அவள்தான் எங்கள் உலகம்…எங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்த பொன்மகள்”… எனக் கூறும் கவிதா மற்றும் ஹிமான்ஷூ தம்பதி 2017 ஆம் ஆண்டு மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையை தத்தெடுத்து இந்தியாவிலும் மாற்றத்தை நிகழ்த்தியவர்கள்.ஆம்…
கவிதாவிற்கு திருமணத்திற்கு முன்பே, பெண் குழந்தை வேண்டும். ஆனால் அது தத்தெடுக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை. இதை திருமணத்திற்கு முன்பே தன் கணவரிடம் கூற அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அப்படி 2012 ஆண்டு திருமணம் இனிதே முடிந்து ஐந்து வருடத்திற்கு பிறகு வேதா என்கிற பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளனர்.
அதுவும் அவர்களுக்கு மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தே வேதாவை தத்தெடுத்துள்ளனர். இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அவர்கள் அளித்த நேர்காணலில் “ நாங்கள் அமெரிக்கா சென்றபோது மூளை வளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளைப் பற்றி தெரிந்துகொண்டோம். அப்போதுதான் இந்த முடிவை எடுத்தோம்” என்று கூறியுள்ளனர். இந்த தம்பதி உத்திர பிரதேசம் காசியாபாத் நகரில் வசித்து வருகின்றனர்.
16 மாதக் குழந்தையாக இருந்த வேதாவிற்கு தற்போது 4 வயது. நேற்றுதான் ( மே 30 ) அந்தக் குழந்தையை தத்தெடுத்த நாளை வெகு விமர்சையாக வீட்டில் கொண்டாடியுள்ளனர். அந்த மகிழ்ச்சி தருணத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளார் கவிதா.
”முதன் முதலில் வீட்டிற்கு வேதாவை தூக்கிச் சென்றபோது வரவேற்க யாரும் முன் வரவில்லை. தற்போது வேதா ஒரு நிமிடம் இல்லை என்றாலும் பதறும் அளவிற்கு அவளின் பாசமும், பேச்சும் வீட்டில் இருப்போரை கட்டிப்போட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் கூட அவளுக்கான தனி ரசிகர் கூட்டம் உண்டு” என்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மேலும் ”அவளுக்கு தேவையான உடல் ரீதியான மற்றும் மன ரீதியான உதவிகளை செய்ய நாங்கள் பெற்றோர்களாக முன் நிர்க்க எப்போதும் தவறியதில்லை. அவளுக்காக எங்களின் வாழ்க்கை முறையையே மாற்றியுள்ளோம். அவளின் கல்வியையும் வீட்டிலேயே பயிற்றுவிக்கிறோம். அவள் என்னவாகப் போகிறாள் என்பதும் அவளது விருப்பம்தான். அவளுக்கு தற்போது செடி வளர்ப்பு, தோட்டம் பராமரிப்பு, ஓவியம் வரைவது என்றால் மிகவும் பிடிக்கும்” என இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
வேதாவை வளர்க்க ஆரம்ப கால கட்டத்தில் யாருமே இல்லாமல் கஷ்டங்களை அனுபவித்த இந்த தம்பதி தற்போது பலருக்கும் முன்னுதாரணமாக மாற்றத்தை நிகழ்த்தியுள்ளனர். ”இந்த மாற்றம் பிள்ளைகளை வளர்க்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்க வேண்டும். குழந்தைகளை குழந்தைகளாகப் பாருங்கள். அவர்களிடம் இருக்கும் குறைபாடுகளை தேடினால் மழலை அழகு கண்ணுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் கவிதா.