தை 1 என்பது தமிழர்களைப் பொறுத்தவரை புனிதமான நாள். அதேபோல் ஆடி 1, ஐப்பசி 1 ஆகிய நாட்களும் புண்ணிய தினமே தவிர, ஆண்டு தொடங்கும் முதல் தினமாக கருத முடியாது.
தினமும் சூரியன் கிழக்கு திசையில்தான் உதிக்கும் என்றாலும், சித்திரை 1 அன்று மட்டுமே மிகச்சரியான கிழக்கு திசையில் உதிக்கும். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும். அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்.
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று சுற்றிவிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம். அதனால் சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் “சித்திரை 1”. தமிழ் புத்தாண்டு என்று கணக்கிடப்படுகிறது.
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில்தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்…
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில் காலம் தொடங்குகிறது. இந்த வசந்த காலத்தில் மாந்தளிர்களும், வேப்பம் பூக்களும் பூத்துக் குலுங்கும். இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை சொல்லாமல் சொல்லும் தத்துவம் இது.