Tamil Tips
குழந்தை பிரசவத்திற்கு பின் பெண்கள் நலன் பெற்றோர்

தாய்ப்பால் அதிகரிக்க 13 வீட்டுக் குறிப்புகள்

தாய்ப்பால் (Breastmilk)

பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவது அவர்கள் ஆரோக்கியமாக வளரப் போதிய சத்துக்களைத் தரும் என்பது அசைக்க முடியாத உண்மை.அதனாலே பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே ஏற்ற மற்றும் சிறந்த உணவாக உள்ளது.சுகப் பிரசவமோ அல்லது அறுவைசிகிச்சை பிரசவமோ, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் மிக முக்கியமான கடமையாகும். தாய்ப்பாலில் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கான அத்தனை நோய் எதிர்ப்பொருள்களும் நிரம்பி உள்ளன. கூடுதலாகத் தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவதே இல்லை.பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் தரக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் வலியுறுத்துவதுண்டு.

தாய்ப்பால் தர இயலாத சூழல் (Unsatisfactory situation to give breastmilk)

இவ்வாறு இருக்கும் போது, அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர முடியுமா என்று கேட்டால் அது சற்று சிந்திக்க வேண்டிய கேள்வியாகவே இருக்கும். ஏனென்றால் இன்று பல பெண்களுக்கு அவர்களது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் என்று பல காரணங்களால் குழந்தைப் பேறு பெற்ற பின் சரியாக அல்லது முற்றிலுமாகத் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகின்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் குழந்தைக்குப் போதிய சத்தான உணவு கிடைக்காமல் போய்விடுகிறது.

தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்கள் அதற்கான காரணத்தைச் சரியாகக் கண்டறிந்து தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும்.ஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம். எனினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய வீட்டு வைத்தியங்களை மேற்கொள்ளும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.

Thirukkural

ஏன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்? (Why should give breastmilk?)

  • குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  • குழந்தைப் பருவம் அடையும் போது சில நோய்கள் அவனைத் தாக்காமல் இருக்கும்.
  • தாய்க்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
  • தாய்க்கு இருதய நோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்போன்ற நோய் வராமல் தடுக்கப்படும்.
  • தாய் பிரசவத்திற்குப் பின் விரைவாகச் சராசரி வாழ்க்கைக்குத் திரும்ப இயலும்.
  • கர்ப்ப காலத்தில் அதிகரித்திருக்கும் உடல் எடையை விரைவாகக் குறைக்க வழி வகுக்கும்.
  • குழந்தையின் எலும்புகள் பலம் பெற்று ஆரோக்கியமாக வளர உதவும்.
  • குழந்தை நன்றாகத் தூங்க மற்றும் நல்ல வளர்ச்சி பெறத் துணை புரியும்.

தாய்ப்பால் அதிகரிக்க 13 வீட்டுக் குறிப்புகள்  (13 Home Remedies to increase breastmilk)

தாய்மை அடைந்த பெண்கள் சில எளிய வீட்டு வைத்தியத்தால் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து தங்கள் குழந்தைக்குப் போதிய உணவைத் தர முடியும் என்றால் அதை விடச் சிறந்த விசயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. உங்களுக்கு உதவ இங்கே சில எளிய வீட்டுக் குறிப்புகள்.

1.பெருஞ்சீரகம்  (Fennel seeds)

பெருஞ்சீரகம் தாய்ப்பாலை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் அளவை சீர்படுத்த உதவுகிறது.பெருஞ்சீரகம் கொண்டு நீங்கள் தேநீர் கூடத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

2.வெந்தயம்  (Fenugreek seeds)

வெந்தயம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும். இது உடல் சூட்டைத் தனிப்பதோடு ஈஸ்ட்ரோஜன் அளவையும் அதிகப் படுத்தும். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு, அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகி வந்தால் ஓரிரு நாட்களில் நீங்கள் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதை உணரலாம்.

3.இலவங்கப்பட்டை  (Cinnamon)

போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும் பெண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

4.கருப்பட்டி (Palm sugar)

பனைமரங்களிலிருந்து கிடைக்கப் பெறும் கருப்பட்டிகள் அற்புத மருத்துவ குணங்கள் கொண்டன.குறிப்பாகச் சுக்கு மற்றும் மிளகு கலந்த கருப்பட்டியை தினம் சிறிதளவு உடைத்து உண்பதால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.கூடுதலாகக் கருப்பட்டியில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை வியாதி தாய்மார்களைத் திரும்பிக் கூடப் பார்க்காது.

5.சீரகம்  (Cumin seeds)

சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை நீங்கள் தினமும் பருகி வரத் தாய்ப்பாலின் அளவு நிச்சயம் அதிகரிக்கும். மேலும் சீரகத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. அதனால் இரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும். சீரகத்தைச் சுடு நீரில் போட்டுத் தேவைப்பட்டால் தேன் கலந்து தினமும் இரவில் பருகி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்

6.பூண்டு  (Garlic)

பூண்டு உணவில் நாம் அதிகம்  சேர்த்ததுக் கொள்ளும் மருத்துவ குணமுள்ள பொருளாகும். இது தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. தினமும் நீங்கள் செய்யும் சமையலில் பூண்டைச் சற்று அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலே தாய்ப்பால் சுரக்கும் அளவு அதிகரிக்கும்.

7.பப்பாளி (Papaya)

பப்பாளிப் பழங்கள் தாய்ப்பால் சுரப்பிற்குப் பெரிதும் உதவுகின்றன. இதைப் பெண்கள் தினம் மிதமான அளவில் உட்கொள்வதால் பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.

8.முருங்கை (Drumstick)

முருங்கைக் கீரை,காய் மற்றும் பூ என்று அனைத்திலுமே இரும்புச் சத்து நிறைந்துள்ளன.தினம் இதில் ஏதாவது ஒன்றைப் பொரியலாகச் செய்து தாய்மார்கள் உட்கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு சிறப்பான வகையில்

நிச்சயம் அதிகரிக்கும்.

9.வெற்றிலை (Betel)

வெற்றிலையில் பல மகத்துவங்கள் அடங்கி உள்ளன.பிள்ளைப் பேறு பெண்கள் பலர் போதிய தாய்ப்பால் சுரப்பின்றி தவித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் இந்த வெற்றிலை ஒரு வரபிராசாதம் என்றால் மிகையில்லை.வெற்றிலையை நெருப்பில் காட்டி,பின் மார்பில்

வைத்துக் கட்ட தாய்ப்பால் நன்றாகச் சுரக்கத் தொடங்கும்.இன்றளவும் இந்த வீட்டு வைத்தியம் கிரமங்களில் பெரிய அளவில் பின் பற்றப்பட்டு வருகிறது என்பது உண்மை.

10.பாதாம் பருப்பு (Almond)

இரவில் நான்கு ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்து,அடுத்த நாள் பருப்புகளை உட்கொள்ள நல்ல பலன் கிட்டும்.இதைத்  தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளத் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு பெண்களின் உடல் வலிமையும் பெறும்.

11.கீரை,காய்கனி (Green leaves,vegetables and fruits)

தாய்மார்கள் தினம் தங்கள் உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்வதும் அவசியம்.கீரைகளில் பல்வேறு சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதனால் தாய்ப்பால் சுரப்பதன் அளவு மேம்படும்.மேலும் கேரட்,பீன்ஸ், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளையும்,மாதுளை, சாத்துக்குடி,ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகளையும் தினம் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும்.

12.முட்டை,இறைச்சி (Egg,Meat)

சந்தையில் கிடைக்கும் தரமான நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கி,

வேக வைத்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆடு,கோழி, மீன் முதலிய இறைச்சிகளையும் தேவையான அளவு எடுத்துக் கொள்வது நல்லது. இது குழந்தைப் பேறு பெற்ற பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தாய்ப்பால் சுரப்பு பிரச்சனையை நிவர்த்தி செய்யும்.

13.கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் (Fatty foods)

பசும் பால்,நெய்,வெண்ணெய்,தயிர் முதலியவற்றை உணவில் போதிய அளவு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.இது குழந்தைப் பேறு பெற்ற அம்மாக்களின் தாய்ப்பால் சுரப்பு குறையாமல் இருப்பதற்கான போதிய சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான பொருட்களை  நீங்கள் உங்கள் வீட்டிலேயே கிடைக்கப் பெறலாம்.நீங்கள் இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் போதிய அளவில் தாய்ப்பால் சுரப்பதை நீங்கள் உணரலாம்.மேலும் உங்கள் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் கிடைப்பதோடு உங்கள் உடல் ஆரோக்கியம் பல மடங்கு அதிகரிக்கும். நீண்ட காலத்திற்கும் உங்கள் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் கிடைத்த வண்ணம் இருக்கும்.எனவே நீங்கள் இப்போதே எல்லா முயற்சிகளையும் செய்து உங்கள் குழந்தைக்குப் போதிய தாய்ப்பாலைத் தந்து ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வளர்க்கவும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் 6 வீட்டு வைத்தியம்…

tamiltips

0-5 வயது குழந்தைகளின் மூளை வளர்ச்சி எப்படி இருக்கும்? இதெல்லாம் செய்கிறார்களா?

tamiltips

3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி?

tamiltips

11 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

tamiltips

அப்பாக்கள் பின்பற்ற வேண்டிய 6 செயல்கள்… ஆரோக்கிய குழந்தைக்கான மந்திரங்கள்…

tamiltips

கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்?

tamiltips