கொரோனா உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர்.
தேவையில்லாமல் அநாவசியமாக வெளியே சுற்றுபவர்களைக் கண்காணிக்க காவல்துறையினர் ட்ரோன்களை பயன்படுத்தி எங்கே ஊரடங்கை மீறி மக்கள் நடமாடுகிறார்கள் என்று அறிந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீஸார் டிரோன் கேமிராவை விட்டு மக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்தபோது, பொட்டல் காட்டில் ஒரு மரத்தடியில் சிறுவர்கள் இளைஞர்கள் என பலர் கேரம் போர்டு விளையாடிக்கொண்டு கும்பலாக ஜாலியாக இருந்துள்ளனர்.
இது ட்ரோன் மூலம் தெரியவர, போலீசார் மெல்ல் ட்ரோனைக் கீழே இறக்க, ட்ரோனைப் பார்த்த சிறுவர்கள் இளைஞர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஓடியவர்களில் சிறுவன் ஒருவன் திரும்ப வந்து கேரம் போர்டைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான்.
பின் தொடர்ந்த ட்ரோனில் தனது முகம் பதிவாகிவிடக் கூடாது என்று கேரம் போர்டால் முகத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்துவிடுகிறான். இந்த சம்பவம் ட்ரோன் கேமிராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு ஜல்லிக்கட்டு களத்தின் பின்னணி இசையும் வடிவேலுவின் வசனங்களும் சேர்க்கப்பட்டு இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் விழுந்து விழுந்து சிறித்து வருகின்றனர். திருப்பூர் போலீசாரின் ட்ரோன் கண்காணிப்பால் கேரம் போர்டு விளையாட்டு ஜல்லிக்கட்டு களமாகியிருக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.