கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மறக்கமுடியாத காலகட்டமாகவே உள்ளது.அதிலும் மசக்கையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அதைப்பற்றி சற்று விரிவாகக் காணலாம்.வாருங்கள்!
மசக்கை என்றால் என்ன? (What is morning sickness in Tamil?)
கர்ப்பிணிப் பெண்களுக்கு தாங்கள் கருவுற்ற காலம் தொட்டு 12 முதல் 14 வாரங்கள்(முதல் மூன்று மாதங்கள்) வரை மசக்கைத் தொந்தரவு ஏற்படுகின்றது. காலை எழுந்தவுடன் வாந்தி,மயக்கம், குமட்டல், உடல் சோர்வு போன்ற பல தொந்தரவுகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் ஆளாகின்றனர். இதனையே ‘மசக்கை’ என்று அழைக்கின்றனர். இந்த மசக்கை பெரும்பாலும் காலை நேரத்தில் சற்று அதிகமாகக் காணப்பட்டு பின்னர் படிப்படியாகக் குறைகின்றது. அதனாலேயே மசக்கையை ஆங்கிலத்தில் ‘மார்னிங் சிக்னஸ்’ என்று கூறுகின்றனர்.
மசக்கை ஏற்படக் காரணம் என்ன? (Reason for morning sickness in Tamil)
தன் உடலில் ஒரு புது உயிர் வளரத் தொடங்குவதை உணர்ந்த ஒவ்வொரு பெண்ணும் மிகவும் ஆனந்தமான மனநிலைக்குத் தள்ளப் படுகின்றாள். ஆனால் அதே பெண் மசக்கையைச் சந்திக்க நேரிடுகையில் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறாள். இந்த இன்பமான வேதனையைக் கடக்காத கர்ப்பிணிப் பெண்கள் அரிது. ஒரு உயிரை தன் கருவறையில் வளர்த்து முழுமையாக்குவது என்பது அத்தனை எளிதானதா? இல்லை! அதனால் இந்த அசாதாரண உடல் நிலையைத் தாங்கிதான் கொள்ள வேண்டி உள்ளது.
Read Also: அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆரோக்கியமானதா?
இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் இந்த உண்மையை உணர்ந்து மனம் தேற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மசக்கை என்பது பெரும் சவாலாகவே உள்ளது. இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தைத் தாக்குவதால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மசக்கை குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. நம் உடலில் கரு வளர ஆரம்பித்த உடனே பல்வேறு சுரப்பிகள் சுரக்கத் தொடங்கி விடுகின்றன. இந்த சுரப்பிகள் அனைத்தும் நம் கருவறையைக் கருவின் வளர்ச்சிக்கு உகந்த ஒரு அற்புத இடமாக மாற்றுகின்றன. நம் குழந்தை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் வளர வேண்டும் தானே? அந்த அற்புத மாற்றங்களுக்கான வழிகாட்டிகள் தான் இந்த சுரப்பிகள்! இரத்தத்தில் ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு அதிகரிக்கும்போது மசக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்களின் இரத்த அழுத்தத்தின் அளவும் மாறுதல்களைச் சந்திக்கின்றன. கர்ப்பமான பெண்கள் இதை இயற்கையான விசயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது சராசரியாக எல்லா பெண்களுக்கும் ஏற்படுகின்ற நிலைமை என்பதையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இந்த அசாதாரண உடல் நிலையை பெரும்பாலான பெண்கள் அனுபவித்துத்தான் உள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இன்ப மனநிலையோடு இருத்தல் அவசியம். அதுவே கருவின் ஆரோக்கியத்திற்கு சாலச் சிறந்தது. என்ன சில மாதங்கள்!எல்லாவற்றையும் கடந்து வந்தால் உங்கள் கையில் வரமாய் ஒரு அழகான சிசு!
மசக்கையின் அறிகுறிகள் (Symptoms of morning sickness)
எப்போதும் விரும்பும் வாசனைகள் எல்லாம் தற்போது நாசிக்கு வெறுப்பூட்டும் வாசனைகளாக மாறும்.உதாரணமாக விரும்பி ரசித்த நெடிகளான காபி மணம், பிரியாணி மணம்,நெய் மணமெல்லாம் குமட்டலை வர வைக்கும்.
- ஒரு சிலருக்குப் பசி எடுப்பதில்லை.சிலருக்குப் பசி எடுத்தும் சரியாகச் சாப்பிட இயல முடிவது இல்லை. வாய் அருகே உணவை எடுத்துச் சென்றாலே வாந்தி முந்திக் கொண்டு வந்துவிடுகிறது.இதனால் கர்ப்பிணிப் பெண்களின் உடல் எடை கணிசமான அளவு குறைந்து விடுகின்றது. இதனால் அவர்கள் முதல் நிலை கர்ப்பகாலத்தில் மெலிந்து பலவீனமானவர்களாகவே காட்சி அளிக்கின்றனர்.
- உடல் சோர்வும் அசதியும் ஏற்படும்.
- அவ்வப்போது தலைச் சுற்றலும் மயக்கமும் ஏற்படும்.
மசக்கையை எதிர்கொள்ளும் வழிகள் (How to handle morning sickness)
- காரம்,எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.
- அதிகமாக வாந்தி எடுப்பதால் உடலிலிருந்து நீர்ச் சத்து கணிசமான அளவு குறைந்துவிடுகிறது இதன் காரணமாகவே கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் உடல் சோர்வாக உணர்கின்றனர். ஆகையால் அவர்கள் தண்ணீர் போதுமான அளவு அருந்த வேண்டும். சிறிது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு தண்ணீர் அருந்திக் கொள்ளலாம். அதனால் அவர்களின் உடல் அசதி குறைய நிறைய வாய்ப்பு உள்ளது.
- மசக்கையினால் அவதிப்படும் பெண்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ளலாம்.அப்படிச் செல்ல நேரும் பட்சத்தில் கையில் புளிப்பு மிட்டாய் வைத்துக் கொள்வது நல்லது.
- சித்த வைத்திய கடைகளில் இஞ்சி மிட்டாய்கள் விற்கப்படுகின்றன.இதனை உட்கொள்வதாலும் வாந்தி கட்டுப்படும்.
- எலுமிச்சைப் பழத்தை நுகர்வதால் குமட்டல் உணர்வு குறைகிறது.
- செயற்கை நிறம் கலக்கப்பட்ட உணவுப் பண்டங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் துரித வகை உணவுகள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். அதுவே தாய்க்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.
- உயிர்ச்சத்து பி6 நிறைந்த காய்கறிகளான பீன்ஸ்,கேரட் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- இளநீர்,நுங்கு, மோர் மற்றும் பழவகைகளை அதிகம் உட்கொள்ளலாம்.குறிப்பாக மாதுளையை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
- பழங்களைச் சாறு பிழிந்தும் அருந்தலாம்.
- எதுவுமே சாப்பிட இயலாத சூழல் நிலவினாலும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு போதிய ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. ஆகையால் அதை மனதில் நிறுத்திக் கொண்டு உணவுகளைச் சற்று சிரமப்பட்டாவது, கர்ப்பிணிப் பெண்கள் உண்ண வேண்டும். ஒருவேளை என்ற கணக்கை விட்டுவிட்டு, ஆறு வேளையாகக் கூடப் பிரித்து, உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம்.
- உடல் மிகவும் அசதியாக இருக்கும் தருணங்களில் மதிய வேளையில் சிறு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
- உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்லாமல் சுமார் ஒரு மணி நேரமாவது அமர்ந்துவிட்டுச் செல்வது நன்று.
- மாலை வேளையில் சிறு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வெளிக்காற்று புத்துணர்ச்சி அளிப்பதோடு மனச்சோர்வை அகற்றவல்லது.
- மசக்கைக் குறித்தும் பிரசவத்தைக் குறித்தும் நேர்மறையாகப் பேசுபவரோடு பழகுவது நல்லது.
- மசக்கை காலத்தில் புளிப்புச் சுவையை உண்ண நாவிற்குப் பிடிக்கும்.அதனாலேயே கர்ப்பிணிப் பெண்கள் மசக்கை காலத்தில் மாங்காய்களையும் புளியங்காய்களையும் விரும்பி உண்கின்றனர்.இதுகுறித்து,“மாங்காய் திருடித் தின்ற பெண்ணே மாசம் எத்தனையோ?”என்று ஒரு அழகான பாடல் கூட உள்ளது.
- மசக்கையில் அவதிப்படும் பெண்களுக்கு வாய்க்கு ருசியான உணவைப் படைத்துத் தரலாம்.
- மசக்கையைக் கண்டு சில பெண்கள் மன பயமும் விரக்தியும் கொள்கின்றனர். இது மாதிரியான மனநிலை கொண்ட பெண்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்குவது நல்லது.இவர்களைத் தனிமையான சூழலில் விடாமல் இருப்பது நல்லது.
- ஒரு சில பெண்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வந்து விடுகின்றது.அது மாதிரியான சூழலில் தவிக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையை நாடி,அவர்களின் அறிவுரையோடு உரிய மாத்திரைகளைக் எடுத்துக்கொண்டு வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.
மசக்கை குறித்த மூட நம்பிக்கை (Myth about morning sickness in tamil)
சில கர்ப்பிணிப் பெண்கள் வாந்தி எடுப்பதால் தங்கள் வயிற்றின் தசைகளில் வலியை உணர்கின்றனர். அதனால் தங்கள் சிசுவிற்கும் வலி ஏற்படுமோ என்று சந்தேகிக்கின்றனர். அப்படி நடப்பதே இல்லை. சிசுவிற்குச் சிறு காயமோ,வலியோ கூட ஏற்பட வாய்ப்பில்லை! ஏனென்றால் சிசு பனிக்குட நீரில் மிகவும் பாதுகாப்பான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சில எச்சரிக்கைகள் (Warning for pregnant women)
அளவுக்கு அதிகமான தலைச்சுற்றலும் வாந்தியும் ஏற்படும் பட்சத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அதைச் சாதாரணமாக எண்ணிக் கொள்ளக் கூடாது.ஏனென்றால் சில சமயம் கரு கருவறையில் வளராமல் கருக் குழாயில் வளரத் தொடங்கிவிடும்.அந்தச் சூழலிலும் அளவுக்கு அதிகமான வாந்தி ஏற்படும். அது போக வயிற்றில் இரட்டை சிசுக்கள் இருந்தாலும் அளவுக்கு அதிகமாக வாந்தி வர வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில் மருத்துவர்களின் ஆலோசனையும் கண்காணிப்பும் மிகவும் அவசியமானது.
இந்த பதிவின் மூலம் மசக்கை ஏற்படுவதற்கான காரணங்கள்,அதன் அறிகுறிகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் வழிகள் என்று அனைத்தையும் அறிந்து பயன் அடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
Read Also: ஹீமோகுளோபின் என்றால் என்ன?