தேவையானவை
தக்காளி – 2
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 1 பல் (விரும்பினால்)
சாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
கடலை மாவு – அரை ஸ்பூன்
வறுத்து பொடிக்க: வெந்தயம் – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கொத்த மல்லி விதை – அரை ஸ்பூன்
தாளிக்க: கடுகு – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்துமல்லி இலை – சிறிதளவு
செய்முறை:
ஒரு குக்கர்ல தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், ஒரு பல் பூண்டு எல்லாத்தையும் போட்டு மூழ்கற அளவுக்கு தண்ணீர் விட்டு அதிலயே மஞ்சள்பொடி சாம்பார் பவுடர் போட்டு குக்கரை 2 விசில் விடுங்க. ஆறினவுடனே நல்லா மசிச்சுக்கணும்.
வெறும் வாணலில வெந்தயம், சீரகம், காய்ந்தமிளகாய் கொத்தமல்லி விதை வறுத்து பொடி பண்ணிக்கோங்க! இதை எப்பவும் தயார் பண்ணிக்கலாம். காய் வதக்கும்போது இந்த பொடி போட்டா சூப்பரா இருக்கும்.
இப்ப வாணலில கொஞ்சமா எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிச்சு மசிச்சு வச்சிருக்கற சாம்பாரை விட்டு கொதிச்சவுடனே தேவையான உப்பு, பொடி பண்ணி வச்சிருக்கறதை போட்டு, கொஞ்சம் கடலைமாவை கரைச்சு அதில் ஊற்றி கொதிக்கவைங்க! சிலர் கடலைமாவை வெறும் வாணலில வறுத்துட்டு கரைச்சு ஊத்துவாங்க. பச்சையாவும் ஊற்றலாம். நல்லா கொதிச்சவுடனே பொடியா நறுக்கின கொத்துமல்லி தழை போட்டு இறக்கவேண்டியதுதான்
குக்கர்ல தான் பண்ணனும்னு இல்ல. வாணலில கூட வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் வதக்கிட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்கவச்சு பண்ணிடலாம். நல்லா பாவ்பாஜி மசாலா மாதிரி காய்கறியை மசிக்கணும். அவ்ளோதான்
1. இந்த பொடி வறுத்து போடறது வாசனைக்குத்தான். அதுக்கு டைமில்லன்னா கடுகு தாளிக்கும்போதே சீரகம் வெந்தயம் தாளிச்சுடலாம்
2. வெங்காயம் சேர்க்க மாட்டேன்னு சொல்றவங்க பொடியா நறுக்கின கோஸை சேர்த்து கொதிக்கவச்சுடலாம்
3. பொடியா நறுக்கின கத்தரிக்காயை சேர்த்து கொதிக்கவச்சா கல்யாண கொத்சு ரெடி
4. இதிலயே நல்லா பொடியா நறுக்கின குடைமிளகாயை வதக்கி சேர்த்தா சூப்பரா இருக்கும்
5. பொடியா நறுக்கின பறங்கிக்காய், கத்தரிக்காய், தக்காளி, சௌசௌ முள்ளங்கி சேர்த்து மேற்சொன்ன முறையில் பண்ணலாம்
6. கடலைமாவை கட்டியில்லாம கரைச்சுக்கணும். அது ரொம்ப முக்கியம்