாட்டிமாக்கள் குழந்தையின் கால்களை, கைகளை தனியாக பிய்த்து எடுப்பதுபோல தேய்ப்பார்கள். அப்படியெல்லாம் செய்ய கூடாது. குழந்தையின் உடல்நிலையைப் புரிந்துகொண்ட பாட்டிமாக்கள் அப்படி செய்ய மாட்டார்கள். நடுவில் தவறாக கற்றுக் கொண்ட சிலர்தான் மிகவும் வேகமாக குழந்தைகளை கையாளுகின்றனர். மெதுவாக, இதமாகத் தேய்த்து விடுகையில் குழந்தையின் முகத்தில் லேசான சிரிப்பு தெரிந்தாலே நீங்கள் செய்யும் மசாஜ் சரியானது என அர்த்தம். மெதுவான, இதமான, லேசான மசாஜ் செய்வதே குழந்தைக்கு ஆரோக்கியம்; பாதுகாப்பு.
போர் அல்லது கவனத்தை ஈர்ப்பது
சில குழந்தைகளுக்கு போர் அடித்தாலும் அழும். சில குழந்தை தங்களைக் கவனிக்கவில்லையே என அழுது தாயை கூப்பிடும். அழுத உடனே யாரோ நம்மை வந்து கவனிக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டு மீண்டும் மீண்டும் அழது அதேபோல் செய்யும். தாங்கள் அருகிலே இருக்கிறோம் என்றும் பாதுகாப்பான உணர்வைக் கொடுத்துவிட்டால் குழந்தை இப்படி செய்யாது.
Image Source : Parenting
கண் பார்த்து பேசுதல்
குழந்தையின் கண் பார்த்துப் பேசுதல், சிரித்தல், கொஞ்சுதல் போன்ற செய்கைகள் குழந்தைக்கு நம்பிக்கை உணர்வை அளிக்கும். குழந்தையிடம் விளையாடுவது, ஒலி எழுப்பிக் கொஞ்சுவது, முத்தமிட்டு கொஞ்சுவது, குழந்தையை அரவணைத்துக் கொள்வது போன்றவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை சரியாகப் புரிந்துகொண்டால் அழும் குழந்தையை சமாளித்து விடலாம்.
பசி அழுகை
பசிக்காக குழந்தைகள் அழும். தூக்கமும் வரும் பசியும் வரும் இதை சமாளிக்க முடியாமல் எரிச்சல் அடைந்து வீச் வீச்சென்று அழுதுகொண்டே இருக்கும். சரியான நேரத்துக்கு தாய்ப்பால் கொடுங்கள். கொஞ்சம் பெரிய குழந்தையாக இருந்தால், குழந்தை எழும் நேரத்தில் பாலை தயாராக வைத்திருங்கள். குழந்தை அதிகமாக அழுவதைத் தடுக்க முடியும்.
இதையும் படிக்க: துணி வகை டயாப்பர்… பயன்படுத்தும் முறைகள் மற்றும் டிப்ஸ்…
ஈரம் ஒரு முக்கிய காரணம்
ஈரத்துடனே இருப்பது யாருக்குமே பிடிக்காது. அதுபோலத்தான் குழந்தைகளும். அவ்வப்போது ஈர டயாப்பரை, துணியை மாற்றுங்கள். குழந்தையை எப்போது உலர்ந்த தன்மையில் வைத்திருப்பதுதான் ஆரோக்கியம்.
இதையும் படிக்க: ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ்…
ஏப்பம் வராமல் தவித்தல்
பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். தாய்ப்பால், புட்டிப்பால், திட உணவு எதை சாப்பிட்டாலும் சரி தோளில் போட்டு முதுகில் தட்டி ஏப்பம் வந்த பின்னே குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். ஏப்பம் வராமல் குழந்தையை அப்படியே படுக்க வைத்தால் அசௌகரிய உணர்வால் குழந்தைகள் அழும்.
இதையும் படிக்க: வாக்கர் பயன்படுத்தினால் குழந்தைக்கு இந்த வளர்ச்சிகள் கிடைக்காமல் போகலாம்..!