Tamil Tips
குழந்தை பெண்கள் நலன் பெற்றோர்

சாம்பல், மண், சாக்பீஸ், சிலேட்டு குச்சி சாப்பிட்டால் என்ன ஆகும்? பக்க விளைவுகள் என்ன?

ரினுவின் அம்மா ஆனந்திக்கு ஒரே கவலை! தினம் ரினுவின் டப்பாவில் வைக்கும் சிலேட்டு குச்சிகள் மாயமாகி விடுகின்றன. பள்ளியில் அத்தனை சிலேட்டு குச்சிகளும் தீரவா எழுத வைப்பார்கள்? என்று ஆனந்தியின் மனம் கேட்டது. அடுத்த நாள் இதைப்பற்றி பள்ளியில் விசாரித்தபோதுதான் அந்த விஷயம் ஆனந்திக்குத் தெரிய வந்தது. ‘உங்க பொண்ணு எப்ப பார்த்தாலும் சிலேட் குச்சியை சாப்பிட்டுட்டு இருக்கா! எதாவது டாக்டரைப் பாருங்க..!’ என்று ஆசிரியை குண்டைத் தூக்கிப் போட ஆனந்தி வருத்தமடைந்தாள். ஆனந்திக்கு மட்டுமல்ல இன்று பல அம்மாக்களுக்கு இதே கவலைதான்.

ஏனென்றால் பல குழந்தைகள் யாருக்கும் தெரியாமல் பல்பம், சாக்பீஸ், சிலேட்டு குச்சிகளைச் சாப்பிடுகின்றனர். இவை மட்டுமில்லை சாம்பல், மண், சுண்ணாம்பு, பெயின்ட், விபூதி, பற்பசை, சிமண்ட் என்று இப்படிப் பல பொருட்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் கூட சாப்பிடச் செய்கின்றனர் என்பதுதான் உண்மை.

குழந்தைகள் மட்டுமா இப்படிச் செய்கின்றார்கள்? என்று கேட்டால். அதற்கும் பதில் இல்லை தான்! குழந்தைகள் மட்டுமில்லை சில பெரியவர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் கூட இவற்றை எல்லாம் சாப்பிடுகின்றனர். ஏன் இவர்கள் இப்படிச் சாப்பிடுகிறார்கள் என்று விரிவாகத் தெரிந்து கொள்ளலாமா?

பிக்கா என்னும் பிரச்சனை…..!

பிக்கா(Pica) என்பது ஒரு வகை ஆரோக்கிய குறைபாடு குறிப்பது. இந்த குறைபாடு உள்ளவர்கள் ஊட்டச்சத்து அற்ற பொருட்களை அதிக அளவில் சாப்பிடத் தொடங்குவார்கள். இவர்களிடம் உணவாக எடுத்துக் கொள்ள முடியாத/கூடாத பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்ற தாக்கம் அதிகமாகக் காணப்படும். அதனால் அவர்கள் பல்பம், சாம்பல், மண், சாக்பீஸ், சிலேட்டு குச்சி போன்ற பொருட்களை சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தன்மையை தான் ‘பிக்கா’ என்று அழைக்கின்றார்கள்.

Thirukkural

பல்பம், சாம்பல், மண், சாக்பீஸ், சிலேட்டு குச்சி போன்றவற்றைச் சாப்பிட என்ன காரணம்? என்ன தீர்வு?

இந்தப் பொருட்களைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் தெரியாமல் சாப்பிடுகின்றனர். இவர்கள் இப்படிச் சாப்பிடுவதற்கு ஊட்டச்சத்துக்
குறைபாடிலிருந்து பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றியும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1.இரும்புச் சத்து குறைபாடு

உடலில் இரும்புச்சத்து குறைவாகக் காணப்படும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பல்பம், சிலேட் குச்சிகளைச் சாப்பிடுகின்றனர். நம் உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால், நம் மூளை அதற்குரிய சமிக்கையை அனுப்பும். உடனே நமக்குத் தாகம் எடுக்கும். நாம் தண்ணீர் அருந்து தொடங்குவோம். இல்லையா? அது மாதிரியே தான் உடலில் இரும்புச் சத்து குறைந்து காணப்படும் பொழுது, உடல் இவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதலை எழுப்பத் தொடுங்கும். உடனே இவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் பல்பம், சிலேட் குச்சிகளை கொறிக்கத் தொடங்கி விடுவார்கள்.

குழந்தைகள் தான் விவரம் இல்லாமல் இப்படிச் செய்கின்றார்கள் என்றால் பெரியவர்களுமா இப்படிச் செய்வார்கள் என்று கேட்டால் ,’ஆமாம்!’ என்பதுவே அதற்குப் பதில். இந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் உடல் உந்துதலை அவர்களால் தவிர்க்க/தடுக்க முடியாது. பெண்களுக்கு மாதவிலக்கு மற்றும் பிரசவ காலங்களில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும். இதனால் உடலில் உள்ள இரும்புச் சத்து குறைந்து போய் விடும். அதனால் அவர்கள் இவற்றைச் சாப்பிடுகின்றனர். சில கர்ப்பிணிப் பெண்கள் இரும்புச் சத்து குறைவாக இருக்கும்போது, இவற்றை சாப்பிடுகின்றனர் என்பது வருந்தத்தக்கது.

எப்படிப் பழக்கத்தை விடுவது?

பல்பம் ,சிலேட் குச்சிகள் முதலான பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் ரத்தசோகை பிரச்சனை காணப்படும். இவர்களின் ரத்தத்தைச் சோதனை செய்து பார்த்த ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாகக் காணப்படும். உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இல்லாததானாலேயே இவர்கள் இவற்றையெல்லாம் சாப்பிடுகின்றனர். இந்தப் பழக்கத்தை கைவிட அவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களுக்குப் பல்பம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நின்று விடும்.

எந்த உணவுகளில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது?

போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து நிறைந்து உள்ளன.

2.கால்சியம் சத்து குறைபாடு

கால்சியம் சத்தானது எலும்பு வளர்ச்சி ,பற்கள் வளர்ச்சி, இதயத்துடிப்பைச் சீர்படுத்துதல் ,தசைகளின் சுருங்கும் தன்மை,செல்களின் திரவ சமநிலை முதலான பல்வேறு செயல்பாட்டுக்கு அவசியமானது. மொத்தத்தில் கால்சியம் உடலுக்குத் தேவையான ஒரு மிக மிக முக்கியமான சத்தாகும். இந்த குறிப்பிட்ட சத்துக் குறைபாட்டால் பாதிப்புக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பல்பம் , சிலேட்டு குச்சி ,சாக்பீஸ் ,சுண்ணாம்பு முதலியவற்றைச் சாப்பிடத் தொடங்குகின்றனர்.

எப்படிப் பழக்கத்தை விடுவது?

இந்தப் பழக்கத்தை கைவிட இவர்கள் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் இவர்களுக்குப் பல்பம்
போன்றவற்றை சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் எழவே எழாது.

எந்த உணவுகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது?

  • பால், தயிர், பன்னீர்(பால் பொருட்கள்)
  • டோஃபு(tofu),
  • சோயா பீன்ஸ்,
  • பாதாம் கொட்டைகள்
  • பேரீச்சை பழம்முதலிய உணவுப் பொருட்களில் கால்சியம் சத்து நிறைந்து உள்ளது.இவற்றைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதால் கால்சியம் சத்துக் குறைபாடு நிவர்த்தி அடையும்.

3.விட்டமின் சி சத்துக் குறைபாடு

இந்த விட்டமின் சி சத்தானது திசுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது. மேலும் உடலின் எதிர்ப்புச் சக்திக்கு விட்டமின் சி பெரிதும் துணை புரிகிறது. இந்த விட்டமின் சி சத்துக் குறைபாடு ஏற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பல்பம் ,சிலேட் குச்சி முதலிய பொருட்களைச் சாப்பிடுவார்கள்.

எப்படிப் பழக்கத்தை விடுவது?

விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே இவர்கள் பல்பம் போன்றவற்றை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வார்கள்.

எந்த உணவுகளில் விட்டமின் சி நிறைந்துள்ளன?

  • எலுமிச்சை
  • சாத்துக்குடி
  • கருப்பு திராட்சை
  • நெல்லிக்காய்
  • கேரட்
  • போன்ற உணவுப் பொருட்களில் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

4.தைராய்டு பிரச்சனை

தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கொண்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இவற்றைச் சாப்பிடுவார்கள். இதற்கு உரிய மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

எப்படிப் பழக்கத்தை விடுவது?

தைராய்டு பிரச்சனை நிவர்த்தி அடைய மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளைச் சரியாக சாப்பிட வேண்டும் அதுபோக இதற்கென்று உள்ள யோகாசனங்கள், உடற்பயிற்சிகள் மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்றலாம். இதனால் இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.

5.வயிற்றில் பூச்சி தொல்லை

கொக்கிப் புழு ,கீரைப் புழு மற்றும் வட்டப் புழு முதலானவை குழந்தைகளின் வயிற்றில் குடி கொண்டு ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை இருந்தால் ,இவர்கள் உண்ணும் சாப்பாட்டின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை இந்த பூச்சிகள் எடுத்துக் கொள்ளும். அதனால் இவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு விடுகின்றது. அதன் பின் விளைவாக இவர்கள் பல்பம்,சிலேட் குச்சிகள் போன்ற பொருட்களைச் சாப்பிடுகின்றார்கள்.ஆகக் குழந்தைகள் சிலேட் குச்சிகளைச் சாப்பிட முதல் முக்கிய காரணம் குடலில் பூச்சி இருப்பது தான்.

எப்படிப் பழக்கத்தை விடுவது?

வயிற்றில் பூச்சி தொல்லை இருக்கும் குழந்தைகளுக்கு மருத்துவர் அளிக்கும் உரிய மருந்துகளைக் கொடுத்து பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். வீட்டிலேயே வேப்பங்கொழுந்தை விழுதாக அரைத்து குழந்தைகளுக்கு உண்ணத் தரலாம்.பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள பூச்சிகள் கொல்லப்படும். பூச்சித்தொல்லை நிவர்த்தி ஆனதும் குழந்தைகள் பல்பம் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வார்கள்.

6.மனரீதியான அழுத்தம்

இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகளவு தனிமையில் இருப்பது ,போதிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத சூழல் ,பகிர்வதற்குச் சரியான தோழமை அமையாதது போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகின்றது .இந்த வகை உளவியல் சிக்கல் கூட பல்பம் ,சிலேட் குச்சிகள் போன்ற பொருட்களை சாப்பிடக் காரணியாக அமைந்து விடுகின்றது.

எப்படிப் பழக்கத்தை விடுவது?

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு போதிய நேரம் ஒதுக்குவதால் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும். அதே போலப் பெரியவர்கள் என்றால் அவர்கள் தங்கள் மனதை வேறு ஏதாவது நல்ல விஷயங்களில் திசைதிருப்புவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள இயலும். இந்த முயற்சிகளால் பல்பம் ,சிலேட் குச்சிகள் முதலான பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்த முடியும்.

சிலேட் குச்சிகள், சாக்பீஸ் முதலியவற்றைச் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா?

ஆம். இப்படி பல்பம் ,சிலேட் குச்சிகள், சாக்பீஸ் ,சிமெண்ட் ,விபூதி முதலான பொருட்களைச் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குக் கட்டாயமாகப் பாதிப்பு ஏற்படும்.அவை என்ன என்று பார்க்கலாம்.

  • வாந்தி ஏற்படும்
  • வயிற்று வலி வரக்கூடும்
  • மலச்சிக்கல் ஏற்படும்
  • பல்பம் சிலேட் குச்சிகள் போன்ற பொருட்களில் கலந்து உள்ள தூசி நுரையீரலைப் பாதிக்கும்.
  • நோய்த் தொற்று ஏற்படும்
  • குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும்
  • உடலின் தேவைக்கு அதிகமான அளவு சுண்ணாம்புச் சத்து சேருதல்.
  • ஆக இந்த தொல்லைகள் வராமல் காக்க உடனே உடலில் எந்த ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அந்த பிரச்சனை நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மேலும் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படச் சாத்தியம் உள்ளன. அவை என்ன என்று அறிந்து கொள்ளலாம்.
  • சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிப்படையலாம். சிறுநீரகத்தில் பாதிப்பு என்றால் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படும். இதனால் கை கால் முகம் போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படலாம்.
  • எலும்புகள் பாதிப்பு அடைய நேரலாம். இதனால் எலும்பு பலம் இழந்து லேசான தாக்குதலுக்குக் கூட உடையக் கூடும்.
  • சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவடும்.
  • இரத்த சோகை வரும்.

இந்த பல்பம்,சிலேட் குச்சிகள் முதலான பொருட்களைச் சாப்பிடும் பிரச்சினையைக் கண்டு கொள்ளாவிட்டால் பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்படும் என்று அறிந்திருப்பீர்கள். மேலே சொன்ன உபாதைகள் ஏற்படாமல் பாதுகாக்க ,உடனே உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட ஊட்டச்சத்து என்ன? என்பதை அறிந்து கிடைக்கச் செய்ய வேண்டும். அந்தக் குறிப்பிட்ட சத்து நிறைந்த உணவுகளைச் சரியான அளவு தினம் எடுத்துக் கொள்வதால் பல்பம் சாப்பிடும் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உடலுக்குத் தேவையான சத்து கிடைத்தவுடன் உடல் பல்பம் முதலானவற்றைச் சாப்பிட எழுப்பும் தூண்டுதல்களை நிறுத்திக் கொள்ளும். அதற்குப் பிறகு பல்பம் , சிலேட் குச்சிகள் போன்ற பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம், குழந்தைகளுக்கு வரவே வராது.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைகளைத் தூங்க வைப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்…

tamiltips

1+ வயது குழந்தைகளுக்கான சிறந்த புரத உணவுகள்

tamiltips

குழந்தைகளின் கண் பார்வை வளம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

tamiltips

கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்கத் தவறினால் என்ன நடக்கும்?

tamiltips

வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு…

tamiltips

நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்?

tamiltips