மீன் பிடிக்க தூண்டிலை போட்ட குடும்பம் ஒன்று அதில் இருந்து ராட்சத சுறா வெளியே வந்து தாக்க வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் பகுதியில் டாக் நெல்சன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் படகில் சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள அட்லாண்டிக் கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்டுள்ளனர். ஏதோ மீன் ஒன்று சிக்கவும் தூண்டிலை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துள்ளனர். தூண்டில் அருகே வர வர ஏதோ ராட்சத உருவம் ஒன்று வெளியே வருவது தெரிந்துள்ளது.
கண்ணிமைக்கும் பொழுதில் ராட்சத வெள்ளை சுறா ஒன்று தண்ணீருக்கு மேல் எழும்பி படகின்மேல் நீரை வாரியடித்தவாறு மீண்டும் தண்ணீருக்குள் சென்றது. அது தொலைவில் வரும்போதே உஷாராகி பின் வாங்கியதால் அந்த குடும்பத்தினர் தப்பித்தனர்.
படகில் விளிம்பில் நின்று கொண்டிருந்த சிறுவன் கொஞ்சம் தவறியிருந்தாலும் தண்ணீரில் விழுந்து சுறாவுக்கு இரையாகியிருக்க நேரிட்டிருக்கும். நூலிழையில் அந்த குடும்பத்தினர் தப்பித்தனர்.
சுறா மீன் தாக்கிய அந்த வீடியோவை அட்லாண்டிக் வெள்ளை சுறா பாதுகாப்பு அமைப்பு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. கடல்சார் ஆர்வலர்கள் சிலர் “சுறாக்கள் தூண்டில் புழுக்களுக்காக வரக்கூடியவை அல்ல. தூண்டிலி சிக்கிய மீனை பிடிப்பதற்காக தூண்டிலை தொடர்ந்து வந்து கவ்விய சமயத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
— Atlantic White Shark Conservancy (@A_WhiteShark) July 20, 2019